சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
19 Dec 2012நடப்பு

வேலைத்தகுதி வேட்டை



       வேலையில்லாத் திண்டாட்டம் என்பது ஒரு காலகட்டத்தில் நம்மை அச்சுறுத்தியது. இப்போது வேலைக்கு ஆளில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. அதாவது, வேலைக்குத் தகுதியான ஆட்கள் இல்லாமல், நிறுவனங்களும் , சிறு முதலாளிகளும் தவிக்கிறார்கள்.

      ஒரு பெரிய கணிப்பொறி நிறுவன மேலதிகாரியும், ஒரு அச்சக உரிமையாளரும் ஒரே மாதிரிதான் புலம்புகிறார்கள்.

     “இந்தக்காலத்துப் பசங்களுக்கு, வேலை பாக்கணும்கிற எண்ணமே இல்லை சார்.! அதுவும் நேர்மை, நாணயம், உழைப்புல எல்லாம் நம்பிக்கையே இல்லை. பொறுப்பே இல்லாம ஏதாவது வேலை கிடைக்குமான்னு பாக்குறாங்க! பொறுப்புகளை எப்படி தட்டிக்கழிக்கிறதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க..! நாங்கள்லாம் எங்க மேலதிகாரிக்கும், முதலாளிக்கும் பயந்தோம். இப்போ நாங்கதான் எங்க ஊழியர்களுக்கு பயப்படுறோம்..!

     எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய இப்போது நேரமே இல்லை. நடந்த தவறை உணரும் தருணத்தில் இருக்கிறோம். ஏனெனில் இன்றைய உயர்கல்வி மாணவர்களுக்கு அத்தகைய வேலைத்தகுதி மிகவும் குறைவாக இருக்கிறது என்பதையே அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

     ஆனால், உண்மை அப்பட்டமாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் 17 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்கள். மற்ற பட்டதாரிகளில் 23 சதவீதத்தினர் மட்டும் தகுதியானவர்கள். இதுதான் நிலைமை. ஆனாலும் , தகுதியற்ற 70-80 சதவீதத்தினரை வைத்துத்தான் நிறுவனங்கள் ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

    இந்த அடிப்படையில், சமீபத்தில் ஒரு பொறியியல் கல்லூரியில் வேலைத்தகுதி ஆய்வு ஒன்று நடத்தினோம்.. இளைஞர்களின் கவனிக்கும் திறன், தகவல் தொடர்பு, குழு மேலாண்மை, நேர நிர்வாகம், சூழல் அறிவு , கற்பனைத்திறன் ஆகியவற்றில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று சோதித்ததில்..மிகவும் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் அவர்களது கல்வி அறிவை சோதிக்கவே இல்லை என்பது தனி !

     மொத்தம் 230 மாணவர்கள் பங்கேற்ற ஆய்வில் , நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தகுதியுள்ள மாணவர்கள் 12 பேர்தான்…!! இதுதான் இந்தியா முழுமைக்குமான நிலை…

அவர்களது கவனிக்கும் திறன் மிகவும் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதில் ஒரு கேள்வி :

ரமேஷின் அப்பாவுக்கு மூன்று மகன்கள். அவருக்கு கார்கள் என்றால் மிகவும் பிரியம். ஆகவே முதல் மகனுக்கு மாருதி என்றும் இரண்டாவது மகனுக்கு ஃபியட் என்றும் பெயர் வைத்தார். மூன்றாவது மகனுக்கு என்ன பெயர் வைத்திருப்பார்..?

96% மாணவர்கள் ஏதாவது ஒரு கார் கம்பெனியின் பெயரைத்தான் எழுதியிருந்தார்கள்.

4% பேர் மட்டும்தான்.. ரமேஷ் என்ற சரியான பதிலை எழுதியிருந்தார்கள். பொதுவாக, இப்படித்தான் எல்லாக் கேள்விகளுக்கான பதில்களும் இருந்தன.

புத்திசாலித்தனத்தை விட , பொறியியல் கல்வியின் மதிப்பெண்கள் மேல்தான் அவர்களது கவனம் அதிகமாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் திறமையை நிரூபிக்க, அந்தப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரு ஏரோநாட்டிக்கல் மாணவனிடம் கைரோஸ்கோப் என்றால் என்ன ? அது எப்படி வேலை செய்கிறது என்று கேட்டேன். மூன்றாம் வகுப்பு மாணவனிடம், மோர்ஸ் விதி கேட்டதுபோல் விழிக்கிறான்.

