சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
11 Dec 2007கொசுவத்தி

போஜன்வாலாவின் டென்ஷன்வாலா...! - பாகம் 2

அந்த கடையில அதிகமா, திருச்சில தொழில் பண்ணி, தனியா தங்குற

வட நாட்டுக்காரங்கதான் சாப்பிட வருவாங்க...!
நாங்க மட்டும்தான் அதுக்கு வேற்று கிரக வாசிங்க மாதிரி..!
மத்த திருச்சிவாசி தமிழர்கள் அதிகம் சாப்பிட வரமாட்டாங்க!
ஆமா..11 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கும்போது (அப்ப சிறப்பு சாப்பாடு 15 தான்) எவன் 20 ரூபாய்க்கு சாப்பிடுவான் ? எங்களை மாதிரி உள்குத்தோட வந்த ஆட்கள் தவிர..!

நான் தினமும் 3 அல்லது 4 ரோட்டியும், சாதமும் வாங்குவேன்..! சீனிவாசன் சாதரணமாவே 9 முதல் 11 ரோட்டி வரைக்கும் முட்டிட்டு ..கப் தயிருல சக்கரை போட்டு கொண்டுவா தம்பி! ன்னுவான்.என்னிக்காவது 6 ரோட்டி சாப்புட்டுட்டு ...வயிறே சரியில்ல நண்பா..!ன்னு லந்தைக்குடுப்பான். ஆனா அந்த கடை முதலாளி என்னைப்பாத்தாவது லேசா சிரிப்பான்..ஆனா சீனிவாசனைப்பாத்தா..முறைப்பான்.எங்களுக்கு காரணம் சரியா புரியலை..!

ஏதோ குலதெய்வம் செஞ்ச புண்ணியம் எங்க வண்டி நல்லா ஓடிட்டிருந்தது. ஆனா எப்பவுமே அங்க பரிமாறுகிற பையனுக்கு எங்களை அப்புடி ஒண்ணும் பிடிக்காது..! ஏதோ அவன் சப்பாத்தில மண்ணள்ளி போட்டவங்க மாதிரியே நடத்துவான். அதெல்லாம் பாத்தா நடக்குமான்னு நாங்களும் அவனையே தாளிச்சுட்டுதான் வெளில வருவோம்..!

இப்படித்தான் ஒரு நாள் எதேச்சையா ஒரு வட இந்திய நண்பன் அறிமுகமாகி..பழகி.. அவனுக்கும் சீனிவாசனுக்கும் வாக்குவாதம் வந்துடுச்சு..சாப்புடறதைப்பத்தி..அவன் சொன்னான்.."நாங்கதான் நல்லா சமைப்போம் . நல்லா சாப்பிடுவோம்.. வலுவா இருப்போம்" னு. நம்ம சீனிவாசனும் அதையே தமிழனோட குணம்தான்னு சொல்ல.. வாக்குவாதம் முத்தி..
பஞ்சாயத்த ராம்தேவ் போஜன்வாலாவில் - ஒரு போட்டியா வச்சு தீத்துக்கறதுன்னு முடிவாச்சு..!
போட்டி என்னன்னா..சீனிவாசனும்..அந்த மார்வாடிப்பையனும் சாப்புடறது. யார் அதிக ரோட்டி சாப்பிடறதுன்னுதான்.!

போட்டி ஆரம்பமாச்சு ! அது கடைக்காரருக்கு தெரியாது பாவம்.!

அந்த சேட்டுப்பையன் பாவம்..ஒரு 7 ரோட்டிக்குமேல முக்குமுக்குன்னு முக்குறான்.. நம்ம ஹீரோ 15 ,16ன்னு கும்மு கும்முன்னு கும்முறான். டேய் ! நீதாண்டா ஜெயிச்சன்னா கேக்கமாட்டேங்கிறான்.

"இந்த போட்டிக்காக காலைல சாப்பிடலடா..அதான்..Unlimited தானே கண்டுக்காத " அப்புடின்னான்..

அப்பதான்...(அதைக்கேட்டுக்கிட்டிருந்த) முதலாளி வேகமா அவன் முன்னாடி வந்து நின்னு ஆவேசமா சொன்னாரு...!

                                    
" UNLIMITED க்கும் ஒரு LIMIT இருக்கு ! "

நானும் ரொம்ப நாளாவே பாத்துட்டிருகேன்.!மொதல்ல வெளில போங்க.! இனிமே இங்க வராதீங்க..!ஒங்க குரூப்புக்கே இனிமே சாப்பாடு கிடையாது..குறிப்பா உனக்கு கிடையாது.! அதுக்கப்புறம் கோபத்துல ஹிந்தில என்னன்னமோ திட்டினாரு!

