சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
31 Jan 2013அனுபவம்

அசைபோடுதல் ஆனந்தம்










பழமையை அசைபோடும் சுகம் தனிதான். அதுதான் நம்மை எப்போதும் உயிர்ப்புடனும் , ஒருவித மகிழ்ச்சியை ஊற்றெடுக்க வைத்துக்கொண்டும் இருக்கிறது என்று நான் உளமாற நம்புகிறேன்.

வட்டியும் முதலும் என்று தலைப்பிட்டு , ஆனந்தவிகடனில், ராஜுமுருகன் எழுதிவரும் கட்டுரைகள் பலரது உள்ளம் கவர்ந்தவை. அவை அனைத்துமே அவரது அழகான அசைபோடல்கள். அந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது, அதுபோன்று நமக்கும் நடந்த நிகழ்வுகளை உள்ளம் கவனித்துப்பார்க்கிறது. அதனால்தான் நம்மைப்போன்றே இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று சிலாகித்து அந்தக் கட்டுரைகளை விரும்பிப்படித்துக்கொண்டிருக்கிறோம்.

அதில் அவர் எழுதும் பாணியும் மிகவும் அழகாகவும், இயல்பாகவும் இருப்பதால் எல்லோருக்கும் அவரையும் சேர்த்துப் பிடிக்க ஆரம்பித்துவிடுவதில் ஐயம் இல்லை. அதனை மீறி நான் உட்பட பலர் அவரிடம் அன்பு செலுத்தத் தொடங்கிவிடுகிறோம். ஏனெனில் தன் நிறை குறைகளை வெளிப்படையாகக் கூறும் குணம் அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. அத்தகைய மனிதர்களை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுதான் அன்பு என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்வது இயல்பாகிவிடுகிறது.

அசைபோடல் ஒரு அற்புதமான விஷயம். நாம் பார்த்து, கவனித்து, கேட்டு, உணர்ந்து, பழகி வந்த பல்வேறு அனுபவங்கள் ஒவ்வொரு விதமான அசைபோடலுக்குள்ளும் இருத்திப் பார்க்கும்போது ஒரு இனம்புரியாத நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

இதுபோன்று யாரெல்லாம் அசைபோடுவதில் ஆர்வம் காட்டி எழுதுகிறார்களோ அவர்களெல்லாம் மிகவும் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்களாக இருந்திருக்கிறார்கள். டால்ஸ்டாய் தொடங்கி, நமது எஸ்.ரா வரையில் அவர்களது பயணங்களும், பாதைகளும் தந்த அனுபவங்கள் நம்மிடையே எழுத்துக்களாக வந்து பல்வேறு பாராட்டுக்களையும் அவர்களிடையே நமக்கிருக்கும் நெருக்கத்தையும் உணரவைத்திருக்கின்றன. ‘துணையெழுத்து’ தொகுப்பில் ஒரு சாவிக்கூடை பற்றி வரும். அப்போது அனிச்சையாக நம் வாழ்வில் நாம் அதைப் பார்த்திருக்கிறோமா என்றும் அது தொடர்பான நிகழ்வுகளிலும் என் மனம் லயிக்க ஆரம்பித்துவிட்டது.

நான் கணிப்பொறி நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தபோது, கானாடுகாத்தானில் ஒரு பெரியவர் தனது வீட்டில் கணிப்பொறி பழுது நீக்க அழைத்திருந்தார். அவர்கள் வீட்டின் வாசலிலிருந்து கொல்லைப்பக்கத்தை அடைய ஆட்டோ வைத்துத்தான் செல்லவேண்டும் என்ற அளவுக்கு நீளம்..! ஒருமுறை நான் சென்றபோது எஸ்.ரா கூறியிருந்ததைப் போன்று ஒரு கூடை நிறைய சாவிகளை வைத்துக்கொண்டு ஏதோ தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு வீட்டுக்கு இவ்வளவு சாவிகள் இருக்கமுடியும் என்ற ஆச்சரியம் எனக்கு வந்தது.

அப்போது அவர் அதன் பின்னணியை விரிவாக்கினார். அவரது மகன் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்காக ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்கப்போனபோது, பிணையாக அவர்களது வீட்டுப்பத்திரத்தை கேட்டிருக்கிறார்கள். அது தொடர்பாக விட்டுப்போன சில ஆவணங்களைத் தேட சில அறைகளைத் திறந்து பார்க்கவேண்டியிருப்பதால், அந்தச் சாவிக்கூடையை நோண்டிக்கொண்டிருந்தார்.

அடுத்தமுறை நான் சென்றபோது, அவராகவே ஆரம்பித்தார்.

தம்பீ! ஒரு பெரிய விஷயம் நடந்துச்சே! தெரியுமா?

என்ன சார்? சொல்லுங்க!

அன்னிக்கு அந்த சாவிக்கூடையை நோண்டிக்கிட்டிருந்தேன்ல, அப்போ அதன் அடியில மூணு மோதிரம் கெடந்துச்சு.. ! எல்லாமே தங்க மோதிரம்..! உடனே அதை நல்லா சுத்தப்படுத்தி, நான், என் மனைவி, என் மகன் ஆளுக்கு ஒண்ணா போட்டுக்கிட்டோம். 
நாங்க தேடின பத்திர பேப்பரும் கிடைச்சுருச்சு..! அதை எடுத்துக்கிட்டு அந்த ஃபைனான்ஸியர்க்கிட்ட என் பையன் போக, அவர் இவன் கையில் இருந்த மோதிரத்தைப் பார்த்து , கழட்டித் தரச்சொல்லிக் கேட்டிருக்கார். என் மகனும் கொடுக்க, அதை கூர்ந்து பார்த்துட்டு,
இந்த ஒரு மோதிரம் போதும். ஏன்னா, இதுல ஒரிஜினல் கனக புஷ்பராகம் பதிச்சிருக்கு!  ஒரு கோடி மதிப்பிருக்கும். இது உங்ககிட்ட இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, பத்திரமே கேட்டிருக்கமாட்டேனே?  
என்று சொல்லி உடனடியாக 50 லட்சத்துக்கு செக் குடுத்துட்டாரு! இதுமாதிரி எத்தனை புதையலை எங்க பாட்டன்,பூட்டன் இந்தவீட்டில் வச்சிட்டுப் போயிருக்கானோ?  என்று சந்தோஷித்தார்.
சாவிக்கூடை பற்றிப் படித்தபோது இந்த சம்பவம்தான் என் நினைவுக்கு வந்தது. படிக்கும் விஷயத்துடன் தான் சந்தித்த, அனுபவித்த சம்பவங்களை பொருத்திப்பார்க்கும் மனோபாவம்தான் அசைபோடல்களை உச்சம் தொட வைக்கிறது.