     அவர்களுக்கான களம் தவறாக இருக்கிறது அல்லது சமூகச் சூழல் அவர்களைக் கற்றலிலிருந்து தள்ளி வைக்கிறது. நட்பு, ஊடகம் என்று பல்வேறு பாதிப்புகளும் சாதகமாக இல்லை. எது எப்படியோ, அவர்களை வேலைக்குத் தகுதியில்லாதவர்களாக நாமும் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

     இது  ஒரு சோறுதான்..!! மொத்த இந்தியாவின் நிலையும் இதுதான் என்பது அடுத்த ஆபத்து.. ! ஏனெனில், இந்தியாவில் 2020ம் ஆண்டு, 20 கோடி வேலை வாய்ப்புகள் இருக்கப்போகிறது. அப்போது இதேபோல் இளைஞர்கள் இருந்தால், நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து வேலையாட்களைக் கொண்டுவரப்போவது நிச்சயம்.

     இப்போதே ஒரு கட்டிட நிறுவனம், பிலிப்பைன்ஸிலிருந்து  300 தொழிலாளர்கள், பொறியாளர்களை இறக்குமதி செய்திருக்கிறது.


முன்னால்..

வேலை இல்லாதவந்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைக்காரன்..

ஆனால் இப்போது

வேலை உள்ளவந்தான், வேலை தெரியாதவந்தான் விவகாரமான வேலைக்காரன்.!
    
     கல்லூரிகளும், பெற்றோரும் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது..!!


தனிப் பக்கத்தில் காண →
15 Dec 2012கேட்டால் கிடைக்கும்

நானோ சர்வீஸ்..கேட்டால் கிடைக்கும்



     





     நானோ கார் வாங்கும்போதே, சர்வீஸுக்கான புத்தகமும் கொடுத்தார்கள். அதில் முதல் இலவச சர்வீஸுக்கு – 1500 கிலோமீட்டர் அல்லது மூன்று மாதங்கள் – இதில் எது முதலில் வருகிறதோ, அதில் பயன்படுத்திக்கொள்ளவும் என்று போட்டிருந்தார்கள். நானும் முதல் மூன்றுமாதம் கழித்து பார்த்தால், 750 கிலோமீட்டர்தான் ஓடியிருந்தது. (அந்தக்காலகட்டத்தில் நான் நிறைய வெளி மாநிலங்களில் சுற்றிக்கொண்டிருந்ததால், காரைப் பயன்படுத்த வாய்ப்பே  கிடைக்கவில்லை) இன்னும் கொஞ்சம் ஓட்டிவிட்டுக்கொடுத்தால்தானே வண்டி சர்வீஸ் விட்டதற்கு அர்த்தம் இருக்கும் என்று நானும் பொறுமையாக இருந்தேன்.

அப்புறம் கொஞ்ச நாட்கள் சென்னைக்குள் ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, ஒரு திருப்பதி பயணம், சென்று வந்தால், 1400 என்று காட்டியது. ஓக்கே இந்தவாரம் சென்றுவிடலாம் என்று நினைக்கும்ப்போது ஒரு திடீர் திருச்சி பயணம்… போய்விட்டு வந்து பார்த்தால் 2200 கிலோமீட்டர் ஓடிவிட்டது என்று போட்டிருந்தது. ஆஹா…சர்வீஸ் செய்யவேண்டிய கட்டத்தை கடந்திருக்கிறதே என்று உடனே நானோவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்ட்டருக்கு ஓட்டிச்சென்றேன்..
அங்குதான் ஆரம்பமானது கச்சேரி !

     நல்ல இன்முகத்துடன் வரவேற்று , சர்வீஸ் ஷீட் எல்லாம் போட்டவர்கள். கிலோமீட்டர் ரீடிங்கைப் பார்த்தவுடன்,
ஸாரி ஸார்..! இந்த வண்டிக்கு இலவச சர்வீஸ் செய்யமுடியாது..! எங்க சர்வீஸ் லிமிட்டை விட 700 கிலோமீட்டர் அதிகமா ஓடியிருக்கு.. நீங்க 650 ரூபாய் கட்டவேண்டியிருக்கும் என்றார்கள்.

நானும், அதே இன்முகத்துடன்..

 1400 கிலோமீட்டர் ரீடிங் காட்டும்போது அர்ஜெண்ட்டா திருச்சி போறேன்.. திண்டிவனத்துக்கிட்ட 1500 காட்டுது… அங்கயே அப்படியே நிறுத்திட்டு, சர்வீஸ் செஞ்சுதான் நான் வண்டியை எடுத்திருக்கணுமா என்றேன்.


அது தெரியாது சார்… வேணும்னா டாட்டா மோட்டார்ஸ் காரங்ககிட்ட நேரா பேசிக்குங்க என்றார்.

