சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
29 Dec 2007விமர்சனம்

இதையும் விமர்சனம் பண்ணினா என்ன ?

சினிமாவைத்தான் விமர்சிக்கம்னு இல்ல ! மெகா சீரியலும் நம்ப வீட்டுக்குள்ளயே வந்து டிக்கட் வாங்கிக்காமலே டார்ச்சர் பண்ணுதுல்ல.! அதயும் விமர்சனம் பண்ணினா என்னன்னு..... இறங்கிட்டேன்.

சினிமாவில்.. சில சீன்கள் நடந்திட்டிருக்கும்போது எழுந்து போய் வந்தால் கதைத்திருப்பத்தை கவனிக்கமுடியாம போயிடும்.
ஆனா நெடுந்தொடர்களுக்கு அதிலிருந்தும் விலக்கு இருக்கு.! பலமாசம் பாக்காம இருந்தாலும் பளிச்சுன்னு விட்ட இடத்திலிருந்து கதை புரியும்.

சரி நம்ம விமர்சனத்துக்கு வருவோம்.

கோலங்கள் னு ஒரு தொடர் வருது.!

முதல்ல வேகமா நடந்தும் ஓடியும்..தேவயானி ஒரு பாட்டு பாடுவாங்க ! (அது விளம்பரதாரர்கள் நிலையப்பொறுத்து சுருக்கமாவும், சில நாள் முழுசாவும் இருக்கும்)

அப்புறம் கதை ...எதை?

அபின்னு ஒரு பொண்ணு (எப்பவுமே ஒரு பையோடயே அலையும்) வேலைக்கு போகுது..அதுக்கு ஒரு கல்யாணம் ஆகி புருசன் குடும்பத்தோட அநியாயத்தை பொறுத்துக்குது..! அவனும் டைவர்ஸ் பண்ணிடுறான்..! அப்புறம் வேலைபாக்குற இடத்தில் முதலாளி நிறுவனத்தை விற்றுவிட புது முதலாளியோட அராஜகம் பொறுக்காம பொங்கி எழுந்து..அழுதுக்கிட்டே வெளில வந்து, புதுசா கம்பெனி ஆரம்பிச்சு புதுமுதலாளி ஆதிக்கு போட்டியா நிக்கிது..அவனும் பலப்பல டார்ச்சர் கொடுத்துப்பாக்குறான். அபியைக்கொல்ல போடுற திட்டத்துல எல்லாம் பாவம்.. வேற ஒரு கேரக்டருக்கு ஆப்பு..! அவுங்க எல்லாத்துலயும் தப்பிச்சு தொல்காப்பியன்கிற நண்பரோட கோர்ட், ஜெயில், கேரளா, ஆஸ்பத்திரின்னு பலப்பல இடங்களில் போராடி ஆதிக்கு சவாலா விடுது..! இதெல்லாம் நடக்கிறபோது இடையில் நமக்கு ஒரு அதிர்ச்சி.....! ஆதியும் , அபியும் அக்கா தம்பி..! இரண்டு அம்மா..ஒரே அப்பா. அதுக்கும்மேல பலப்பல கிளைக்கதைகளோட தொடர் போயிட்டிருக்கு!

இதில் அபி, ஆதி, ஆர்த்தி, அஞ்சலி, தொல்காப்பியன், ஈஸ்வரன், சங்கரபாண்டியன், கற்பகம் , உஷா, பாஸ்கர், தோழர், மனோ, அனு, சித்தப்பா, ராஜேஷ், வித்யா மற்றும் பலப்பல பாத்திரங்கள் (கல்யாணச் சீர் மாதிரி) நடந்திருக்கிறார்கள். மேலும் தில்லா, சல்பேட்டா சரோஜா, சாந்தின்னு சில பாத்திரங்கள் கதை முடிஞ்சு போச்சு!

அபி - தேவயானி, இயக்குநர் திருச்செல்வம் - தொல்காப்பியன் (மெட்டி ஒலி தொடரில் சந்தோஷ் என்ற பெயரில் நன்றாக நடித்தவர்)
தயாரிப்பு - விமர்சனங்களுக்கு பெயர்போன விகடனின் ஒளித்திரை.

முதலில் இந்தத்தொடரைப்பொறுத்தவரை...