அப்பவும் சீனிவாசன் கூசாம சொல்றான்.. "தம்பீ! தயிருல சக்கரை போட்டு கொண்டுவா..!"

-அதுக்கப்புறம் நான் அந்தப்பக்கமே போகலை..!
தனிப் பக்கத்தில் காண →
10 Dec 2007கொசுவத்தி

போஜன்வாலாவின் டென்ஷன்வாலா...!

இந்த பதிவுக்கு அடிப்படைக்காரணம் புதுகைத்தென்றல் போட்ட இந்த
பதிவுதான்..

ஏன்னா அவுங்கதான் எனக்கு இந்த கொசுவத்தியை கிளப்பிவுட்டுட்டாங்க..!

நான்..பல ஆண்டுகளுக்கு முன்னால ஒரு தில்லி நிறுவனத்தின் திருச்சி கிளைல பொட்டி தட்ட (சரி பண்ண) வேலைக்கு சேந்தேன். அங்க என் கூட சீனிவாசன்னு ஒரு நண்பன்.! அவன் சரியான லந்து பேர்வழி..!(நமக்கு வாய்க்கறதெல்லாம் பின்ன எப்புடி இருக்கும்?)

தினமும் ஏரியாவுக்கு வேலையா காலைல 9 மணிக்கெல்லாம் கிளம்பிடுவோம்.. மொதல்ல 2 பேரும் டிபன் சாப்பிட்டுட்டு...மதியம் ஹோட்டல் மதுரா..(தெப்பக்குளம் பக்கத்துல ..சாரதாஸ் பின்னாடி  இருக்கு.._) வில் சாப்பாடு சாப்பிடுவோம். அங்க எப்புடின்னா பந்திமாதிரி உக்கார வச்சு அளவில்லா (Unlimited) சாப்பாடு போடுவாங்க!அதுவும் முடிச்சா மாலைல தூள் பக்கோடா டயமண்ட் பஜாரில் ஒரு கடையில்..
சில நாள் மதிய சாப்பாடு லேட்டாகிட்டா மாரீஸ் தியேட்டருக்கிட்ட வெண்ணிலா ரெஸ்ட்டாரண்டில் பொரிச்ச புரோட்டா.. இப்புடி நல்லா போயிட்டுருந்த சாப்பாட்டு வாழ்க்கையில- யார் கண் பட்டுச்சோ..கம்பெனில சாப்பாட்டு அலவன்சை நிறுத்துறதா
சொல்லிட்டாங்க.! இது என்னடா இளைய சமுதாயத்துக்கு வந்த சோதனைன்னு..தினமும் 40 ரூபாய்க்கு கம்பெனி காசுல சாப்புட்டுப்புட்டுநச் ன்னு திரிஞ்ச எங்க கோஷ்டிக்கு -என்ன கொடுமை சார் - ன்னு ஆகிப்போச்சு..!

சொந்தக்காசுல சாப்பிட வேண்டியதால காலைல ஒரு டீயும், பிஸ்கட்டோடயும் முடிச்சுக்கிட்டு...11.30க்கெல்லாம் மதுராவில் சாப்பிடுவதுன்னு முடிவுக்கு வந்தோம்.. அதுவும் காசு மிச்சம் பண்ணத்தானே தவிர ரொம்ப டேஸ்ட்டுன்னு சொல்ல முடியாது..!
இது இப்புடியே போயிட்டிருக்கும்போது... மறுபடியும் கம்பெனில பாலை
வாத்தாங்க..ஆனா, மதிய சாப்பாடு மட்டும்தான் அதுக்கும் பில் கொடுக்கணும்.. ஆனா பில் 20 ரூபா வரை இருக்கலாம் னாங்க..!அதுவும் கஷ்டம்..ஏன்னா மதுராவில் 11 ரூபாதான் சாப்பாடு..! பில்லை அதிகப்படுத்தி வாங்கவும் எங்களுக்கு வெக்கம்..!