எனக்குத் தெரிந்து பல அசைபோடும் மனிதர்களை நானே வலியச் சென்று சந்திப்பேன். அவர்களது அனுபவங்களை அவர்கள் சிலாகித்துச் சொல்லும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்தை உள்ளக் கேமராவில் பதிவு செய்வதற்காகவே நிறைய முறை சென்றிருக்கிறேன். மேலும் பல்வேறு சிறப்பான அனுபவங்கள் நாம் புத்தகங்களில் கூடப் படிக்க இயலாது.

எழுத்தாளர் திரு.தருமராஜன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலைச் சொன்னார். அவரைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், டால்ஸ்டாய் மேல் பற்றுக்கொண்டு ரஷ்யாவிற்கே சென்று அங்கு பல ஆண்டுகள் தங்கி , வேலை பார்த்து வந்தவர். டால்ஸ்டாயின் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்ததில் இவருக்கு முதல் மற்றும் முக்கியப் பங்கு உண்டு. அவரது அனுபவத்தில் ரயில்கள் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ரஷ்யாவின் இருப்புப் பாதை மட்டும் கொஞ்சம் அகலம் அதிகம் என்றும், அதனால், வேறு எந்த நாட்டிலிருந்தும் ரஷ்யாவுக்குள் ஒரே ரயிலில் போகமுடியாது. இது அவர்களது பாதுகாப்பு உணர்வைக் காட்டுவதாக உள்ளது என்றார். அது எனக்கு மிகவும் புதிய தகவல். டால்ஸ்டாய் அமர்ந்து இறந்த இடத்தில் அதிக நேரம் சென்று இருந்துவிட்டு வந்ததாக அவர் சொன்னபோது அவர் கண்ணில் கண்ட உணர்வை என்னால் விவரிக்கவே இயலாது.

பல்வேறு நபர்கள் ‘நாங்கள்லாம் அந்தக்காலத்துல’ என்று துவங்கும்போது பலர் பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடிவிடுவார்கள். ஆனால், உண்மையில் பல்வேறு அனுபவங்கள் அசைபோடுதலாக வரும்போது அது தரும் ஆனந்தம் அலாதியானதுதான். ஆட்டோகிராப் படத்தை நாம் கொண்டாடியதற்குக் காரணம் அதன் அசைபோடலில் நம்மையும் இணைத்துப் பார்த்ததுதானே?

இதைப்படித்துவிட்டு என் தோழி ஒருத்தி கட்டாயம் ஃபோன் செய்வாள்!

அசைபோடுதல் ஆனந்தம்கிற…? ஆனா நான் அசைபோட்டா மட்டும் திட்டுற?

அவளுக்கு இப்போதே பதிலிடுகிறேன்.

லூஸு! நான் சொல்றது மனசு செய்யுறது…நீ சொல்றது மாடு செய்யுறது!



தனிப் பக்கத்தில் காண →
21 Jan 2013அனுபவம்

புத்தகக் காட்சி - தரிசனங்கள்



பொங்கலுக்கு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டதால், புத்தகக் காட்சியின் முதல் நாளிலிருந்து செல்ல முடியவில்லை. ஒய் எம் சி ஏ வில் நுழையும்போதே, பார்க்கிங்குக்கும், கண்காட்சிக்கும் இருக்கும் தூரம் கொஞ்சம் அதிகம்தான் என்று தெரிந்தது. எப்பொழுதும்போல், தனியாக ஒரு முறை சுற்றிவர ஆரம்பித்தேன்.

இந்த முறை குழந்தைகளுக்கான புத்தகங்களும், கற்பிக்கும் கருவிகளும் அதிகம் பங்கெடுத்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற GROLIER நிறுவனம் குழந்தைகளின் அறிவூக்கம் செய்யும் பேக்கேஜைப் பற்றி பொறுமையாக விளக்குகிறார்கள். உண்மையிலேயே பயனுள்ள கல்விப் பொருட்கள்தான். ஆனால் விலை மிகமிக அதிகம். 9 வயதுச் சிறுவனுக்கான கற்றல் கருவிகள் அடங்கிய  செட் 36000 ரூபாய் சொல்கிறார்கள். எங்க ஊர்ல ஒரு வருஷ ஸ்கூல் ஃபீஸே அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு வந்தேன். (சதி லீலாவதியில், கோவை சரளா ஹேண்ட் பேக் வாங்கும் காட்சி நினைவுக்கு வந்தது. ஏனுங்…இந்த பேக்கு  மாட்டுத்தோல்லதானே பண்ணது.. ஆமா!   எம்புட்டு? ஜஸ்ட் ..4000 .. ….எங்கூர்ல மாடே அவ்வளவுதாங்க!)

