சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
18 Dec 2007கதை

தாயாதாரம்..!

இதோ பாருங்க...ஒண்ணு நான் இந்த வீட்டில இருக்கணும்..!
இல்லன்னா உங்க அம்மா இருக்கணும். நீங்களே முடிவுக்கு
வாங்க.!

கல்யாணி இப்படி அதிரடியாய்பேசியதும், நான் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.

-ஏன் அம்மா எந்த தப்பும் பண்ணலயே ! அவுங்க உன்னிடமும்
பாசமாத்தானே இருக்காங்க.! அப்புறம் ஏன் பிடிக்கலைங்கிற?

-பிடிக்கறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்..! ஆனா பிடிக்காம போறதுக்கு காரணமே தேவையில்லங்க! இருந்தாலும் அவுங்க நடவடிக்கையும்.. கிராமத்து பேச்சும், ஒரு டிவி கூட
பாக்காத கொணமும்..மருதாயின்னு பேரும்..மொத்தத்துல பிடிக்கலை.. அவ்வளவுதான்.!
ரூம்ல டேபிள்ல 3 காப்பகத்துக்கான அப்ளிகேஷன்
வச்சிருக்கேன். எது நல்லதா படுதோ அதுல சேத்துவிட்டுடுங்க.!
என்னால மாரடிக்க முடியாது.
அதையும் மீறி இங்கதான் இருப்பாங்கன்னா..நான் கட்டாயமா
வீட்டைவிட்டு போயிடுவேன்.!

மிகவும் வேதனையாய் இருந்தது.
அம்மா கிராமத்துக்காரி! நானும் அங்குதான் வளர்ந்தேன். 12 வயதில அப்பா போய்விட, என்னை வளர்க்க அவள்பட்ட பாடுகொஞ்சம் அதிகம்தான்.! ஏதோ ஒரு வெறியில் நானும் படித்து
ஒரு கவுரவமான நிலைக்கு வந்து, நகரவாசியாகும் வரை நன்றாகத்தான் இருந்தது, கல்யாணியை காதலித்து கரம்பிடிக்கும்வரை..
அதற்குக்கூட அம்மா ஒரு வார்த்தை எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை.! மிகவும் சாந்தமாக 'உனக்கு நல்லதுன்னு பட்டா செஞ்சுக்கப்பா 'என்றாள்!

ஆனால் ஆரம்பம் முதலே கல்யாணிக்கு அம்மாவின் எளிமை
ஏளனத்துக்குள்ளாகி.. இன்று இப்படி வந்து நிற்கிறது!

நான் அமைதியாக வெளியே வந்தேன்.வாசலில் அம்மா , நேற்று போய்விட்டு வந்த கோவிலில் சாத்திய மாலையிலிருந்து நூலை எடுத்துக்கொண்டிருந்தாள்.

அம்மா!

என்ன கணேசு.!

உனக்கு இங்க கஷ்டமா இருக்காம்மா?

அதெல்லாம் இல்லப்பா..ஆனா வயசான என்னய வச்சுக்கிட்டு
நீங்கதான் கஷ்டப்படுறீங்க! நான் ஒரு யோசனை சொல்றேன்.கேக்குறியா..?


சொல்லும்மா!

இப்பதான் நல்ல நல்ல முதியோர் இல்லமெல்லாம் வந்துருச்சாமுல்ல! அதுல ஏதாவது ஒன்னுல என்ன சேத்துவிட்டுடு. ! ஆனா உனக்கு செலவு அதிகமாகாம பாத்துக்க..

கல்யாணி சத்தமாக சொன்னது கேட்டும், எப்படி நாசூக்காக வெளிப்படுத்துகிறாள் ! ..இவளைப்போய்...!

கலங்கிய கண்களுடன் ..சரிம்மா ! ஒரு ஏற்பாடு பண்றேன் என்றேன் முடிவாக..!

கல்யாணி ஆசையாய் வாங்கி வைத்திருந்த 3 விண்ணப்பங்களையும் பார்த்தேன்.

ஒன்றைத்தேர்வு செய்தேன். பூர்த்தி செய்து எடுத்துக்கொண்டேன்.

அன்று கல்யாணி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.
என் செல்லம்டா நீ! என்றெல்லாம் கொஞ்சினாள்.
அம்மா சலனமே இல்லாம கிளம்பிக்கொண்டிருந்தாள்!

-ஏங்க நானும் வரேங்க! அத்தையை கொண்டு விட எனக்கு

ஆசையா இருக்கு!

- கண்டிப்பா..நீ இல்லாமலா?