நல்லவர்கள் சிரமப்பட்டுக்கொண்டே இருப்பார்கள், கெட்டவர்கள் நன்றாக இருப்பார்கள் என்ற இந்தக்காலத்துக்கு(? )பொருத்தமான கதை.

விவாகரத்து பண்ணின புருஷனை இவுங்க நம்பி வேலைக்கு சேத்துக்குவாங்களாம். அவனும் மறுபடியும் தப்புதான் பண்ணுவானாம்.

- அவன் மோசம்னு தெரிஞ்சுதானே விவாகரத்தே பண்ணுனீங்க?அப்புறம் ஏன் அவனை சேத்துக்கணும்? சரி சேத்துக்கிட்ட.. அவன் ஏன் அப்படியே துரோகம் பண்றவனாவே காட்டணும். ? அதாவது.

நீதி நம்பர் 1 : கெட்டவனுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் திருந்தமாட்டான் . நல்லவன் இளிச்சவாயன்.!

சல்பேட்டா சரோஜான்னு ஒரு வில்லி -தன் தம்பிகள் எதிர்காலத்துக்காக - திருந்துவாளாம். அவளை வில்லனின் மிரட்டலால் தம்பிகளே கொன்னுடுவாங்களாம்.!

ஒருத்தன் திருந்தினா அவன் மூலமா எந்த மாதிரி நல்லது நடந்தாலும் சகிக்கக்கூடாதா? கோர்ட்ல வச்சு சுடறது எப்படின்னு பாடம்வேற எடுக்கணுமா? (ஏற்கனவே நடந்துக்கிட்டுதானே இருக்கு)

நீதி நம்பர் 2 : கெட்டவன் திருந்தினாலும் உயிரோடு இருக்கமுடியாது.! சொந்த தம்பிகள்கூட கொல்வார்கள் !


தொல்காப்பியனை , கங்கான்னு ஒரு பொண்ணு காதலிக்கும். அவரும் அப்படியே! ஆனா அந்தப்பொண்ணு , அவர் நிறுவனத்தை அழிக்கறதுக்காக என்னவேணும்னாலும் செய்யும். நான் வேணும்னா உன் நட்பை விட்டுட்டு வான்னு காரணமே இல்லாம மிரட்டும்.

காதலிச்சாலும் , சொந்த விருப்பு சரி...! வெறுப்புக்காக என்னவேணும்னாலும் செய்யலாமா.? காதலி தன் தலைல கல்லையே தூக்கிப்போட்டாலும் நிறுவனத்துக்கு பங்கம் வந்தாலும், அவள் காதலில் உண்மை இல்லைன்னு தெரிஞ்சும் அவளை காப்பாத்த முயற்சி செய்யிறவனை....என்ன சொல்றது?


நீதி நம்பர் 3 : நல்லவன்னா காதலி என்ன செஞ்சாலும் பொறுத்துக்கிட்டு இருக்கணும். நல்ல காதலி , காதலனோட நண்பர்களை அழிக்கணும்னு நினைப்பாள்.


ஆதி சொந்த அப்பாவையே கடத்தியாவது சொத்தை எழுதி வாங்குவாராம். ஆனா குடும்பத்துல ரொம்ப பாசமா இருப்பாராம். அவர் கத்திப்பேசியே காரியம் சாதிப்பாராம். எப்பப்பாத்தாலும் அடுத்தவங்களை அழிக்க நினைச்சுக்கிட்டே இருப்பாராம்.

வில்லன்னா எந்த கடைசி வரைக்கும் போவான்னு காட்டிக்காட்டித்தானேப்பா இப்புடி இருக்கோம். அதுவும் அவன் கத்துற கத்தும் அவனது பாத்திரத்தை சித்தரிக்கும் விதமும்... அய்யோ!

நீதி நம்பர் 4: கெட்டவன், கெட்டது செய்யுறதை முழுநேரத்தொழிலாவும் , பகுதி நேரத்தொழிலா கட்டுமானப்பணியும் செய்வான்.

தில்லான்னு ஒரு போலீஸ் அதிகாரி. வில்லனுக்கு அரசாங்க அடியாள்! இவர்தான் அவர் சம்பந்தப்பட்ட எல்லா(!) வழக்குக்கும் போலீஸ் அதிகாரி.! நல்லவுங்க எல்லாரையும் டார்ச்சர் செய்யும் பொறுப்பு இவருக்கு! சட்டத்தின் இண்டு இடுக்கெல்லாம் போய் அபியை மூலை (corner) பண்ணுவாரு..! நல்லவேளை...(பாருங்க) இன்னொரு நல்லவன் மூலமா இறந்து போயிடுறாரு.!