  சில பதிப்பகங்களின் இடங்களையும், வாங்கவேண்டிய புத்தகங்களையும் குறிப்பெடுத்துக்கொண்டபின், மதி நிலையத்தின் ஸ்டால் எண்: 34க்கு வந்து, ‘தலைவா வா!’ புத்தகத்தின் வரவேற்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ‘இப்பதான் சார் ஒருத்தர் நண்பர்களுக்கு பரிசளிக்கணும்னு 4 புக் வாங்கிட்டுப்போறார்’ என்று விற்பனையாளர் சந்தோஷமாகச் சொன்னது, கொஞ்சம் புளகாங்கிதமாக இருந்தது. (நமக்காகச் சொல்லியிருப்பாரோ என்றும் சிந்தித்தது மனது.. இருந்தாலும் சுகமாகவே இருந்தது )

அப்படியே நான்கு அடி எடுத்துவைத்தால் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டால். வேடியப்பன் மிகவும் பிஸியாக இருந்தார். பேசிக்கொண்டே திரும்பிப் பார்த்தால், நாகரத்னா பதிப்பகத்தின் குகன் ஒரு பேனர் வைத்திருந்தார். அதில் நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களின் படங்களும் , எழுத்தாளர்கள் பெயரும் இருந்தது. அதில் முதலில்..மக்கள் தொலைக்காட்சி புகழ், சுரேகா எழுதிய நீங்கதான் சாவி.. என்று என்னை கலாய்த்திருந்தார். J

மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு தேர் நிலைக்கு வருவதைப்போல், டிஸ்கவரி ஸ்டாலுக்கு வந்தால், கேபிளும், கே.ஆர்.பியும் இருந்தார்கள்.  அளவளாவ ஆரம்பித்தால், அதிஷா வந்தார். பட்டர்ஃப்ளை சூர்யா அண்ணனும் அங்கு இருக்க, அவருடன் பேசும்போது, அண்ணனைப் பற்றிய ஒரு பெரிய உண்மை தெரிந்தது. (அவர் அனுமதியின்றி சொல்லமுடியாது.) உண்மைத்தமிழன் அண்ணாச்சி மிகவும் டிப் டாப்பாக (அண்ணாச்சி..கவனிக்கவும்..டாப்பாக) வந்திருந்தார். கடை வாசலில் கூடிய கூட்டத்தால் வியாபாரம் பாதிக்குமோ என்று வேடியப்பன் பார்த்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட உண்மையும் அதுதான். பதிவர்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, புதிதாக அந்த ஸ்டால் பக்கம் வருபவர்கள். கடை கூட்டமா இருக்கு! அடுத்த கடையில் வாங்கிக்கலாம் என்று சென்றுவிடும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. டிஸ்கவரியின் ஓரத்தில் இருக்கும் சந்தில் சங்கத்தைக் கூட்டும் முயற்சியை எடுக்கவேண்டும்.

  அவ்வழியே வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேபிளை வணங்கியோ, நலம் விசாரித்தோ சென்றார்கள். பிரபலமனாலே ப்ராப்ளம்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாரு வந்தார். அவருடன் நின்று ஸ்டால் பெயருடன், போட்டோ எடுத்தே ஆகவேண்டுமென்று வேடியப்பன் அடம் பிடிக்க, கே.ஆர்.பி க்ளிக்கினார். அட்டாச்மெண்ட்டாக நானும், கேபிளும் நின்றோம். இன்னும் சில நண்பர்கள் வந்தார்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அப்படியே அப்பீட்டினேன்.

வெளியில் வரும்போது, கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் லஞ்சமில்லா வேலையைப்பற்றி சிறப்பாகப் பேசி முடித்துக்கொண்டிருந்தார். அடுத்து இரயில்வே ஐஜி. திரு.ஆறுமுகம் பேசினார். ஒரு ஒற்றுமை என்னவென்றால், இருவருமே புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.

பார்க்கிங் நோக்கி நடையைக் கட்டினேன். வழியில் பலவிதமான வஸ்துக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். இரண்டுபேர் சத்தமாக பேசிக்கொண்டு சென்றார்கள்.

”வருஷா வருஷம் வந்திருவேன். குறைந்தபட்சம் 100 புக் வாங்கலைன்னா தூக்கமே வராது.”

”அடேயப்பா… !!  பொதுவா எந்த எழுத்தாளர் ரொம்பப் பிடிக்கும்…?”

” மனுஷ்யபுத்திரன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார். ‘துணையெழுத்து’ னு ஒரு நாவல் எழுதியிருப்பாரு…அசத்திட்டாரு மனுஷன்..!! அதைப்படிச்சதுக்கப்புறம்தான் எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கமே அதிகமாச்சு! நம்ப கிழக்கு பதிப்பகம்தான் போட்டிருக்காங்க! ”

மனுஷ்யபுத்திரன் – துணையெழுத்து – நாவல் – கிழக்கு … குட் காம்பினேஷன்….!!
தனிப் பக்கத்தில் காண →
31 Dec 2012கவிதை

தேடிக் காதல் நிதம் தின்று...


‘தேடிக்காதல் நிதம் தின்று... ’ என்ற தலைப்பில் முகநூலில் இந்த ஆண்டில் எழுதிய கவிதைகளில் சில இங்கே...




அண்டப் பெருவெளியில்

ஆகாசக் கொப்புளங்களின்
மூர்க்கச் சீற்றங்களாய்
மொய்த்திருக்கும் சர்ப்பச் 
சிறகுகளுக்குள் 
சாத்திரச் சங்கிலிகள்
சதிராடிப் போட்டுடைத்த 
வெப்பக் காற்றுப் பந்தாய்
வெடித்துக்கிளம்பும்
சூனியத்தின் நாற்றங்காலில்
பார்வை எரிக்குழம்பால்
மகரந்த இதயத்தில்
சூலுண்டாக்கி, 
ஒற்றை நீர்த்துளியை 
வார்த்துச் சென்றாய்
நீ!



படித்துப் பார்த்துவிட்டு
வாவ்!
நீ கவிஞன் டா என்று 
சொல்லிக்கொண்டே
கொடுக்கும்,
உன்
முன் நவீன முத்தத்துக்காக
பின் நவீனம் பிதற்றுகிறேன்
நான்!


                aaaaaaaa

உன்னைப்
பெற்ற
கர்வத்தில்
உன்
அப்பாவும்
கொஞ்சம்
அதிகமாய்த்தான்
ஆடுகிறார்.