'முருகானந்தர் ஆதரவற்றோர் இல்லம்' என்ற பெயர்ப்பலகை போட்டிருந்த வாசலுக்குள் கார் நுழைந்தது.

சாலையின் இருபக்கமும் மரங்கள் செடிகள் என ரம்மியமான சூழல்.

- ரொம்ப நல்லா இருக்குல்லங்க..அத்த! நீங்க குடுத்து வச்சவங்க! கல்யாணி பெருமைப்பட்டாள்.

ஒரு மையமான கட்டிடத்தில்..மேலாளர் அறைக்குள்
நுழைந்தோம். கல்யாணி புன்முறுவலுடன் பின் தொடர்ந்தாள்.
அம்மா வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.

மேலாளர்
எங்கள் மூவரையும் அமரச்சொன்னார்.
நான் விண்ணப்பத்தை எடுத்து நீட்டினேன்.

பார்த்துவிட்டு மேலாளர் கேட்டார்..

இங்க சேரப்போற 'கல்யாணி'ங்கறது ....?

தனிப் பக்கத்தில் காண →
17 Dec 2007மொக்கை

ஊடலே இதற்கும் காரணி...!

இந்த கவிதை (மாதிரி).... பதிவா போட்டபிறகுதான்..

என் நண்பன் ஒருத்தன்
அழைப்பு நிலையத்தில் வேலை
பார்ப்பவன் சந்திச்சு பேசினான்.

அவனிடம் பேச்சுவாக்கில் இதுபத்தி சொல்ல.

அதையேன் கேக்குற?

அப்படி போனில் சந்தேகம் கேட்டு, எனக்கு மூட் சரியில்லாததால சண்டையாகி , அப்புறம் மெதுவா புரிஞ்சுக்கிட்டு ,காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவதான் என் மனைவின்னான்.

அப்படிப்போடு..! ன்னேன்.

அதுமட்டும் இல்லடா..! அவளும் ஒரு அழைப்பு மையத்தில் வேலைக்கு சேர..எனக்கு இரவு வேலை..அவளுக்கு பகலில்.!
ஆக வீட்டு வேலையெல்லாம் நான் செய்யவேண்டியிருந்தது..(இதுமட்டும் காரணமில்ல...! ஆனா வெளிப்படையா சொல்லுவாங்களா?)

அன்னிக்கு ஒரு நாள் அவ கிளம்பிக்கிட்டிருக்கும்போது வண்டி சாவியப்பாத்தீங்களா ன்னு என்னப்பாத்து கேக்க , ஏன் நான் உனக்கு வேலையாளான்னு நான் அலுப்பாக பேச.. அது மெதுவா பூதாகரமாகி சண்டையா வெடிக்க, உனக்காகத்தானே..உன் சுமை குறைக்கத்தானே வேலைக்கு போய் கண்டவன்கிட்ட திட்டுவாங்குறேன். இனிமே வீட்ட பாத்துக்கறேன். வேலைக்கு போகலன்னு திடீர்ன்னு எகிறி சத்தியாக்கிரகம் பண்ணிட்டு ரூமுக்குள்ள போயிட்டா..

ஐய்யய்யோ.. அப்புறம்..?

அன்னிக்கு அவளை சமாதானப்படுத்தப்போனப்பதான்...

சொல்லு... போனப்பதான்..

நம்ம ....மனோஜ்.....ஹி ஹி...(அவன் மகன் பேரு)

அடங்கொக்கமக்கா..! இதுல இவ்வளவு இருக்கா..?
தனிப் பக்கத்தில் காண →
14 Dec 2007கவிதை

ஊடலே யுத்த காரணி...!

இந்தியாவில் இப்பொழுது கால்சென்டர்கள் அதிகமாகி
விட்டது. குமாரசாமி உள்ளே சென்றதும் ஆடம்
ஆகிவிடுகிறான். மாதவியோ - மிஷல்....
இப்படியே போகும் வாழ்க்கையில்..உலகின் ஏதோவொரு
மூலையிலிருக்கும் ஒருவருக்கு பதில் சொல்லிக்கொண்டு
வசவுகளைவாங்கிக்கொண்டு வாழும் இவர்களால் என்னன்ன
நேரலாம் என்பதன் கற்பனை..!

இது ஒரு கவி(க்க)தை !


அலங்கோலமாய்க்கிடக்கும் வீட்டில்
இருவரும் வேலைசெல்லும் பரபரப்பில்!
அமீபாவாய் ஆரம்பித்த வார்த்தைகள்
அனகோண்டாவாக மாற...
ஆனந்துக்கும் , அகிலாவுக்கும்
ஆரம்பமானது சண்டை..!