சீனிவாசனுக்கு கம்பெனி மேல கடும் கோபம்..என்னடா இது..தினமும் 9 ரூபா கம்பெனிக்கு வுடுற மாதிரி இருக்கேன்னு..20 ரூபாய்க்கு எங்க சாப்பாடு போடுவாங்கன்னு தேட ஆரம்பிச்சான்.
அன்னிக்கு சாயந்திரம் வேலை முடிச்சு வந்தவுடனே..சீனிவாசன் பயங்கர சந்தோஷமா இருந்தான்.. என்னடான்னு கேட்டா..டேய் ! 20 ரூபா சாப்பாடு போடுற ஹோட்டலை
கண்டுபிடுச்சிட்டேன். நாளைக்கு என்னோட வான்னான்.

அன்று.. என்னமோ பாக்காமலே பழகின காதலிய சந்திக்கப்போற மாதிரி..ஒரே படபடப்போட நாங்க போன எடம்தான்..

ராம்தேவ் போஜன்வாலா..!

திருச்சி பெரிய கடைவீதியில்..கள்ளர் தெருவுக்கு பக்கத்தில்..ஒரு சைக்கிள் கம்பெனியின் மாடியில் இருந்தது..!எவ்வளவு வேணும்னாலும் ரோட்டி சாப்பிட்டுக்கலாம்..அப்புறம் கொஞ்சம் சாதம் வாங்கிக்கலாம்ங்கிற டைப் சாப்பாடு..! அதுதான் வட இந்திய சாப்பாடுன்னு எனக்குஅன்னிக்குதான் தெரியும்.ரொம்ப நல்லா இருந்தது..நமக்கு இனிமே பட்ஜெட்டையும் முடிச்சமாதிரி இருக்கும்!நல்ல சாப்பாடு சாப்பிட்டு உடம்பும் ஏறும்னு.. பயங்கர மகிழ்ச்சி.. !

இந்த நல்ல சேதியை சந்திக்கிற நண்பர்களுக்கும் சொல்லி ஒரு பெரிய வாடிக்கையாளர் பட்டாளத்தையே கொண்டு போக ஆரம்பிச்சோம்.

பொதுவாவே சீனிவாசன் கொஞ்சம் நல்லாவே சாப்பிடுவான்.

அங்கதான் ஆரம்பிச்சுது பிரச்னையே..!
தனிப் பக்கத்தில் காண →
08 Dec 2007அனுபவம்

மறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)

இதுதான் க்ளைமாக்சுங்க....

கிடைச்ச பெட்டியின் பூட்டை சரி பண்ணி, மறுபடியும் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேங்க..! சரியா 15 நாள் கழிச்சு., ஒரு கூட்டத்துக்கு திண்டுக்கல்லுக்கு கூப்பிட்டாங்க..!

அப்பவே சனி அடுத்த பந்தை போடப்போகுதுன்னு தெரியாம அதே பெட்டி, கிட்டத்தட்ட அதே பொருட்கள் மற்றும் அதைவிட விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவுடன் என் வீரப்பயணத்தை தொடங்கினேன். திருச்சி வந்து பஸ் மாறி ஒரு பழனி பஸ்ஸைப்பிடிச்சு அதில் உக்காந்தேன்..
நம்ம பெட்டியை இருக்கைக்கு மேல (அதுவும்..எதிர்புறம்) உள்ள பெட்டி வைக்கும் பகுதியில் பத்திரமா வச்சுட்டு..(அப்பதான் அடிக்கடி பாத்துக்க வசதியா இருக்கும்)- பஸ் இன்னும் கிளம்பலை..
நிலையத்திலேயே நிக்குது..
ஒரு புத்தகத்தை எடுத்து வச்சு, அதைப் படிக்க ஆரம்பிச்சு,ஒரு பக்கம் படிச்சு முடிச்சேங்க..!
அப்ப எதேச்சையா -அனிச்சைச்செயலா- திரும்பி பாக்குறேன்.

பெட்டியை காணோம்.....!


என்ன கொடுமைடா இதுன்னு..பஸ்முழுக்க,நிலையம் முழுக்க தேடி...ஓடி...அலையுறேன்.. நாம வேற பொட்டி தட்டுற ஆளா..! இதுக்கு ஒரு கூகுள் இருக்கக்கூடாதான்னு மனசு அப்பகூட நெனைக்குது..!
சரி..இந்தவாட்டி சனியனுக்கு, ஸ்கோரில் ஒரு விக்கெட் நிச்சயம்னு நெனச்சுக்கிட்டே... இருந்தாலும் கடைசி வரைக்கும் மனம் தளராம காவல் கண்காணிப்பு அறைக்கு போனேன்.