ஒரு போலீஸ்காரனுக்கு வேற வேலையே கிடையாதா!? காசு வாங்கிட்டாங்கறதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாமா? அதெப்படி அவ்வளவு பெரிய சென்னைல கெட்டவனுக்கும் நல்லவனுக்கும் நடக்குற எல்லா பிரச்னைகளும் இவர் ஸ்டேஷன் லிமிட்லயே வருது..?

நீதி நம்பர் 5 : கெட்டவனுக்கு போலீஸ் பக்கபலமா இருக்கும். போலீஸ் முடிவுக்கு வந்துட்டா உலகத்துல எந்த மூலைல நல்லவன் இருந்தாலும்....செத்தான்.!


அய்யய்யோ இதுக்கு மேல என்னால சொல்ல முடியல..
இயக்குநரின் மனநிலையை படைப்புகள் பிரதிபலிக்கும்னு சொல்லுவாங்க..!

இதுதான் அந்த இயக்குநரின் மனநிலையா.. ? இல்லை கதைநிலையா..? யாராவது எடுத்துச்சொன்னா மாத்திக்குங்க தலைவா.!

வீட்டுல , புள்ளைங்களெல்லாம் பாக்குது! கெட்டவனா இருக்குறதுதான் சுலபம், ரொம்ப நல்லதுன்னு மனசுல ஏத்தி அடுத்த சமுதாயத்த மண்ணா ஆக்கிறாதீங்க..! அதெப்படி டிவி பாத்து மாறுவாங்கன்னு கேக்குறீங்களா ?இப்பதான் பவர் ரேஞ்சரா சுத்துராங்களே.!

நல்லவனா இருக்குறதோட பயன்களை காட்டலைன்னாகூட பரவாயில்லை. அதன் கொடுமைகளை அதிகமாகாட்டி நல்லவனா வாழுற மனுசங்க மனசுல கும்மி அடிச்சுட்டு போயிராதீங்க !
தனிப் பக்கத்தில் காண →
26 Dec 2007அனுபவம்

அந்தக் கோரம் நடந்த நாள்..!

டிசம்பர் 26...

கிருஸ்துமஸ் முடித்த மகிழ்வோடு சந்தோஷமாக இருந்த பல குடும்பங்களில், இயற்கை தன் இன்னொரு முகத்தை அதிகக் கோரமாக காட்டிய நாள்.!

அன்று கேட்ட அவலக்குரல்கள்..! வேளாங்கண்ணி கடற்கரையில் நாங்கள் அள்ளிப்போட்ட மனித உடல்கள் !

இன்றும் கனவில் வந்து காப்பாற்றச் சொல்லும் உயிர்கள் !

உடைகள், உறவுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதியாய் நின்ற குடும்பங்கள் !

அய்யா ! பழைய துணி தருவதை நிறுத்திவிட்டு வாழ்வதற்கு வழி காட்டுங்கள் ! நாங்கள் இதே பூமியில் கோடிகளோடு வாழ்ந்தவர்கள் என்று எழும்பிய தன்மானக்குரல்கள்.!

நானும் குழிக்குள் விழுந்துவிடுகிறேன்.. என்னையும் புதையுங்கள் என்று குதித்த பெண்ணின் மரண வேட்கை!

நடந்த கொடுமை அறியாமல் உணவு வாங்க வரிசையாய் நின்றபோது அடுத்த பெண்ணின் சடை இழுத்து விளையாடியஅந்த மூன்று வயது சிறுவன்!

தன் குழந்தை இழந்துவிட்டு பிழைத்த சிறு குழந்தைகளில் 3 பேருக்கு பால் கொடுத்த அந்த தாய் தேவதை !

பல கிராமங்களை ஒன்றுமில்லாமல் சுருட்டிவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் அமைதியாய் காட்சிதந்த சமுத்திரத்தின் வில்லத்தனம் !

மறக்கமுடியா நினைவுகள்...! வேடிக்கை பார்க்கவும், உதவிகள் செய்யவும் சென்றவர்களுக்கே இப்படியென்றால் , பாதிக்கப்பட்டவர்களுக்கு..?