முதலில் டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து விபரம் சொன்னேன். அந்த இளைஞர் ,
அது ஒண்ணும் பிரச்னையே இல்லை சார்.. முதல் சர்வீஸ் 1500 கிலோமீட்டர்க்குள்ள நீங்க செஞ்சிருக்கணும்.. விட்டுட்டீங்க.. இப்போ, இரண்டாவது இலவச சர்வீஸுக்கான ஸ்லிப்பைக் கொடுத்து, இந்த சர்வீஸை இலவசமா செஞ்சுக்குங்க என்று ஆலோசனை சொன்னார்.

இது பரவாயில்லையே என்று எண்ணிக்கொண்டே, இரண்டாவது இலவச சர்வீஸ் ஸ்லிப்பைப் பார்த்தேன். 10000 கிலோமீட்டர் அல்லது ஒரு ஆண்டு என்று போட்டிருந்தது. அதாவது 2200 கிலோமீட்டர் ஓட்டியிருந்த நான் 10000 கிலோமீட்டர் ஓட்டினால் செய்துகொள்ளவேண்டிய சர்வீஸை பயன்படுத்திக்கொள்ளலாமாம்.

சுர்ரென்று ஏறியது..

சர்வீஸ் ஸ்டேஷனில்..
நீங்க சர்வீஸ் செஞ்சு வச்சாலும், இல்லைன்னாலும் இந்தப் பிரச்னை தீராமல் நான் காரை திரும்ப எடுக்கப்போவதில்லை என்று சொன்னேன்.

அவர்களும்..
நாங்க சர்வீஸ் செஞ்சு வச்சுடுறோம் சார். டாட்டாவிலிருந்து உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்யச்சொல்லி ஒரு மெசேஜ் வந்தா போதும் என்றதுடன், டாட்டாவின் தமிழக டிவிஷன் மேனேஜரின் மெயில் ஐடியும் தந்தார்கள்.

வீட்டுக்கு வந்தேன்.

அவருக்கு ஒரு மெயில் அடித்தேன். அதன் சாராம்சம் இதுதான்..!!

    1500  கிலோமீட்டர் அல்லது 3 மாதம் என்று போட்டிருக்கிறீர்கள். அவசர வேலையாகச் செல்லும்போது மீட்டர் ரீடிங் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. 700 கிலோமீட்டர் வித்தியாசத்தில் சர்வீஸ் செய்ய முடியாது என்று சொல்லும் உங்கள் சட்டம்,  7800 கிலோமீட்டர் வித்தியாசத்தில்  10000 கிலோமீட்டருக்கான இரண்டாவது சர்வீஸை இப்போதே செய்துகொள்ள எப்படி ஒத்துக்கொள்கிறது.?

   சர்வீஸ் செய்யாமல் ஓட்டி, அதனால், வண்டி ஏதேனும் பழுதாகியிருக்கும் பட்சத்தில், நான் முன்னரே சர்வீஸ் செய்யாததால்தான் இது நேரிட்டது என்று ஒத்துக்கொள்வேன். அப்போது நான் இலவச சர்வீஸ் கேட்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், வண்டி நன்றாக இருக்கிறது. நீங்கள் செய்யவேண்டிய சர்வீஸைத்தான் கேட்கிறேன். அதற்கு சட்டதிட்டங்களைக் காரணம் காட்டுவது மிகவும் வருத்தமாக உள்ளது.

நிறுவனம்,  இதயமுள்ள மனிதர்களால் அமையவேண்டுமே அன்றி இற்றுப்போன சட்டங்களால் அல்ல!


  நான் டாட்டா மீது நம்பிக்கையும், பற்றும் வைத்திருப்பதால்தான் நானோ வாகனத்தை வாங்கினேன். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு வாடிக்கையாளரை உங்களை விட்டு விலகவைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


இவ்வாறு அனுப்பிய மெயிலுக்கு பதிலாக, அடுத்த நாளே அந்த மேலாளர் நேரடியாக தொலைபேசினார். முதலில், எதுவும் செய்யமுடியாது என்பதுபோல் ஆரம்பித்தார். மீண்டும் , அவரிடம் சூழலைச் சொன்னேன். அவரும்.. எங்கள் நிறுவன விதிப்படி.. மூன்று மாதத்துக்குள் இந்த சர்வீஸை முடித்திருக்க வேண்டும். இருந்தாலும், உங்கள் மெயிலில் இருந்த நியாயத்தைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்ய அனுமதி அளித்திருக்கிறோம்.  என்று சொன்னார்.