உண்மையாவே நல்லா, அக்கறையா விசாரிச்சாங்க..! உள்ள கூட்டிட்டுப்போய் , 'சார் நாம திருச்சி பஸ்டாண்டை 24 கேமராக்கள் மூலமா கண்காணிக்கிறோம்..அதுனால உங்க பெட்டியை எடுத்தவனை கண்டிப்பா சில நிமிடங்களில் கண்டுபிடிச்சுருவோம்.கவலையே படாதீங்க..!" ன்னு ஆறுதலெல்லாம் சொல்லி,
ஒரு தனியறைக்கு கூட்டிப்போனாங்க..அங்க இங்கிலீஸ் படம் மாதிரி நிறைய கட்டம் கட்டமா பிரிவுகளோட ஒரு மானிட்டரில் முழு பேருந்து நிலையமும் முன்னாடி தெரிந்தது.
ஆஹா..! ரெண்டாவது தடவையா பெட்டி கிடைக்கப்போவுதுன்னு சந்தோஷமா..''பழனி பஸ் நிக்கிற எடத்து கேமராவில் காட்டுங்க சார்..!' ன்னு சொன்னதுதான் தாமதம்...

ஐய்யயோ...! அந்த கேமரா மட்டும் நேத்துலேருந்து வேலை செய்யலயே ...! ன்னு வீறிட்டாரு..இன்னொரு போலீஸ்காரர்..!  -அதுலயே எனக்கு முடிவு தெரிஞ்சு போச்சு..!!! 

இருந்தாலும் விக்கிரமாதித்தன் மாதிரி 2 மணி நேரம் வெவ்வேற ஆங்கிள்ல அந்த ஏரியாவையே அலசி..ஒண்ணும் சிக்காம , அந்த கூட்டத்துக்கும் போக மனசு இல்லாம...
முழுமையா அந்த பெட்டியை திருட்டு கொடுத்துவிட்டு....
வேதாளம் மாதிரி வீடு வந்து சேந்தேன்..


அந்த நேரத்தில்....பாரதியார் நினைவில் வந்து சொன்னார்..

"வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான்........
கட்டுண்டோம்....பொறுத்திருப்போம்...!"

முக்கியமான கொடுமை.... அன்னிக்கு இரவுதான் சனிப்பெயர்ச்சி..!
தனிப் பக்கத்தில் காண →
06 Dec 2007அனுபவம்

பெட்டி கிடைச்சுப் போச்சு...!

பெட்டி தொலஞ்ச சோகத்தில் இருந்தாலும்...(இங்கதான் தொலச்சேன்

பாருங்க..) அது பஸ்ஸிலயே இருந்தா எப்படி இருந்திருக்கும்?

யாரும் தூக்கிட்டு போகாம இருக்கணுமேன்னு பல சிந்தனைல...
எதுக்கேன் கேட்டுப்பாப்போமின்னு..தொலச்சவனையே  நல்லா திட்டி..(நமக்கு அதுதானே தெரியும்..)திருச்சி பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி.. அதே பஸ் டிரைவர்கிட்ட கேட்டா ஒரு இனிப்பு சேதி.. பெட்டி பஸ்ஸில்தான் இருந்துச்சாம்..ஐயோ அப்புறம்.. இருக்காதா பின்னே?

அதை கோவைல ஒரு டிப்போல வச்சிருக்காங்களாம். அடையாளம் சொல்லி வாங்கிக்கலாமாம்.
அட்ரா சக்கை ! என் பொருள் வீண் போகாது.. அப்படியாக்கும் ..இப்படியாக்கும்னு பல்வேறு உதார்விட்டு... தங்கமணியையும் கூட்டிக்கிட்டு..(உல்லாசப்பயணம் + பெட்டி பேக் பண்ணினது அவுங்கதானே..) கோவை போனோம்ங்க.. அந்த டிப்போல ..நல்லா கவனிச்சாங்க..(அட.! உண்மைதாங்க..) என்னன்ன பொருள் எங்க வச்சீங்கன்னு கேட்டு சரிபாத்து..பெட்டியை கொடுக்கும்போது..சார் அன்னிக்கு ராத்திரி இந்த பெட்டியால நாங்க யாருமே தூங்கலை சார்..பஸ்ஸில் வேணும்னே யாரோ விட்டுட்டு போயிருக்காங்கன்னு..! குண்டு பயத்துல போலீஸெல்லாம் வச்சு மெதுவா திறந்தோம் சார்..! ன்னு அவுங்க பட்ட கஷ்டத்தையும் ஒரு பாட்டம் அழுது தீத்தாங்க.. ( ரொம்ப வெக்கமாத்தான் இருந்துச்சு...)தெரியாம இப்புடி நடந்துபோச்சுங்கன்னு சொல்லி (பெரிய நாட்டாமை...!)
மூக்கு ஒடஞ்ச பெட்டியை ( நெம்பித்தானே தெறந்திருக்காங்க..) எடுத்துக்கிட்டு நல்லபிள்ளையா சந்தோஷமா வூட்டுக்கு வந்தோம்..
அப்பாடி பெட்டி கிடைச்சிருச்சுன்னுதானே நினைக்கிறீங்க..அதுதான் விதி ஓரப்பார்வையால லந்தா பாத்திருக்குன்னு சொல்றது.. சரியா 15 நாள்ல அதுக்கு ஒரு ஆப்பு காத்திருந்த்து....! என்ன...?
தனிப் பக்கத்தில் காண →
03 Dec 2007விமர்சனம்