அடிப்படைக்காரணம்.?
நேரமாகிவிட்டது இன்னும்
காலுறையைக்காணவில்லையாம்!
யாருக்கு பொறுப்பு என்று
பாப்பையா இல்லா பட்டிமன்றம்!

தடித்த வார்த்தைகளை
தவ்விப் பிடித்துக் கொண்டு
தகராறை முற்றவிட்டு
கணவனும் மனைவியும்
கால்சென்ட்டர் கிளம்புகிறார்கள் !

நிறுவனத்தில் நுழைந்து
தன் இருக்கைவந்து
' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு
அழைப்புக்காய் காத்திருக்கிறான்.!

'என்னமாய் பேசிவிட்டாள் !'
துடிக்கிறது உதடுகள்..
முதல் அழைப்பு வந்ததுமே
பதில்சொல்ல விழையும் முன்'
கேட்பவனின் கேள்வியில்
கடுகளவு கோபம்!
'உன் நிறுவன மடிக்கணிணியில்
இப்படி ஒரு பிரச்சனை!'
என்னவென்று விளக்கவேண்டிய
இவன் பதிலும் இனிமையில்லை.!

இவன் பொறுமையெல்லாம்
எப்போதோ போய்விட்டது!
அதை எடுத்து மடித்துக்கொண்டு
அவள் காலை சென்றுவிட்டாள்

இது தெரியா எதிராளி
எதிர்க்கேள்வி கேட்டுவைக்க
எரிந்து விழுந்து முழங்குகிறான்..
"என்னய்யா ஆட்கள் நீங்கள்?
இது கூடத்தெரியாமல்?
என் உயிரை வாங்குகிறீர்?"

பேச்சுவார்த்தை தடிக்கிறது.
அவன் பேச
இவன் பேச
ஆத்திரம் அதிகம் பேச
மொத்ததில் அவ்வழைப்பு
மூர்க்கமாய் முடிகிறது !

முடிந்த அழைப்புக்குப்பின்
முகம்தாங்கி சிந்தித்து
எவனோ ஒருவன்
இன்றுவந்து
என் வாயில் சிக்கினானே
என்னவெல்லாம் பேசிவிட்டேன்
என்று எண்ணி மாய்ந்து போனான்!

அது...
வேறொரு நாடு!
அதிபர் மாளிகையின் அவசரக்கூட்டம்!
இராணுவத்தளபதி
அவர்தன் செயலரை
அச் செய்தி தயாரா?
என்று அவசரமாய் கேட்டுவைக்க
'அய்யா ! அத்தகவலெல்லாம்
இந்த மடிக்கணிணியில் போட்டு
மறக்காமல் எடுத்து வைத்தேன்'!

அந்தக் கணிணியிலே
ஏதோ கோளாறு!
கோளாறு சரிசெய்யும்
நிறுவனத்தை தொடர்பு கொண்டால்
மரியாதை இல்லாமல்
ஒரு மனிதன் பேசுகிறான்..!"
என்று கூறி வருந்தி நிற்க,

'அதுவெல்லாம் தெரியாது.
எனக்குடனே சரியாகி
கூட்டத்தில் காட்டவேண்டும்.!
அதிபர் முன்னிலையில்
என் கவுரவம் சரிந்துவிடும்.
ஏதாவது செய்து
சரியாகக் கொணருங்கள்!
என்றந்தத் தளபதியும்
எடுத்தெரிந்து பேசிவிட..

நிறுவனத்தை தொடர்புகொள்ள
நேரமில்லை செயலருக்கு,
அலுவலகத்தில் வேலைபார்க்கும்
ஆண்டனியைக்கூப்பிட்டு
காகிதத்தின் குறிப்புகளை
அவசரப்படியெடுத்து
அனுப்பிவிட்டார்
தளபதிக்கு!

தவறான தகவலென்றே
தெரியாமல் தளபதியும்
அதிபரிடம் எடுத்துவைக்க..!
அவர் தந்த விபரப்படி
அயல்நாட்டின் மீது
அபாண்டம் ஏறிநிற்க

அதிபரும்;
"எடுக்கிறேன் பார் நடவடிக்கை !"
என்றுலகில் சீறிவைக்க

தொடங்கியது யுத்தம்!
யுத்ததில் பல நாடும்
தன்படையை அனுப்பிவைக்க,
உலகமே இருதரப்பாய்
உடைந்து நிற்கிறது.