சிறிது நேரத்தில், சர்வீஸ் ஸ்டேஷன் மேலாளர் அழைத்து

” நீங்க நேரடியா கம்பெனியை தொடர்புகொண்டு பிரச்னையை முடிச்சுக்கிட்டீங்க சார்..! ஆனா நிறைய கஸ்டமர் நேரா எங்களைத் திட்டிட்டு , பணத்தையும் கட்டிட்டு போறாங்க சார்.. மற்றபடி, உங்கள் கார் ரெடி சார்! எடுத்துச் செல்லுங்கள்!!! என்றார்.

சென்றேன் . எடுத்தேன். வந்தேன்..!!

அதனால்தான் அழுத்திச் சொல்கிறோம். கேட்டால் கிடைக்கும்!



தனிப் பக்கத்தில் காண →
07 Dec 2012மயன்

மய மாயம்



        
       இதோ ஆரம்பித்துவிட்டது. டிசம்பர் 2012. ! மயன் காலண்டர் பற்றி பல்வேறு ஊடகங்கள் லேசாக பீதியைக்கிளப்ப ஆரம்பித்தன. ஒரு படம் வந்து , கிளப்பிய பீதியை நன்றாகப் பரவ வைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம்  21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்று பல்வேறு தரப்பினர் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் படிக்கும் செய்திகள், சந்திக்கும் மனிதர்களின் எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது.
       அப்பாடி! அழியட்டும்.. இவனுங்க செய்யும் அட்டகாசத்துக்கு அதான் சரி!

இவ்வளவு கண்டுபிடிச்சு என்ன பிரயோசனம் பாருங்க! அழிவைத் தடுக்க ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கலையே?

நான் அழியறதைப் பத்திக்கூட கவலையில்லை… அந்தத்தேதிக்குப் பிறக்கும் குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு?

எல்லாமே தண்ணீர் மயமாயிடும் இல்ல?

இருக்குற கொஞ்ச நாளிலாவது, நான் நினைச்சதை செஞ்சு பாக்கப்போறேன்.

இயற்கை ஏன் அழிக்கணும். மனிதன் செய்யும் அநியாயத்துக்கு.. அவனே அவனை அழிச்சுக்குவான்.

எத்தனை பாவம் பண்ணியாச்சு..!! அதுக்கெல்லாம் பரிகாரம் தேடணும்!

மனித இனம் செஞ்ச அட்டூழியத்துக்கு…பாவம்.. தப்பே செய்யாத விலங்குகளும் அழியறதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு!

தலைவர் சொன்னது சரியா இருக்கே! ‘சாகுற நாள் தெரிஞ்சா வாழும் நாள் நரகமாயிடும்’ போல!

அதெல்லாம் சும்மா..! இன்னும் 4 லட்சம் வருடம் உலகம் இருக்கும்.

இயற்கை எவ்வளவு நாள்தாங்க பொறுமையா இருக்கும்?

பாவிகள் பள்ளிக்கூடம் நடத்துவார்கள்ன்னு போட்டிருக்காம். அது இப்ப நடந்துக்கிட்டுத்தானே இருக்கு! அப்ப உலகம் அழியறது உறுதிதான்.!

மயன் கேலண்டர்ல உள்ள மாதிரிதான் இன்னிவரைக்கும் நடந்திருக்காமே? அப்ப இதுவும் கன்ஃபர்ம்தான் போல!

     மொத்தத்தில், எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நம்பிக்கையோ, பயமோ எட்டிப்பார்த்திருக்கிறது. ஒருசில ஐரோப்பிய , தென் அமெரிக்க கிராமங்களில் தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டதாக முழுமையாக நம்பி, பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தாங்கள் செய்யவிரும்பியதைச் செய்திருக்கிறார்கள். மேலும், தன்னால் வருத்தப்பட்டவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், தாங்கள் பார்க்க விரும்பிய இடங்களைச் சென்று பார்த்திருக்கிறார்கள். பொதுவாக, அழிவு என்று ஏற்படுவதற்குமுன் தாங்கள் மிகவும் சுத்தமான, ஆன்மாவுக்கு நேர்மையான ஜீவன்களாக வாழ எண்ணியிருக்கிறார்கள். அப்படியானால்..அதற்கு முன்னால்?

     இந்தக்கேள்விதான்…மயன் கேலண்டர் என்ற நம்பிக்கை செய்த மாயம். நம் வாழ்வுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனே நம் எண்ணங்களில் நற்குணம் அதிகமாகப் புகுந்துகொள்கிறது. ஆனால், சாதாரணமாக, தீயகுணங்களுக்கு கொஞ்சம் அதிக இடம் கொடுக்கிறோமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. மரணம் என்ற ஒன்று யாரும் சந்திக்காமலே இருக்கப்போவதில்லை.