இது என்னங்க கூத்து...?

நம்ம ஊர் பக்கம் மொக்கச்சாமி மொக்கச்சாமின்னு ஒரு பையன்
இருக்காங்க..!

அவுக அப்பா பாவம்..ரொம்ப ஏழைப்பட்ட சீக்காளி..
அவன் +2ல நல்லா படிச்சுப்புட்டான்...அப்பா மாதிரி யாருக்கும் சீக்கு வரக்கூடாதுண்ணே..அதுக்காகவே டாக்டருக்குப் படிக்கிறேன்னு அரசாங்க மருத்துவக் கல்லூரில சேந்தாங்க..! படிச்சுட்டு என்னப்பு பண்ணுவன்னு...மேதாவித்தனமா நானும் கேக்க , நம்ம கிராமத்துல ஒரு ஆசுபத்திரி கட்டி சேவை (இடியாப்பம் இல்லங்கோ) செய்வேன்னு சொன்னாங்க..!

நானும் 'அடடா..என்ன ஒரு அக்கறையான புள்ளன்னு அகமகுந்து போயிருந்தேங்க..!

இடையில அவனப்பாக்கும்போது , அவனா வந்து பேசுவாங்க.. எப்புடி போகுது படிப்பெல்லாம்னு கேட்டா.உண்மையிலேயே நான் புண்ணியம் பண்ணிருக்கேண்ணே.பல பேரு லட்சக்கணக்குல செலவழிச்சு படிக்குற படிப்ப எனக்கு செல ஆயிரத்துலயே அரசாங்கம் குடுக்குதுண்ணே..மக்கள் கட்டுற வரிப்பணத்துலதாண்ணே நானெல்லாம் படிக்கிறேன்.. ஆனா..அதே
சலுகையை மார்க் வாங்கின ஒரே காரணத்துக்காகவும் கோட்டாலயும்
,சில டாக்டர் வீட்டு, பெரிய பணக்கார வீட்டு பசங்களும் அனுபவிச்சு
படிக்கிறாங்கண்ணே.. அதாண்ணே கொடுமை..! அப்டின்னு
பொலம்புவான்..!

இப்ப ஒருநாள், என் கெட்டநேரம்.. டிவி பாத்துக்கிட்டிருந்தேன்.. "ஆறரை ஆண்டு கால படிப்பாக மருத்துவப்படிப்பை மாற்றியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..!
ஒரு ஆண்டு கால கிராமப்புற சேவை அநாவசியம் என்று ஆர்ப்பாட்டம்..! "னு அந்த டிவிக்கார அம்மா புதுக்கவிதை மாதிரி சொன்னுச்சா...அப்புடியே ஒரு காலேஜ காட்ட, அதுல மாணவர்களெல்லாம் ஆவேசமா பேட்டி குடுக்க வர, மொதல்ல தாவி வந்தது... அட! நம்ம மொக்கச்சாமி..!
அவன் சொல்றான்....எங்களை வாழவிடாது இந்த அரசாங்கம்..! இத்தனை வருஷம் படிச்சுப்புட்டு கஷ்டப்படணுமா..? கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் உருவாக்கிப்புட்டு எங்க்ளை அனுப்புங்க...இந்த சட்டத்தை வாபஸ் பெறலைன்னா..சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் னு ஒரே சவுண்டு...!

அப்புடியே சாச்சுப்புட்டான்ங்க..!