போர்க்களம் கண்ட நாட்டில்
சீறிப்பாயும் குண்டுகளை
சி என் என் காட்டும்போது

அத்தனை செய்திகளையும்
அகிலாவின்
அரவணைப்பில்
தொலைக்காட்சியில்
இரசிப்பது....

நமது  

ஆனந்த்.!!!!      

(இதுக்கு இன்னொரு முடிவுத்தொடுப்பும் இருக்கு....அடுத்த பதிவுல    .....அதுதான்..!)


தனிப் பக்கத்தில் காண →
13 Dec 2007கவிதை

உறவுகள் - பாகம் 2


பிரபஞ்சத்தை சிந்தியுங்கள்!
சூரியனைச் சுற்றிவந்து
வெளிச்சம் வாங்கிச் செல்லுகிறோம்

அவனில்லாத வேளைகளில்
மின்விளக்கே சூரியன்
மின்சாரம் இல்லையென்றால்
மெழுகுவர்த்தி சூரியன்
நெருப்பொளியும் இல்லையென்றால்
சந்திரனே சூரியன்
அன்று அமாவாசையென்றால்
இருள்தானே நிரந்தரம்!
இதுதான் நமதுவாழ்வும்...

துன்பம்தான் நிரந்தரம்!
இன்பம் நிரப்பிக்கொள்ளத்தான்
எத்தனை எத்தனை உறவுகள்
நட்பு, பெற்றோர்,துணைக்கெல்லாம்
நான்கே பெயர்தான் உள்ளது!
உறவினம் மட்டும் உங்களுக்கு
எத்தனை பெயரில் உள்ளது?

அன்பான அண்ணன், தம்பி
ஆசையான அக்காள் தங்கை
மானம் காக்கும் மாமன்,மச்சான்
ஒத்துப்போகும் ஓரகத்தி
சொன்னது கேட்கும் கொழுந்தன்
சந்தோஷம் தரும் சகலை
பேரன்பு கொண்ட பெரியப்பா,பெரியம்மா
சீராட்டும் சித்தப்பா, சித்தி
பாசம்காட்டும் பேரன் பேத்தி
பக்குவம் காட்டும் மாமியார், மாமனார்
அன்புக்கென்றே பிறந்த அண்ணி
அதற்கும் மேல் அத்தான் என்று
ஆயிரமாயிரம் உறவுகள் !
பட்டியலை நீட்டலாம்
பகலவனின் கதிர்களாக..!

அண்ணன் தம்பியென்ற
அற்புதம் தரும் சுகம்
என்னவென்று கண்ட
இராமனைக்கேளுங்கள்!
இராமாயணமே சொல்லுவான்.
துன்பமான நேரத்தில்
தூக்கிவிட்டு உதவிய
பக்த நண்பர்களையே
தம்பியாக்கிய அண்ணன் அவன்!

மாமனின் உறவை
மகத்தானதாக்கியவன்
மகாபாரதத்தின்
மாமன் கண்ணன் !
அவன் சொன்ன போதனைதான்
கீதையாய் தென்றல் வீசி
மனம் மலர வைக்கிறது..!

புராணகாலம் வேண்டாமென்றால்
இந்தக்காலம் வருகிறேன் !

தேசத்தில் பாசம் கொண்ட
மாபெரும் காந்தியை
தேசத் தந்தை என்கிறோம்!

நேசம் கொண்ட தலைவரை
நேரு மாமா என்கிறோம்!

அறிவுரை சொன்ன
கிழவியை
அவ்வைப் பாட்டி என்கிறோம்!

அன்பே உருவான மாதரசியை
அன்னை தெரசா
என்கிறோம்!

அருள் போதிக்கும்
போதகரை
"அப்பா", "சகோதரன்"
என்கிறோம்!

பணிவிடை செய்யும்
தாதியரை
சகோதரி
என்கிறோம்

இதைப்படிக்கும்
இந்நேரம்
உங்கள் கண்களுக்குள்
உறவுகளின் நற்செயல்கள்
ஒவ்வொன்றாய் விரியட்டும்!
கண நேரம் கண்மூடி
கனமாகச் சிந்தியுங்கள்!

எத்தனை அற்புதத் தருணங்கள்!?
திருவிழா
திருமணம்
காதுகுத்து
வளைகாப்பு
சடங்கு
என்று..!
உறவுகள் உங்களை
உயிர்ப்பித்த நேரங்கள்!

உரசல்களைத்தள்ளிவிட்டு
உறவுகளை அள்ளுங்கள்!
உங்கள் இன்ப வாழ்க்கைக்கு
வாழ்நாள் உத்தரவாதம்
நான் தந்து
மகிழ்கிறேன்.