   ’நமக்குச் சாவே வராது. சாவவே மாட்டோங்கிற நெனப்புலதானே அத்தனை அநியாயமும் பண்ணுறானுங்க!’ என்று நெல்லைக் கண்ணன் அய்யா சொல்லுவார்.

உண்மைதான்…!! நாம் ஏதோவொரு காரணத்துக்காக சக உறவுகள், நண்பர்கள், ஊழியர்கள் , முகம் தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் ஏதோவொரு நேரத்தில் சிக்கலை வரவழைத்துக்கொள்கிறோம். அது யாருடைய தவறாக இருந்தாலும் சரி..!! அதனை மறப்பதும் இல்லை..மன்னிப்பதும் இல்லை. இரண்டும் இருந்துவிட்டால்… சாதாரண மனிதர்கள் , அசாதாரணர்களாக மாறும் அதிசயம் நிகழ்ந்துவிடும். ஹஜ் பயணத்தை மிகவும் அசாதாரண நிகழ்வாக நினைப்பதாலும்.. அது கடைசி வாய்ப்பாக நினைப்பதாலும்தான், ஹஜ் செல்வதற்குமுன், அனைவரிடமும் அன்பையும், மன்னிப்பையும் பரிமாறச் சொல்லியிருக்கிறது இஸ்லாம்.  அதனை அனைவருமே பின்பற்றினால், பிரச்னைகளுக்கு வாய்ப்பே இல்லை. ஆனால், நமக்கு வாழ்வின் நீளத்தின்மேல் உள்ள நம்பிக்கைதான், அனைத்துத் தவறுகளையும் செய்ய வைக்கிறது.

அதேபோல், சாதிக்கவேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள்.. அடுத்த ஆண்டு அதைச் செய்யவேண்டும்.. இதைச்செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டு comfort zone எனப்படும் சவுகரிய வட்டத்துக்குள்ளிருந்து, வெளியிலேயே வராமல் இருந்துவிட்டு, சாதிக்கும் வாய்ப்பையே இழந்துவிட்டுப் போகிறார்கள். அடுத்த பிறவியில் சாதித்துக்கொள்ளலாம் என்று நினைக்கமுடியாது என்று தெரிந்தும்.. நீண்ட நாட்கள் நாம் இருப்போம் என்ற நம்பிக்கைதான் சாதனைகளையும் தள்ளிப்போட வைக்கிறது.

இன்று அழியாவிட்டாலும், என்றாவது ஒருநாள் உலகம் அழியப்போகிறது என்ற எண்ணம் ஒருபுறம் இருக்கட்டும்.! நாம் வாழும்வரைதான் நமக்கு இந்த பூமி என்ற கோளத்தின் இருப்பு பற்றிய ஆர்வம் இருக்கும் என்ற உண்மையை நாம் முதலில் உணரவேண்டும். நான் பிறந்தேன். உலகம் என்ற ஒன்றைப்பற்றிய அறிவு வந்தது. நான் இறந்தபின் இந்த உலகம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன? ஆக, என் வாழ்வுதான் என் உலகம்..!! அதனை நான் எப்படி அமைத்துக்கொள்ளப்போகிறேன்.? எப்படி அழித்துக்கொள்ளப்போகிறேன் என்று எண்ணினால் போதும்!

     என்னிடம் ஒரு நண்பர் வெகு ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். மனித இனம்தாங்க இந்த உலக அழிவுக்குக்காரணம்.. இயற்கையை என்னமா நாசம் பண்ணிட்டானுங்க! இந்த ப்ளாஸ்டிக் வேண்டாம்னு எத்தனை வருஷமா கத்திக்கிட்டிருக்கோம். விடுறானுங்களா? மயன் கேலண்டராவது ஒண்ணாவது..!! மனுசந்தான் காரணம்.. பிளாஸ்டிக்தான் காரணம்..!!  நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது.. அவர் கையில் இருந்தது ஒரு டிஸ்போஸபிள் டீ கப் !

     இந்த உலகமே இப்படித்தான் பாஸ்.. அது உருவாகும்..அழிச்சுக்கும்..!! அதுக்கும் ஒரு ரிலாக்ஸேஷன் வேணுமா இல்லையா?  கடவுள் என்பவர் கணிப்பொறி விற்பன்னராக இருந்தால்… இப்படித்தான் சிந்தித்திருப்பார்..!!