நீயெல்லாம்
என்னத்த
படைச்ச..?
என்று 
பிரம்மனைப்
பார்த்து
நக்கலடிக்கிறாராம்.!

aaaaaaaa

வருடம் 

பிறக்கும்

வினாடியில்

12  முத்தம்

தரவேண்டும்

என்றாய்!


இது 
என்ன
கள்ள ஆட்டம்?

அது 2012 தானே?
அவ்வளவும்
வாங்கிக்
கொண்டுதான்
விடுவேன்.!!

aaaaaaaa

உன்னைப்
பார்க்க 
ஒவ்வொரு 
ஆண்டும்
வரிசையில்
நிற்கிறதாம்!
போகும் 2011
ஒரே புலம்பல்!

இது 2012ன் 
வாய்ப்பாம்..!
அதைப்போய்
புத்தாண்டு
என்று
கொண்டாடுகிறார்கள்
பாவம்!
aaaaaaaa
நான்

அப்போதே

சொன்னேன்

அடிக்கடி

மெரீனா போகாதே 

என்று!


இப்போது பார்!
அதுதானே
கிளம்பி
குடும்பத்துடன்
ஊருக்குள் வருகிறது
உன்னைப்பார்க்க!


aaaaaaaa

உன் 
உடைகளைப் 
பற்றிக்கொள்ள
குத்திக்கொள்ளும்
ஊக்குகளுக்குள் 
ஒரே பிரச்சனை!

உன் உடையைக் 
குத்துவதா என்று!
மொக்கையாகியே
வளைகின்றன..

அப்போதுதான்
உன்
வாயால் அதை 
நிமிர்த்துவாயாம்!

களவாணிப்பய
ஊக்குகள்!

aaaaaaaa





ஒரு பட்டை

ஸ்டிக்கர் பொட்டு 

வாங்கினாயாம்.

ஒற்றைப் பொட்டு

ஒட்டிக்கொண்டு

உன்னை விட்டு

அகல மறுக்கிறதாம்.

இதைச்சொல்லி
ஒரு பஞ்சாயத்து
இன்று வந்திருக்கிறது.

மற்ற பொட்டுகளுக்கும்
வாய்ப்புக்கொடேன்.
பட்டை பொட்டுக்கள்
மோட்சம் பெறட்டும்!


aaaaaaaa

நீ போட்ட
மார்கழி
மாக்கோலத்தை
மட்டும்
உண்ண விடாமல்
ஆண் எறும்புகள்
அடாவடி 
செய்கின்றனவாம்!
ஏரியா பெண்
எறும்புகள்
ஏகோபித்துப்
புகார் 
கொடுக்கின்றன!

இன்று உண்டால்தானே
நாளையும் கோலம் போட
வருவாள்.
உன்னைப் பார்க்கமுடியும்
என்று ஆறுதல் சொல்லச்சொல்லி
அனுப்பியிருக்கிறேன்.

ம்..
எதற்கும்,
உன் அம்மாவையே
கோலம் போட அனுப்பேன்.
எறும்பாயிருந்தாலும்..

பொறுக்கவில்லை!

aaaaaaaa

கிறிஸ்துமஸ்

தாத்தாவைப்

பார்த்து

என் விருப்பமாக

உன்னைக் கேட்டால்

வெடிச் சிரிப்புகிறார்.

போடா! போ!
அவ ஏற்கனவே
உன்னைக் கேட்டா!

மொத்த பூமியையும்
வச்சுக்கோன்னுட்டு
நான் பையை
உதறிட்டேன்

பரிசால்,
பரிசு கேட்கமுடியாது
போடா!
என்றார்....!


aaaaaaaa

நீ
வெட்டிப்போட்ட
நகத்துணுக்குகளை
பிறை
நிலாவாக்கி
அழகு 
பார்க்கிறது
வானம்!

நட்சத்திரங்கள் 
எப்படி என்றேன்.
உன்
வியர்வைத்
துளிகளின்
வேலை
என்றது.

aaaaaaaa


நீ தினசரி வரும்

ஒரே காரணத்துக்காக

பிரம்மச்சரியத்தை

விடுவதாய்

அனுமன்

சொன்னதாய்

அஞ்சனை
என் கனவில் வந்து
ஒரே புலம்பல்!

கோவிலை 
மாற்றேன்.!

அனுமன்
பிழைத்துப்போகட்டும்!


aaaaaaaa

கந்தர்வ
குளத்தில்
இரண்டு 
கயல்களைக்
காணவில்லை என்று
ஒரே அழுகை!
உன்
கண்களைப்
பார்க்க
விட்டுவிட்டார்கள்
பாவம்!
aaaaaaaa

உன் 

இதழ் 

சுவைத்தபின்

தினமும்

தேவர்களைத்

திட்டுகிறேன்

எவண்டா
அமுதம்
சுவையானது
என்று
சொன்னது?

aaaaaaaa


உன் மொபைலின்
பட்டன்களுக்குள்
பாரபட்சம்
காட்டுகிறாயாம்!

Z
ம் X ம் ஒரே அழுகை!

எல்லா எழுத்துக்களும்
பயன்படுத்தி
எஸ். எம்.எஸ்
அனுப்புகிறாள்.

எங்களை 
எதற்கேனும்
பயன்படுத்தச் 
சொல்லேன்
என்கின்றன..!

நான் தான்
இருக்கிறேனே
பெறுநராய் உன்
பேரடிமை!

zzzzzzzzzzz
xxxxxxxxxx
என்றாவது
ஒரு எஸ்.எம்.எஸ்
அனுப்பு

இரு எழுத்துக்களும்
மோட்சம் 
பெறட்டும்!

அஃறிணையும்
அசரடிக்கும்
அழகியை
அடைந்ததற்கு,
நான்
இதைத்தான்
செய்யமுடியும்!
aaaaaaaa


வெட்டிப்பேச்சாக

இருந்தாலும்

தொட்டுப் பேசினால்

பட்டுப்பூவைப்போல்

இருக்கிறதென்று 

சொன்னேன்.