உலகில் உங்களைத்
தொலைத்தால்
உறவுகள் கைகொடுக்கும்.!
உறவுகளில் உங்களைத்
தொலைத்துப்பாருங்கள்!
உலகமே
கைகொடுக்கும்..!

(அப்பாடி...முடிச்சாச்சு..)

இந்த 7 நிமிட ..............யை (கவிதைன்னு போட பயம்மா இருக்கு)
ஒரு தனியார் தொலைக்காட்சியின்
தீபாவளி கவியரங்கத்துல
நான் படிச்சேன்.

தீபாவளியின்
திரைப்பட சிறப்பு நிகழ்ச்சிகள்
பாத்ததுல சரியா கவனிக்காமலோ
தப்பித்தோ போயிருப்பீங்க!

ஆனா விரட்டி வந்து இங்க
பதிஞ்சோம்ல..!


அதான் பின்னணி.!


தனிப் பக்கத்தில் காண →
13 Dec 2007கவிதை

உறவுகள்

பெற்றோரின் அன்பில்
பூரித்தல் இன்பம்!
நண்பர்கள் நட்பில்
நனைதலும் இன்பம்!
என்று எங்கள் இன்பம்
என்றென்றும் இன்பம்?

எண்ணி எண்ணி
மாய்ந்ததில்
எழுந்தன சில
வார்த்தைகள்!

வார்த்தைகளைக் கோர்த்து
வரிகளாக்கி
நிமிர்ந்து பார்த்தால்
எட்டிப்பார்த்து மகிழ்விக்கின்றன
என்னுள் அத்தனை
உறவினமும்!

வெளியூரில் வேலை கிடைத்து
வெற்றிகாணச் செல்லும்
வெறியுள்ள இளைஞனை
சற்று நிறுத்திக் கேளுங்கள்!
தம்பீ ! எங்கு தங்குவாய் !
' மாமன் வீடு இருக்கிறது.
அங்குதான் தங்குவேனென்பான்.

கட்டாய வேலையாக
கல்கத்தா செல்லுங்கள்!
புகைவண்டி நிலையம் வந்து
கூட்டிச்செல்வான்
அக்காள் மகன்!

பொருளாதார இக்கட்டை
புறங்கையால் தள்ளிவிட்டு
புத்துணர்வு கொள்ளும்
ஒற்றை மனிதனின்
மகிழ்ச்சிக்குப்பின்னால்
முகம் தெரியாத சித்தப்பாவின்
பண உதவி மறைந்திருக்கும்!

ஆளே இல்லாத ஊருக்கு
உங்களை அனுப்பிவிட்டு
அடுத்த மணி நேரத்தில்
அங்கொருவன் வந்து சேர்ந்து
இருவரும் பேசத்தொடங்கி
நன்கு பழகி உங்களுக்குள்
விளிக்கும் நாள் வரும்போது
வயதில் மூத்திருந்தால்
'அண்ணே'
வயது குறைந்திருந்தால்
'தம்பீ'
சம வயதிருந்தால்
'மாப்ளே'
என்றழைத்து
நட்பையும் உறவாக
மாற்றித்தான் மகிழ்வீர்கள்!

சில நாட்கள் முன்னர்
சிதறுண்டு கிடந்த நீங்கள்
ஒரே வாழ்க்கையில்
நுழைந்த பின்னர்
பெயர் சொல்லி அழைக்காமல்
உறவு சொல்லி அழைக்க
எந்த சட்டம் சொல்லியது?
அதுதான் இல்லை
உங்கள் 'சந்தோஷம்' சொல்லியது!

பெரியவர் ஒருவர்
உங்களை வழிநடத்த
நல்வழி கண்டு
நயம்பெற வாழும் நீங்கள்
அவரை உலகுக்கு
அறிமுகப்படுத்துவது
'இவர் எனக்கு அப்பா மாதிரி' !

கதை சொல்லும் யாவரும்
கண்ணிய கதைகள்
அன்பாகச் சொன்னபின்னர்
அந்தக்கால கதைகளுக்கு
அவர்கள் இடும் அடையாளம்
' பாட்டி சொன்ன கதை'

அப்பா அம்மா இல்லையென்றால்
அநாதை என்கிறோம்
அத்தனை அநாதைகளும்
விடுதிக்கு வருவதில்லை
வராத அவர்களுக்கு
அன்பான உறவிருக்கும்!

- உறவுகள் தொடரும்....

(கவிதையாவே நினைத்து படிக்கவும். இதன் பின்னணியில் ஒரு  தகவல் இருக்கிறது )
தனிப் பக்கத்தில் காண →