     '' சிஸ்டம் ரொம்ப ஹேங் ஆகுது..டிசம்பர் 21ம் தேதி ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் அடிக்கணும்.. "



தனிப் பக்கத்தில் காண →
21 Nov 2012ஓமப்பொடி

ஓமப்பொடி # 7





கேட்டால் கிடைக்கும் என்று பல நண்பர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இசையமைப்பாளர் P.B. பாலாஜியின் வீட்டு வாசலில் தேங்கிக் கிடந்த குப்பையை எடுக்க, மேயருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றார். செய்துகொடுத்தேன். அவரே அனுப்பி, உடனே காரியமும் நடந்திருக்கிறது. மேலும் அதிகாரிகளும் வீட்டுக்கே வந்து பதில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இதில் நண்பர் கேபிள் சங்கரும் அவருக்கு ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். கேட்டால் கிடைக்கும் என்று பிரபலங்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.
  -----------------------------------------------------------------------------------------------------------------------------


நிகழ்வுகள் நம்மை செதுக்குகின்றன என நம்புகிறேன். சமீபத்திய வெவ்வேறு நிகழ்வுகள், என்னை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. துக்கப்படுத்தியிருக்கிறது. ஆற்றுப்படுத்தியிருக்கிறது. அவமானப்பட வைத்திருக்கிறது. ஆவேசப்படவைத்திருக்கிறது. ஆனால், அவை மொத்தமும் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை! (மொத்தத்தில் நிறைய ‘படுத்தியிருக்கிறது! J )

ஆனால், மகிழ்ச்சிப்படுத்திய தருணங்கள்தான், உள்ளத்தை குப்பைத் தொட்டியாக்காமல் பாதுகாக்கிறது.

ஆரோகணம் – திரைப்பட விரும்பிகளால் வெகுவாக இரசிக்கப்பட்டு, ஆனந்தவிகடனில் 44 மதிப்பெண்கள் வாங்கியது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வு..!! ஏனெனில் ஜூலை 2011ல் ஒரு மாலை நேரத்தில் ஹோட்டல் ரெஸிடென்ஸி டவர்ஸின் உணவகத்தில் அமர்ந்து லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் கதை சொன்னார். அன்றிலிருந்து, அந்தக் கதையில் பயணிக்கிறேன். பை-போலார் எனப்படும் மனச்சலனம் பற்றி விவாதிக்கிறோம். விறுவிறுவென்று வேலைகள் நடக்கின்றன. கதை விவாதம் – நடிகர்கள் தேர்வு- தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு என்று அனைத்தும் நிகழ்கிறது. படப்பிடிப்பு அதிவேகமாக நிறைவடைகிறது . அப்போதுதான், அதே விஷயத்தை மையமாக வைத்து, 3 என்ற படம் வெளிவருகிறது. ஆனால், அதில் முழுமையாக எதிர்மாறாக காட்டியிருக்கிறார்கள் என்றதும் கொஞ்சம் ஆசுவாசமாகிறது. மீண்டும் பல்வேறு பட்டை தீட்டல்களுக்குப்பிறகு 100 நிமிடப்படமாக ‘ஆரோகணம்’ வெளிவருகிறது. அதில் கதை நாயகியாக நடித்திருந்த விஜி அவர்களின் வாழ்நாள் சாதனையாக இதனைக் கொள்ளலாம்.

அதில், ஒரு சிறு கதாபாத்திரமாக என்னையும் காட்டியிருக்கிறார்கள். அந்த அன்புக்காக, இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


இந்தப்பாடல் எல்லோராலும் இரசிக்கப்பட்டது. இந்தப்பாடலில் நானும் காட்டப்பட்டிருக்கிறேன். இசையமைப்பாளர் கே வுக்கும், பாடலைப் பாடிய ‘ஷாரதா இராமகிருஷ்ணனுக்கும் பாராட்டுக்கள். (ஷாரதா, இயக்குநரின் மகள்) மேலும், ஆரோகணத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்ற வாரம் நடந்தது. அதிலும் கலந்துகொண்டது மிகவும் மகிழ்வாக இருந்தது.


மக்கள் தொலைக்காட்சியில், ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10:30க்கு ’புதிய இலக்கு’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இணையத்தில் எனது நம்பிக்கை உரைகளைக் கேட்டுவிட்டு, நிகழ்ச்சியின் இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னை அணுகினார்கள். அதன்படி, அந்த நிகழ்ச்சியில், நம்பிக்கைச் சொல் என்ற தலைப்பில், நம்பிக்கை விஷயங்களும், ‘முத்தாய்ப்பாக’ என்ற தலைப்பில் வேலை பற்றிய சில புள்ளிவிபரத் தகவல்களும் பகிர்ந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சி, வேலை தேடுபவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாகவும், நிறுவனங்கள் புதிய ஊழியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று விளக்கும் களமாகவும் இருக்கிறது.
அதிலிருந்து மாதிரிப் பகுதி!!