நீ

ரொம்ப

கெட்டுப்போய்விட்டாய்

என்று

கைகளால்

கன்னத்தைக்
கிள்ளுகிறாய்!

அட!
பூவைக் கிள்ளி
பார்த்திருக்கிறேன்
பூவே கிள்ளி
பார்க்கிறேன்
என்றேன்...

அதற்கு
ஏன்
அப்படிச்
செய்தாய்?


aaaaaaaa





உன் மூக்குநுனி 
வியர்வைத்துளிக்கும்
சூரியனுக்கும்
பஞ்சாயத்து!

எவ்வளவுதான்
சுட்டெரித்தாலும்
காயமாட்டேன்
என்கிறதாம்!

சூரியனின்
வேலை
கெடுகிறதாம்!

அவள்
தொட்டுத்
துடைக்கட்டும்
போகிறேன்
என்கிறது
வியர்வை!

துடைத்துத்
தொலைத்து
விடு!

ஆனால்..

யார் யாரெல்லாம்
எனக்குப் போட்டி?

aaaaaaaa
உன்னைப்
புரிந்துகொள்ளவே
முடியவில்லை
என்று நீ சொல்லும்
ஒவ்வொருமுறையும்,,
நீ
எவ்வளவு
புரிந்துகொண்டுள்ளாய்
என்று
வியக்கிறேன்.
உன் புரிதலின்
வெம்மையில்
வியர்க்கிறேன்.




பலநூறு ஆண்டுகளாய்

மஞ்சள் பூசி வளர்ந்த 

ஸ்ட்ராபெரிப் பழங்கள்

உன் இதழ்களில் பட்டதும்.

வெட்கத்தில்

வேட்கையில்

சிவப்பாய்
மாறியதில் ஏற்பட்ட
இரசாயன மாற்றம்
ஏழேழு ஜென்மமாய்த் 
தொடர்கிறதாம்.

ஸ்ட்ராபெரிப் பழங்களின்
நிறத்தின் இரகசியத்தை
நேற்று ஒரு பழம் 
போட்டு உடைத்தது.

பதிலுக்கு...சிபாரிசாய்
என்னிடம் கேட்கிறது
அவள் இதழில் சாகவேண்டும்
அனுமதி தருவாயா?’

ஸ்ட்ரா பெரியெல்லாம் எனக்கு
சக்களத்தனா?




               aaaaaaaa




சித்திரை நிலவும்

நித்திரை கலைக்கும்



கத்திரி வெயிலிலும்

கனவுகள் பிறக்கும்!



பகல் பத்தரை மணிக்கெல்லாம்
பனித்துளி தெறிக்கும்

உன் முத்திரைப் புன்னகை
முகத்திரை கிழிக்கும்.

கத்தினால் கூட 
காந்தர்வம் ஒலிக்கும்

பத்திரமாய் இரு என
பாற்கடல் தவிக்கும்!

நீ
மொத்தினால் கூட
மெத்தென்று இருக்கும்!

உனைப்
பெத்தவன் காலில் விழ
பெருங்கூட்டம் துடிக்கும்!

சத்தியம் சடுதியில்
சகலமும் துறக்கும்.

உன் 
முத்த வாய் தீண்டலில்
மோட்சமும் கிடைக்கும்

இனி
எத்தனை கவிதைகள்
எதுகையில் பிறக்கும்?




என்னை வேறொருவன்

காதலித்து..

அவனை

எனக்கும் 

பிடித்திருந்தால்

என்னடா

செய்வாய்
என்று 
கேட்டாள் 
என்னை, 
இத்தனை நாள் 
காதலித்தவள்..!

வருத்தத்துடன்
ஆரம்பித்தேன்.

உன்
விருப்பமே
என் 
விருப்பமடி..!

அவன்
கையில்
உன் கை கொடுத்து
சொல்வேன்..!

இன்னிலேருந்து
நீ
சாவுடா..!


(இது மட்டும் கொஞ்சம் வம்பாக எழுதியது)

aaaaaaaa


தனிப் பக்கத்தில் காண →
29 Dec 2012அனுபவம்

விஸ்வரூபம், எக்ஸ்பிரஸ் மால்..இன்ன பிற..



     
    விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னையை கமல் மிகச்சரியாகத்தான் கையாண்டுகொண்டிருக்கிறார். அவரது DTH ஒளிபரப்பு சிந்தனை மிகவும் சிறப்பானது. தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால்தான், ஒரு கலை மட்டுமல்ல… ஒரு சமூகமே நன்கு வளரும். அதைப் புரிந்துகொள்ளாமல் குய்யோ முறையோ என்று கதறும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு விரலை கமலை நோக்கிக் காட்டும்போது மற்ற விரல்கள் தங்களை நோக்கித்தான் இருக்கின்றன என்று மறுப்பதற்கில்லை.

    உண்மையிலேயே, தமிழ் சினிமாவின் இப்போதைய வியாபார ரோலர் கோஸ்டர் நிலைக்கு, திரையரங்குகள்தான் காரணம்.! அவர்களது நியாயமற்ற டிக்கட் விலைதான் , இரசிகனை தியேட்டருக்கு வராமல் செய்கிறது. மேலும், அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆபத்தை வரவழைக்கும். இப்போது கமல் எடுத்திருக்கும் முடிவை, மிகவும் நைஸாக மற்ற தயாரிப்பாளர்களும் எடுத்துவிடும் தூரம் அதிகமில்லை. ஒருபக்கம் திரையரங்குகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள், மறுபக்கம் திரையரங்குகள் தங்கள் அடாவடி டிக்கெட் கட்டணத்தால் இரசிகர்களை உள்ளே வரவிடாமல் திண்டாடவைக்கிறார்கள். இது தொடர்ந்துகொண்டேயிருந்தால், ஒரு படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் யுக்திகள் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் எடுக்கவேண்டியதுதான் காலத்தின் கட்டாயம்.

    திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது என்பதற்காக, நீ வேறு எங்கும் படத்தை ஒளிபரப்பக்கூடாது என்று வம்பிழுப்பது முட்டாள்தனம். திருட்டு டிவிடிக்குக் காரணமே இவர்கள்தான். தியேட்டர்களிலிருந்துதான் பிரிண்ட் எடுக்கப்படுகிறது என்பதை மறுக்கவே முடியாது. அதுவும், கேமராவில் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துவிட்டு, ஒலியை மட்டும் நேரடியாக DTS மிக்ஸரிலிருந்து திருடித்தான் டிவிடி வருகிறது. அந்தத் திருட்டை ஒழிக்க வக்கில்லாத திரையரங்கு உரிமையாளர்கள், நேர்மையாக ஒரு மனிதன் வேறு முறையில் மக்களிடம் தன் படைப்பைக் கொண்டு சேர்த்தால், குதிப்பதில் நியாயமே இல்லை. திரையரங்கு உரிமையாளர்கள் திருட்டு டிவிடி வராது என்று உறுதி அளிக்க இயலாத பட்சத்தில் , கமலின் வியாபரத்தில் தலையிட அருகதையே கிடையாது.

    உண்மையில், இன்றைய சூழலில், தமிழ் சினிமாவை வீழ்த்துவதில் திரையரங்குகளுக்குத்தான் பங்கு அதிகமாயிருக்கிறது. கமல் மட்டுமே, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார யுக்திகளை பல்வேறு காலகட்டங்களில் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தமிழ்த் திரையுலகை, கமலை, திரை சார்ந்த வியாபாரத்தை நேசிப்பவர்கள் அனைவரும், அதை ஆதரிப்பதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

கமல் சார் நீங்க செய்வது சரிதான்..! நீங்க முன்னாடி போங்க! …பின்னாடியே வரோம். அவங்களும் வருவாங்க!
_______________________________________________________________

     எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஒரு விளையாட்டு உலகம் இருக்கிறதாம். அங்கும் கார்டு சிஸ்டத்தைக் கொண்டுவந்து அதில் 20 ரூபாய் வசூலித்து அடாவடி செய்துகொண்டிருக்கிறார்களாம். இந்திய உணவு அல்லது பொழுதுபோக்குச் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. இவர்களது உள்கணக்கு வசதிகளுக்காக வாடிக்கையாளர்களை அடாவடி செய்கிறார்கள். இந்த முறை மொத்தமாகப் போய் கேட்கலாம் என்று எண்ணம். இவர்கள் செய்யும் அநியாயத்தை நாம்தான் தட்டிக்கேட்கவேண்டும். இதற்காக தேவதூதன் யாரும் பிறந்து வந்துவிடமாட்டான். இது போன்ற சாத்தான்களுக்கு நாமே போதும்.!! கரம் கோர்க்க விரும்புபவர்கள் kettaalkidaikkum@gmail.com க்கு ஒரு மெயிலைத் தட்டிவிடுங்கள். தேதியும் நேரமும் தனியே அறிவிக்கப்படும்.


ஒன்று மட்டும் நிச்சயம்.. தன்னெதிரே நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்காத சமுதாயம் நாசமாய்ப் போவதை யாராலும் தடுக்க முடியாது.
___________________________________________________________________________


       ஜெயா ப்ளஸ்ஸில் கற்றல் அழகு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதில். ஒவ்வொரு மேற்படிப்புத் துறைகளின் உண்மையான தன்மையை ஆராய இருக்கிறது. உதாரணமாக, ஏரோநாட்டிக் பொறியியல் படித்தால், பைலட் ஆகலாம் என்று பரவலாக எண்ணம் இருக்கிறது. ஆனால், அது படித்தால், விமான உற்பத்தி அல்லது பழுதுபார்த்தலில்தான் வேலை கிடைக்கும். அதுவும் அதனுள் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. ஏரோ ஸ்பேஸ் டெக்னாலஜி என்று ஒன்று உள்ளது. அது படித்தால், செயற்கைக்கோள் தயாரிப்பில் பங்குபெறலாம். அதுதவிர ஏவியானிக்ஸ் என்ற படிப்பு இருக்கிறது. அது படித்தால் மட்டுமே, விமான கட்டுப்பாட்டுக் கருவிகள்  தயாரிப்பில் பங்கெடுக்கமுடியும். இதில் முதுகலைப் படிப்புகள் முடித்தவர்கள் பல்வேறு சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று பல்வேறு படிப்புகளைப் பற்றியும், அதன் பாடத்திட்டங்கள், வேலை வாய்ப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு பற்றிய உண்மைத் தகவல்களை அந்தக் கல்லூரிகளுக்கே சென்று , செயல்முறை விளக்கத்துடன் புரியவைப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம். ஒளிபரப்பு நாளும், நேரமும் விரைவில்…


வரும் திங்களிலிருந்து, மக்கள் தொலைக்காட்சியில், காலை 8:48க்கு ஒளிபரப்பாகும் ஊருக்கு உரைப்போம் என்ற நிகழ்ச்சியில், சில நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கன்ஃப்யூஷியஸ், லியோ டால்ஸ்டாய் புத்தகங்கள், வீரத்தேவன் வரலாறு போன்றவை அடக்கம்..  அது அறிமுகமா,? படுத்தலா? என்று பார்த்தபிறகுதான் தெரியும்.

தனிப் பக்கத்தில் காண →
21 Dec 2012அனுபவம்

திரைப்பாடல் நினைவுகள்





     

 திரைப்படப்பாடல்கள் இந்தச் சமூகத்தில், நம்முடன் பிணைந்துவிட்டதாகவே உணர்கிறேன். ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கு அறிமுகமான பாடலை இப்போது கேட்கும்போது அதே காலகட்டம் நினைவுக்கு வந்து ஒரு ரம்மியத்தையோ, சோகத்தையோ கிளறிவிட்டுவிடுகிறது.