அவர்களுக்காய் பிரார்த்திப்போம்.! கடவுளை நம்பவில்லையென்றால் இயலாதவர்க்கு ஒரு கை கொடுத்தாவது துயர் துடைப்போம்.!

ஆனால்.. இது மீண்டும் நிகழாமல் தடுக்க, என்னன்ன செய்யலாம்..?

பதிவளிப்போம்.!

தனிப் பக்கத்தில் காண →
24 Dec 2007நடப்பு

ஒரு நல்ல காரியம்...




நேத்து (23.12.07) ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்ல காரியம் பண்ணினேங்க.!

ஈஷா பசுமைக்கரங்கள் சார்பா 2.5 கோடி மரங்கள் நடும் விழா கொண்டாடினாங்க.!
           
           நமக்கும் அதுல ஈடுபாடு இருக்குறதால.. அந்த விழாவில் பங்கெடுத்துக்குற வாய்ப்பு கிடைச்சதுங்க..! (நன்றியுரையெல்லாம் சொன்னோமுல்ல..)நேரா காலைல கிளம்பி அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் சுமார் 2000 மரக்கன்றுகள் நட்டோம். அதில் நான் குறைந்த பட்சம் 10% நட்டிருப்பேன். 200 மரக்கன்றுகளை ஒரு நாளில் நட்டபோது கிடைத்த திருப்தி இருக்கிறதே..!

அடடா...! அதுக்கு ஈடு இணை இல்லங்க!

     மாலையில் ஒரு விழாவுடன் இனிதே நாளை முடித்தோம். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு. S. ரகுபதி அவர்கள் வந்து நிறைய புள்ளிவிவரங்களுடன் பேசினார்கள். தமிழகத்தின் நீராதாரம் இனி பிற மாநிலங்களல்ல.. மரங்கள்தான் என்றார்.
மிகவும் மகிழ்வுடன்...இந்த மண்ணுக்கு ஏதோ செய்த திருப்தியுடன் தூங்கினேன்.
(ஆனா இதுவும் நம்மை வறட்சியிலிருந்து காப்பாற்றும் ஒரு சுயநல முயற்சிதான்..!)

நமக்கு வாழ இடம் தந்து
இயற்கை வளமனைத்தும் தந்து
உணவுப்பொருள் ஒன்றுவிடாமல் தந்த
புவியன்னைக்கு
வயிற்றில் பால் வார்க்கவேண்டாம்.
கொஞ்சம் நீர்வார்க்கவாவது
முயற்சிக்கலாம்
அதற்கு மரம் நட்டால் போதும்.!
மிச்சத்தை அவள் பார்த்துக்கொள்வாள்!

முடிஞ்சா இன்னிக்கே ஒரு மரக்கன்று நடுங்க.!
ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் கண்டிப்பா நடுங்க.!
இதுலயும் நடுவரா இருக்கலாம்.. :-)

தனிப் பக்கத்தில் காண →
24 Dec 2007கவிதை

இதுவும் ஒரு சாமி...!

அய்யா..

ஏம்பேரு கந்தக சாமி!
பொறந்த எடம் பூமிதாஞ் சாமி!
நான் வானத்தில் இல்லாத சாமி
ஆனா வாணம் செய்யுற சாமி!

நாம்பாட்டுக்கும் செவனேன்னு
நல்லகாலம் பொறக்குமுன்னு
மண்ணுக்குள்ள மகிழ்ச்சியா
மக்கிக்கெடந்தேன் சாமி!

என்னயத்தேடிவந்து
எக்குத்தப்பா நோண்டித்தந்து
எதுக்காவது பயன்படுவேன்னு
எப்படியோ கண்டுக்கிட்டாங்க.!

மொதல்ல நாம்பாட்டுக்கும்
மொறயாத்தான் இருந்தேன்.
பொறவியிலேயே நமக்கு
கோபம் கொஞ்சம் அதிகம் சாமி!
அதப்போய் மறந்துப்புட்டு
அடக்கிவச்சு அடக்கிவச்சு
அழுத்தமா மூடிவச்சு
ஒருநாள் வெடிக்கவச்சு
ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்டாங்க!

நானும் சும்மா இல்ல..
நாலஞ்சு பயலுகளை நயமா
நரகத்துக்கனுப்பிட்டு..