 ஜெயா குழும டிவியில் எனது நெறியாள்கையில் ஒரு நிகழ்ச்சி வர இருக்கிறது. அது இப்போதைக்கு புதிராகவே இருக்கட்டும். வரும்போது பார்க்கலாம்.



பால் தாக்கரே இறப்புக்கு – கதவடைப்பு பற்றி இணையத்தில் கருத்துச் சொன்ன பெண்களை கைது செய்து ஜாமீனில் விட்டிருக்கிறது போலீஸ். ஆனால், அவர்களைக் கைது செய்ததே தவறு என்று எதிர்ப்புக்குரல் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. இங்கும் பல சம்பவங்கள் அதுபோல நடக்கின்றன. இதுபோல எது எழுதினாலும் வம்பு வரும் என்றால், ஒன்று மக்கள் இணையத்தில் எழுத அஞ்சுவார்கள். அல்லது -இணைய எழுத்தாளர்கள் ஒன்றிணைந்தால் - கட்டாயம் இணைய கருத்து முடக்கத்துக்கெதிரான புரட்சி வெடிக்கும்..! எனக்கென்னமோ இரண்டாவது நடக்குமோ என்று தோன்றுகிறது.


தனிப் பக்கத்தில் காண →
15 Nov 2012சினிமா

துப்பாக்கி








       தீபாவளி வெளியீடு என்றவுடன், கிராமத்தில்தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்தாயிற்று..!! அங்குதான், இரசிகர்களின் உண்மையான உணர்வுகள் தெரியவரும்.

     அதேபோல் தியேட்டருக்குள் நுழையும்போதே ஆர்ப்பாட்டம்..!! விஜயின் அறிமுகக்காட்சியில் ஐந்து நிமிடங்கள் அனைத்து இரசிகர்களும் ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தார்கள்.
    
    முழுக்க முழுக்க முருகதாஸ் படமாக எடுக்க , விஜய் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரிய ஆரம்பித்தது. மிகவும் அடக்கி வாசித்து, தனக்கான இடத்தை மிகவும் அழுத்த்தமாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

       சமூகத்தில் சாதாரண மனிதர்களாக இருப்பவர்கள், தீவிரவாதிகளின் மூளைச் சலவையால், மனம் மாறி, அவர்கள் சொல்வதைச் செய்யும்படி தயார் செய்யப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் சமூகத்தில், அவரவர் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தலைவனிடமிருந்து கட்டளை வரும்போது (குண்டு வைப்பது) அதை நிறைவேற்றுகிறார்கள். இவர்களுக்கு SLEEPER CELLS என்று பெயர்.!!

   அந்தவகை மனிதர்களின் வேரைக் கண்டுபிடித்து, அதனை அழிப்பதுதான் படத்தின் மையக் கரு! அதாவது, யார் கட்டளை இடுகிறார்களோ அவர்களை அழித்துவிட்டால், தனக்கான கட்டளைக்காக காத்திருந்தே, silent cell கள், தங்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போய்விடுவார்கள் என்பதுதான் நோக்கம்..!!

    அப்படி ஒரு Sleeper Cell மனிதன் தன் வேலையை செய்துவிட்டுச் செல்லும்போது, எதேச்சையாக, இராணுவத்திலிருந்து, மும்பைக்கு விடுமுறைக்கு வந்த விஜய், தன் போலீஸ் நண்பன் சத்யனுடன் பஸ்ஸில் செல்ல நேர்கிறது. அங்கு ஒருவரது பர்ஸ் அடிக்கப்பட, அனைவரையும் சோதிக்க விழைகிறார்கள். இதில் அச்சப்பட்ட அந்த Sleeper Cell, ஓட ஆரம்பிக்க, அவனை விஜய் விரட்டிப்பிடிக்க,  அப்போது பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. அதற்குள் அவனும் தப்ப முயற்சித்து ஓட, விஜய் துரத்த ஆரம்பிக்கிறார். படம் தடதடத்து வேகமெடுக்கும் இடம் இதுதான்..!!

     அவனைப் பிடித்து அவர் போலீஸில் கொடுக்க, அவன் அடுத்த நாளே தப்பிவிக்கப் படுகிறான். அதனை சத்யன் விஜயிடம் மிகவும் பதட்டத்துடன் சொல்ல, மிகவும் நிதானமாக விஜய், தனது வீட்டின் மாடியறைக்கு வருகிறார். அங்கு அந்த ஆள் அவராலேயே கட்டிவைக்கப்பட்டிருக்கிறான்.
அங்கிருந்து, பலப்பல சாகசங்கள்.. அத்தனையும் வீரமும், விவேகமும் சரிசமமாய்க் கலந்தவை..!! தனது ஆழ்ந்த புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு கண்ணியாகக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கட்டளையிடும் தலைவனை வெளிவர வைத்து, பல்வேறு பூனை, எலி விளையாட்டுகளுக்குப் பிறகு, ‘சஸ்பென்ஸுலேயே சாவுடா!’ என்று சொல்லி அவனைச் சுட்டுத்தள்ளுகிறார்.