        நான் சிறுவயதில் பல ஊர்களில் படித்த நினைவுகள் பாடல்களோடு ஒன்றிப்போய் , அந்தக் காலகட்டங்கள் இன்றும் ஸ்லைட் ஷோக்களாகவும்,. சில நேரங்களில் 16mm படங்களாகவும் ஓடுகின்றன.

குழந்தைப்பருவத்தில்.. ‘ என்னடீ ராக்கம்மா..பல்லாக்கு நெளிப்பு’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதையே பாடிக்கொண்டிருப்பேன் என்று அம்மா சொல்லுவார்கள். அதிலும் நான் சொல்லும் என் நெஞ்சு குலுங்குலடி..! என்ற வார்த்தைக்காக எல்லோரும் திரும்பத் திரும்பக் கேட்பார்களாம்.

       ’மலர் கொடுத்தேன்..கைகுலுங்க வளையலிட்டேன்’ – இந்தப்பாடலை திருச்சி வானொலி நிலையத்தின் திரைகானம் நிகழ்ச்சியில் கேட்டதும் ..அந்த வளையலிட்டேன் என்ற வார்த்தை உள்ளேயே நுழையாமல்…நான் பட்ட அவஸ்தை..அப்பப்பப்பா…! தனியாகச் சொல்லிவிடுவேன். பாட்டோடு சேர்த்துப் பாடும்போது.. கை குளுங்க என்று வந்துவிடும். பின்னர் அதைச் சரி செய்து, கைகுலுங்க என்றால்…வலையலிட்டேன் என்று வரும்.. பல நாட்கள் அதை வகுப்பறையில் பாடிப்பார்த்திருக்கிறேன். ரத்னாபாய் டீச்சர்.. நான் ஏதோ அறிவியல் பாடத்தைச் சொல்லிப்பார்க்கிறேன் என்று நம்ம்ம்பி விட்டுவிடுவார்கள். பின்னர் நீண்ட நாட்களுக்குப்பிறகு, அந்தப்படம் –திரிசூலம்- கறம்பக்குடி முருகன் தியேட்டரில் பார்க்க நேரிட்டபோது.. அடுத்த கவலை பீரிட்டது.

     சிவாஜி..இந்தப்பாட்டை, மிகவும் அநாயாசமாக பாடுகிறாரே.. அதான் இந்த ஆளை நடிகர் திலகம் என்கிறார்கள் என்று நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது..அந்த அநாயாசத்துக்குச் சொந்தக்காரர் டி.எம்.எஸ் என்று..

       பிறகு.. தகிட ததிமி தகிட ததிமி தந்தானா… என்னைக் கட்டிப்போட்ட பாடல், அதை முதலில் கேட்டது, இலுப்பூரில்  4ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது , ஒரு சலூன் ரேடியோவில் . அதுவும் பாடிப்பார்க்கவே முடியாமல் பல நாள் என்னை அலைக்கழித்தது.. தகிட தகிமி என்று வரும்.. பின்னதை சரி செய்ய நினைத்தான் ததிட ததிமி என்று வந்து அலைப்பறை செய்யும்.
     
      அந்த சலூன் அண்ணன், கமல் போலவே முடி வெட்டியிருப்பார். அவருக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு போஸ்டர் கிடைக்குமோ தெரியாது. அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமாக ஓடும் படத்தின் போஸ்டர் , அவரது கடைக்குள் ஒட்டியிருக்கும். அதன்படி சலங்கை ஒலி பட போஸ்டர் ஒட்டியிருக்க, அதில் கமல் காலைத்தூக்கி ஆடும் ஒரு போஸ் இருக்கும். அதைக்காட்டி, இந்தப்பாட்டுல ஆடும்போது எடுத்த போட்டாவைத்தான் நான் போஸ்டராக்கி ஒட்டினேன் என்று சொன்னார். அன்றிலிருந்து அவரையே கமலாக எண்ணி வியக்க ஆரம்பித்தேன். பிறிதொரு நாள் சலங்கை ஒலி பார்க்கும்போதுதான் தெரிந்தது, அந்த போஸ் தகிட ததிமிக்கு ஆடியது இல்லை. நாத வினோதங்களுக்கானது என்று… பயபுள்ள பொய் சொல்லியிருக்கு!

       சங்கீத ஜாதிமுல்லையை மிகவும் லேட்டாகத்தான் கேட்டேன். அப்போது நாங்கள் கறம்பக்குடியில் இருந்தோம். எஸ்.பி.பி என்பவர் மேல் வெறிபிடித்து அலைந்த காலகட்டம் அது..!! அந்தப் பாடல் முதன்முதலில் கேட்ட கதையே மிகவும் நீளம்..!! பள்ளியிலிருந்து, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு, திரும்பச் செல்லும்போது தாமதமாகிவிட்டால், சீனி கடைமுக்கத்திலிருந்து NNL (முன்னால் அதன் பெயர் PTR) பஸ்ஸில் தொற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தில் இறங்கிவிடுவது வழக்கம். செக்கர் அண்ணன் டிக்கெட்டெல்லாம் கேட்கமாட்டார். அப்படி ஒருநாள் பஸ்ஸில் ஏறிவிட்டேன்…

        ‘திருமுகம் கண்டு பழகுமோ…அறிமுகம் செய்து விலகுமோ? என்ற வரியில் கேட்க ஆரம்பித்து கலக்கி எடுத்துவிட்டது அந்தப்பாடல்..! பாட்டு ரொம்ப பெரிசு..! ஒரு நிமிடப் பயண தூரத்தில் என்ன கேட்டுவிடமுடியும்..? பள்ளிக்கூட பெல் அடிக்கவில்லை.. முடிந்தவரை நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தேன். பிறகு அந்தப்பாடலை எங்கெல்லாம் கேட்டேன் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே உண்டு.