அதெப்புடி
நரகம் னு
அசதியா கேக்குறீகளா?
என்னய தூக்கிப்போட்டு
எகனை மொகனையா
வெளயாண்டவன்
எப்புடி சாமி சொர்க்கம் போவான்?

நல்லதே நடக்காதான்னு
கலங்கிப்போய் கெடந்தப்பதான்
பளபளப்பா எரிய வச்சு
பட்டாசா மாத்தி என்னை
பார்புகழ வச்சாங்க.!

சிவகாசிப்பக்கம்
அந்த சின்னப்புள்ளைங்க
என்னைத்தொட்டு
வேலைபாத்து
அவுக தாத்தா பட்ட கடன
தடுமாறி அடச்சாங்க!

அதுல ஒரு கொடுமை சாமி!
ஏங்கொணம் எனக்கே பிடிக்காது.
மனுசப்பய மாதிரியே
எங்க இருக்கோம்னு தெரியாம
ஏறிக்குதிச்சுப்புடுவேன்.
அப்புடித்தான் செலபேர
அழிக்கவேண்டியதா போச்சு!

எல்லாப்பயலுக்குள்ளும்
எங்கேயோ நான் இருக்கேன்
கோபம் சேமிக்காம
கொதிச்செழுந்து வர்றவனும்
கோபத்துக்கே பொறந்த நானும்
கிட்டத்தட்ட ஒண்ணுதான்!

நல்லவன் ஒருத்தன
நசுக்க நெனக்கிறவன்
ஒருத்தன குறிவச்சு
ஒரு கூட்டம் கொல்லுறவன்
அத்தன பேருந்தான்
என்னோட மொதலாளி!
ஆனாலும் பலதடவை
அவனுக்கே நான் கொலையாளி!

நாட்டு வெடிகுண்டா
நெறய நாள் இருந்திருக்கேன்.!
நக்ஸலைட் பொக்கிஷமா
நாந்தானே எப்பவுமே!

சீனாக்காரன் என் சித்தப்பா
மொறவேணும்
ஆனா இந்த அமெரிக்கா.?
அண்ணன் மொற வேணும்.!
என்னய விட மோசமா
இடம் பொருள் பாக்காம
எதுத்தவன அடிக்கும் பய!

இப்பல்லாம் நமக்கு
வயசாகிப்போச்சு சாமி!
இளந்தாரிப்பயலுக
பலபேரு வந்துட்டாய்ங்க!

டெட்டனேட்டர் பூதம்கிறான்
ஆர் டி எக்ஸ் ங்குறான்!
பாஸ்பரஸ் பாமுங்குறான்!
பெட்ரோல் வெடிகுண்டுங்குறான்!

டைனமைட்டுன்னு ஒரு
சாத்தான செஞ்சவரு
தப்பால்ல போயிருச்சுன்னு
நோபல் பரிசு செஞ்சு
நல்லபேர வாங்கிக்கிட்டாராம்.!

என்னய கண்டபய
என்ன புண்ணியம் செஞ்சாலும்
என் பாவம் கழுவ
இன்னும் எவனும் பொறக்கல !

ஆனாலும் நாந்தான் சாமி
அத்தனைக்கும் மூத்த சாமி!
ஏன்? னு கேளு சாமி
எனக்கப்புறம் இங்க
எத்தனைபேர் வந்தாலும்
மொதல்ல வெடிச்சது
நாந்தான் சாமி!

இருந்தாலும் எனக்கு
மனசு கொதிக்குது சாமி!
எத்தனை பேரை
கொன்னுருப்பேன்!
எத்தன நிம்மதி
தின்னுருப்பேன்!
இதெல்லாம் வேணாம்னு
இப்பவே முடிவெடுத்து
என்னய மறுபடியும்
எடுத்த எடத்துலயே
புதைங்க சாமி!

அப்படிச்செய்யலைன்னா
அதுவரைக்கும்...

ஆக்கலுக்கு யாருன்னு
அடிச்சுக்குங்க சாமி!
காத்தலைப்பத்தி நானும்
கவலைப்படல சாமி!
அழிக்கறதுக்கு
நமக்குத்தான்
ஆணை இருக்கு சாமி!
அழிச்சுக்கிட்டே இருப்போம் சாமி!
அதுனால எங்களை
அழித்தல் கடவுளா
ஆக்கிருங்க சாமி!