எனக்கு சில சந்தேகங்கள்..! உங்களை மாதிரி சிந்திக்கிறவுங்கதான் தீத்துவைக்கணும்..

1. இவுங்களை யாராவது இழுத்துப்பிடிச்சி நீதான் மருத்துவ உலகத்துக்குத்தேவைன்னு கூட்டிட்டு வந்தாகளா?

2. கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் இருந்தா உன்னய எதுக்குடா சேவை செய்யச்சொல்லி கெஞ்சுறோம்..?

3. மருத்துவ சேவையை மட்டும்தான் சேவைன்னு சொல்றோம்..ஆனா அது தொழிலா மாறி பல வருசமாச்சுன்னு வெளிச்சம் போட்டு காட்டத்தான் இந்த போராட்டமோ ?

4. கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..?

5. சினிமா டைரக்டராகணுமுன்னா, படாத பாடுபட்டு..,இணையாவோ, துணையாவோ பேரு வரணும்னாலே  5, 6 வருஷம் ஆகும்ங்க..! அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர..! அந்த மாதிரி இல்லாம.. வெளில வந்தவுன்ன, ஒரு கிளினிக், ஒரு கார், ஒரு வீடு, ஒரு டாக்டரம்மா -நிச்சயம்னு தெரிஞ்சும்.. நம்ம மொக்கச்சாமி மாதிரி ஆளுங்க, அத ஒரு வருஷம் முன்னாடியே அடையணும்னு ஆசைப்படுறது ரொம்ப அநியாயம்தானுங்களே..?

6. இந்த படிப்பை மட்டும்தானே படிச்சு முடிச்சப்புறமும்... PRACTICE..ன்னு சொல்லுவாங்க..? அப்புறம்.. எங்க கிராமத்து ஆளுகள்கிட்ட அதைப்பண்ணித்தொலைக்க வேண்டியதுதானே..?

அதவிட பெருங்கூத்து...நம்ம 'கிழக்குவாசல்' , 'சூர்யவம்ச'மெல்லாம்...ஏதோ காந்திக்கு கொடைபிடிக்கப்போறமாறி போயி..அந்த டாக்டர்..குறிப்பா புள்ளங்ககிட்ட கடலை போடுறது..!பாவம் கிராமத்து ஆளுகளுக்கு எப்புடி தெரியும்? இவங்கள்லாம் நம்ம பயக இல்லின்னு..!

அமைச்சர் அன்புமணி பதவிக்கு வந்தது வேணும்னா விமர்சனத்துக்குரியதா இருக்கலாம்..ஆனா அவரு ரொம்ப நல்லதுதாங்க பண்றாரு...
அவர புரிஞ்சுக்காத இந்த எடுபட்ட பயலுக..கிராமத்துக்கு (அட..அதுக்கு ரூபா 8000 சம்பளம் வேறயாம்) போய் வேலை பாக்க மாட்டேன்னா.. காலேஜ விட்டுட்டு ..........க்கு போகட்டுங்க.!  
அதுவும்  முழுசா ஒரு வருஷம் கிராமத்தில்  இருக்க வேண்டாமாம்...
முதல் நான்கு மாதங்கள் - மக்கள் தொடர்பு பயிற்ச்சி.. [கிராமம்]
இரண்டாம் நான்கு மாதங்கள் - மருத்துவ சோதனைப்பயிற்ச்சி [துணை நகரம்]
மூன்றாம் நான்கு மாதங்கள் - இறுதி கட்ட திறனாய்வு பயிற்ச்சி [நகரம்]
இப்பிடித்தான் ஒரு வ்ருஷம் கணக்காம்...!


அய்யா...அத விட பெரிய கூத்து.. அது இன்னும் சட்டமாகலையாம்....அதுக்கப்புறம் வெளில வந்து நின்னாலாவாவது பரவாயில்லயாம்..! அட படிச்ச கிறுக்கங்களா...!

ஆனா.. இந்த விஷயத்துல மட்டும் அரசாங்கம் எறங்கிப்போச்சு...அப்புறம் ஹவுஸ் சர்ஜனாவும் இருக்க மாட்டோம்னு போராட்டம் பண்ணுவாய்ங்க மொக்கச்சாமிங்க..!

ஒன்று மட்டும் நிச்சயம்.... அதிக சலுகைகள் காலப்போக்கில் உரிமைகளாக கையாளப்படும் அவல உலகில் இருக்கிறோம்..!
தனிப் பக்கத்தில் காண →