      குழலூதும் கண்ணனுக்கு குயில்பாடும் பாட்டுக்கேட்குதா? – முதல் முறையே வசீகரித்த பாடல், அதை மிகவும் சிலாகித்து வகுப்பறையில் பேச…என் நண்பன் ஒருவன் தன் வீட்டு டேப் ரெக்கார்டரில் கேட்கலாம் என்று அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அன்று மாலை , அவன் அக்கா அந்தப்பாடலை போடவே விடவில்லை. சரியாக 5 மணிக்கு போடச் சொன்னார். நாங்களும் தினம் தினம் கேட்டு ரசித்தோம். சில நாட்களுக்குப் பிறகு, எதேச்சையாக அவர்கள் வீட்டைக் கடக்கும்போது அதே பாடல்..!! நேரம் 5 மணி! அப்புறம்தான் தெரிந்தது.. எதிர்வீட்டு ஆசிரியரின் மகனுக்கும் அந்தப்பாடலை கேட்கப் பிடிக்கும் என்று..!!

     ’தேவதை இளம் தேவி! என்னைச் சுற்றும் ஆவி..!! ‘ இந்தப்பாடல் தென்காசியில் கேட்டது…! அணைக்கரைத் தெருவின் கடைசி வீடு லிப்டன் டீ மாமாவுடையது. அந்த வீட்டு ஹரீஷ் அண்ணன் ஒரு சிறிய பெட்டி ஒன்றிலிருந்து கிளம்பும் ஒயர்களை தனது காதில் வைத்துக்கொண்டு , தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். அவர் தலையசைக்கும் அழகுக்காகவே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். கேக்குறியாடா? என்று அவர் சொன்னதும்.. பாய்ந்து சென்று அருகில் நின்றேன். காதில் வைத்தார்…அப்போது..கேட்ட வரிகள்… ‘’தேவமுல்லையே….!! என்று ஆரம்பித்தது…பின்னர் ஒரு முறை அந்தப்பாடலை…கேசட்டை ரீவைண்ட் செய்து கேட்கவைத்தார். அதன்பிறகு.. நான் வானொலியில் பணியாற்றும்போது தேடித்தேடி மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒலிபரப்புவேன். ஆனாலும்..முதல் முறை கேட்ட வாக்மென் அனுபவம் இன்னும் காதுக்குள்ளேயே இருக்கிறது.

      இன்னும் பல பாடல்கள் நினைவுகளை வருடி.. சில நேரங்களில் அந்த நேரத்தில் சாப்பிட்ட உணவுகூட நினைவுக்கு வருகிறது.. அதே வாசனையுடன்..!! அம்மா என்றழைக்காத உயிரில்லையே - பாடல் அறந்தாங்கி அம்மா மெஸ்ஸின் சாம்பார் வாசனையையும் சேர்த்தே வைத்திருக்கிறது. 

ஜுலி ஐ லவ் யூ – தென்காசியில் , நான் கர்ச்சீஃபில் கொட்டிக்கொண்ட பாண்ட்ஸ் பவுடர் வாசனை..!!

தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே ! - இலுப்பூர் ஆர்.ஸி பள்ளியின் மடத்துக்குள் இருக்கும் கொய்யாப்பழ வாசனை..!

    ராசாவே!  உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க.. – எங்கள்  லட்சுமிப் பசுவின் கன்றுக்குட்டி வீட்டுக்குள் ஓடிவந்தபோது பரவிய கன்றுக்குட்டி வாசனை இன்னும் நாசிக்குள்…
      


     இன்றும் இந்தப்பாடல்கள் நினைவுகளைக் கிளறி…சில நேரங்களில் சின்னப்பிள்ளையாகவே இருந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

       இதயக்கோவில் படத்தின் அனைத்துப்பாடல்களும் மனதை வருடினாலும், வானுயர்ந்த சோலையிலே - பாடல் மிகவும் நெருக்கமானது. அது எனக்கு பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்றுத்தந்த பாடல். ! அந்தப்படத்தின் கேசட்டை என் நண்பன் சத்யா வாங்கினான். அவனுக்காக ஒரு ஆம்ப்ளிஃபயர் நான் செய்து தந்தேன். அதைக் கேட்டுவிட்டு, பாப்புலர் சலூனில் இருப்பதுபோல் சில் சில் என்று வரவேண்டும் எனக் கேட்டான். நானும் பல பாஸ்-ட்ரபிள் போர்டுகளை மாற்றி மாற்றி முயற்சி செய்துபார்த்தேன்.  அப்புறம் ச்சில்லிங் எஃபட்டுக்காக ட்வீட்டரும் வாங்கி மாட்டியாயிற்று. மீண்டும் பாப்புலர் சலூன் சென்று கேட்டால், அந்த எஃபக்ட் நம்மிடம் இல்லை. பின்னர்தான் எனக்குத் தெரிந்தது. சலூனில் சப்-ஊஃபரே இல்லை. அனைத்துமே ட்வீட்டர்தான் என்று..!! கடைசிவரை சத்யாவுக்கு சலூன் எஃபக்ட் வரவில்லையே என்று வருத்தம்தான்!


     காரணமே இல்லாமல், வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ஒன்று உண்டு.    பூந்தேனில் கலந்து…பொன்வண்டு எழுந்து..சங்கீதம் படிப்பதென்ன..?  ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தருணத்தில் நான் முணுமுணுத்துவிடும் பாடல் இது…!  இதன் நினைவுதான் மிகவும் ஆழமானது. இலுப்பூரில் வேல்முருகன் தியேட்டரில் ஏணிப்படிகள் பார்த்துவிட்டு வரும்போது அந்த அக்காவைப் பார்த்தேன். ஷோபா போலவே தெரிந்தாள். இரண்டு நாட்களில் பள்ளியில் சர்க்கஸ் கூட்டிச் சென்றபோது அந்த அக்கா  அங்கு, கம்பியில் நடந்து காட்டிக்கொண்டிருந்தாள். அடுத்த வாரத்தில் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் அவளும், ஒரு இளைஞனும் பிணமாகக் கிடந்தார்கள். 

   ஒவ்வொரு பாடலும் ஜீவனைக் கட்டிப்போட இதுபோன்ற நினைவுகளும் கயிறாகிறது என்று எண்ணுகிறேன்.



தனிப் பக்கத்தில் காண →