அதுக்கப்புறம் இங்கு நான்
கடவுள் வரிசையிலே...
 கந்தகசாமி!
தனிப் பக்கத்தில் காண →
24 Dec 2007தத்துவம் மாதிரி

நேர்மைன்னா என்னங்க?

நேர்மை என்றால் என்ன?

-அது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்.

ஏன் ஒவ்வாது..?

-ஏனெனில் இவ்வுலகில் யாருமே நேர்மையாக இல்லை.இப்படித்தான் நம் பதில்கள் இருக்கும்.
கொஞ்சம் அடிப்படையாக சிந்திப்போம்.

ஒருவர் நேர்மையானவராக இச்சூழலில் இருந்தால், அவரை 'புதிய ஜந்து' மாதிரி பார்க்கிறோம். ஆனால் , கொடுமை என்னவென்றால், மனிதனின் பொதுவான குணங்களில் ஒன்றுதான் நேர்மை..!

நம் அனைவருக்கும் (பெரும்பான்மையாக) 18 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். அனைவரும் இரு சக்கர வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களாக இருப்போம். நகர வீதிகளில் சிறப்பாக ஓட்டிச்சென்றிருப்போம்.நம்மில் எத்தனைபேரிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறது?நம்மை யாரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டியதில்லை என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் நாம்
வாங்குவதில்லை. ஏன்..? நேரமில்லை.. என்போம். ஆனால் எத்தனையோ நேரங்களை வீணாக செலவழித்திருப்போம்.
இந்நிலையில் ஒரு நெரிசல் மிகுந்த சாலையில் , நல்ல வேகத்தில் செல்லும்போது போக்குவரத்து காவலர் பிடித்தால், அவரிடம் ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப்பார்ப்பதும் , அவரிடத்தில் கையூட்டு கொடுத்து நகர நினைப்பதும்தான் நடக்கும். இதுதான் லஞ்சத்தை ஊக்குவிக்கும் நேர்மையை மீறிய கயமைத்தனம்.!இங்குதான் பிறக்கிறது நேர்மையின்மை! நம்மால் ஒருவர் லஞ்சம் வாங்குவதை தட்டிக்கேட்க முடியாது. ஏனெனில் நாமும் தவறு செய்தவர்தான்..!நாம் யாருக்குமே பயப்படாமல் தவறுகளை தட்டிக் கேட்க துணிந்துவிட்டோமென்றால் நேர்மையானவர் ஆகிவிட்டோம் என்று அர்த்தம்.! ஏனெனில் எதிராளி குறைகூற நம்மிடம் ஒரு
தவறும் இருக்காது.!ஆகவே நேர்மையை உண்மைகொண்டே ஆரம்பிக்கமுடியும்..தைரியமாக உண்மை கூறப்பழகவேண்டும். நாம் கண்டிப்பாக பொய்கூறமாட்டோம் என்று எதிராளி எண்ணவேண்டும். மேலும் நம் சமூகம், அரசு ஆகியவை கூறும் நியாயமான செயல்களை அதே முறைப்படி பின்பற்றவேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டியிருக்காது. அதையும் மீறி தவறு நடந்தால்...

ரவுத்திரம் பழகவேண்டியதுதான்...!

"என் ஒருவனால் இந்த உலகை, நாட்டை , ஊரை , கிராமத்தை,

தெருவை, ஏன் என் குடும்பத்தைக்கூட மாற்றமுடியாது என்ற அவநம்பிக்க்கு அடிமையாகத்தான் இன்னும் நாம் இருக்கிறோம். நேர்மை பழகிப்போய் அதன் ருசி கண்டுவிட்டால் அப்புறம் ஒரு கூட்டமே அதனை பயிற்சிசெய்யும். அப்போது பார்த்தால் அனைத்தும் மாற ஆரம்பிக்கும்.!  அனைவரும் நேர்மையாகிவிட்டோம் என்ற முடிவுக்கு விரைவில் நாம் வந்துவிடுவோம்.பயத்தின் அடிப்படையே நேர்மையின்மைதான்.! நேர்மை பழகிப்போனபின் பார்த்தால் நம் பலம் நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.!

முதலில் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுப்பதில்லை என்று உறுதி பூணுவோம்..!

ஏனெனில் நாமெல்லாம் பூனைத்தோல் போர்த்திய புலிகள்!
பூனைத்தோலை உதறி புலியென்று உணருவோம். !  


தனிப் பக்கத்தில் காண →