     படம் முழுக்க, சாகசங்கள், அதுவும் இயக்குநர் முருகதாஸுக்கு மூளையில்தான் உடலே செய்திருக்கிறார்கள் என்பதைப்போல் விளையாடியிருக்கிறார் மனிதர்..!! (நண்பர் என்பதையும் மீறி உண்மையிலேயே நிறைய நுணுக்கமாகச் சிந்தித்திருப்பதால், இந்தப் பாராட்டு!)

     அதுவும் 12 பேர் பிரித்து ஒவ்வொருவராகப் பின் தொடரும் இடங்கள், சாத்தியங்களை மீறி அற்புதமான திரைக்கதையால் நம்பவைத்துவிடுகிறது. அதுவும் அந்த ஒரே வினாடியில் அனைவரும் வெவ்வேறு இடங்களில் சுடும்போது, ஒரு ’வாவ்’ நம் வாய் வழியே இயல்பாக வந்துசெல்கிறது. அந்த நேரத்தில், துப்பாக்கிச் சத்தத்தை விட விசில் சத்தம் அதிகம் கேட்டது.

  சந்தோஷ் சிவன் இந்தப்படத்தின் மூன்றாவது ஹீரோ எனும் அளவுக்கு கலக்கியிருக்கிறார். சேஸிங் காட்சிகளாகட்டும், பாடல்களாகட்டும், விஜயை சமீபகாலத்தில் இவ்வளவு அழகாக யாரும் காட்டவில்லை என்று நினைக்கிறேன். சூரியனுக்கு எதற்கு டார்ச்…?

  விஜய்…! அந்த அழுத்தமும், லேசான குறும்பும் இப்போதுதான் சரியான கலவையாய் வெளிவந்திருக்கிறது. தன் தங்கையிடம் மிகச்சாதாரணமாய் ‘உயிர் போயிருக்கும்’ என்று சொல்லும்போது – இராணுவ வீரனின் உயிர் பற்றிய எண்ணம் அப்படியே பார்க்கமுடிகிறது. அவரது அழுத்தமான பார்வையையும், இரண்டு வார்த்தை பதில்களையும் பார்த்து, இரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் கும்மாளமிடுகிறார்கள். அதுவும் இடைவேளையில் ‘ஐ அம் வெய்ட்டிங்’ என்று சொன்னதற்கு.. இரண்டு நிமிடம் தொடர்ந்து கூச்சலும், விசிலும் பறந்தது. படம் முடியும்போது, ‘ இதுமாதிரியே நடி தலைவா! ’ என்று உளம் நிறைந்து கோரிக்கை வைக்கிறார்கள். 

      கண்ணுக்கு மை அழகு.! மை என்றால் காஜல்..!!  கண்ணுக்கு அழகாக வருகிறார். பேசுகிறார். ஆடுகிறார். நிறைய காஃபி சாப்பிடுகிறார். ஆனால், அவர்தான் கதையின் முக்கிய ஓட்டத்தை மாற்றுகிறார் என்பது சிறப்பு..!! அவர் சத்யனின் பைக் சாவியை எடுத்துச் செல்லாவிட்டால், விஜய் பஸ்ஸில் செல்லவேண்டிய அவசியமே இருந்திருக்காது.




ஏ.ஆர்.முருகதாஸ்… ரமணாவிலிருந்து எனது உள்ளம் கவர்ந்தவர்..விஜயகாந்துக்கு ஒரு வாழ்நாள் சாதனைப் படத்தை அளித்தவர். விஜய்க்கும் அது பொருந்தும்படிச் செய்திருக்கிறார். படம் பார்த்து முடித்தவுடன் குறுஞ்செய்தியில் வாழ்த்திவிட்டேன். அன்பான நண்பர்!, பணிவான மனிதர்..!  நிதானமாக அடி எடுத்துவைக்கிறார். அடுத்த பிரம்மாண்டத்துக்குத் தகுதியானவர் என்று நிரூபித்திருக்கிறார்.

    துப்பாக்கி என்ற பெயர் மட்டுமல்ல..!! சிறப்பான திரைக்கதை, வேகம் நிறை காட்சிகள் மூலம் தீபாவளி ரிலீஸுக்குத் தகுதியான படமாய் அமைந்துவிட்டது.

தனிப் பக்கத்தில் காண →