சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
26 Jul 2013மீள்பதிவு

எதிரிவினைகளாகும் எதிர்வினைகள்








நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் முகநூல் மற்றும் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

ஆனால், அத்தகைய நட்பு தரும் முகநூலில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.அதுபோல்தான் முகநூல் சுவர்களும், பிரபலங்களும்…

இதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.

அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.

தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளையோ, பத்து நிலைத்தகவல்கள் எனப்படும் ஸ்டேட்டஸ்களையோ எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு ,ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை!


நீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்டமிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்திலோ, முகநூல் பக்கத்திலோ தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் அல்லது முகநூலில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.
பழைய திருவிளையாடலில் ஒரு காட்சி வரும்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று அடம்பிடிக்கும் சி(வாஜி)வன், நக்கீரன் சொல்லச்சொல்ல மறுத்துக்கொண்டே வருவார்.
அதையும் மீறி நக்கீரன் ,”நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சொல்லவும்… சிவன்,
அங்கம் புழுதிபட, அறுஞ்சாந்து நெய்பூசி சங்கதனைக் கீர் கீர் என்று கீறும் கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்வது என்பார்.
அதாவது, உடலெங்கும் புழுதியோடு, எண்ணை தடவிக்கொண்டு, மீனை வெட்டும் மீனவன் நீயா என் பாட்டில் குற்றம் சொல்வது என்று சொல்லிவிடுவார்.
அதுவரை கருத்து மோதலாக இருந்த இடம்..ஜாதி மோதலாக மாறத்துவங்கும்..
அடுத்து நக்கீரர் எதிர்வினை தருவார்…
சங்கறுப்பது எமது குலம்.. சங்கரனார்க்கு ஏது குலம்.. சங்கை அரிந்துண்டு வாழ்வோம்..உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.. !
எங்களுக்காவது குலம் என்று ஒன்று உள்ளது. உனக்கு அதுகூட இல்லை. மீன் வெட்டி சாப்பிடுபவர்கள் நாங்கள். உன்னைப்போல் பிச்சைக்காரர்கள் இல்லை.. என்று வெடித்துவிட, மீதியை வெள்ளித்திரையில் கண்டிருக்கலாம்..

       இதுபோல்தான் இங்கும் நடக்கிறது. ஒரு கருத்துக்கு, விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. மெதுவாக கருத்து மோதலிலிருந்து நழுவி, தனிமனிதத் தாக்குதலில் இறங்கிவிடுகிறோம். பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர்.கோஷ்டியாக எதிர்வினைக் கச்சேரி அமர்க்களப்படும்.
அதற்குப்பிறகு பதிவுலகமும்,முகநூல் உலகமும், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது. ஆனால் அடுத்து வரும் பிரச்னையில், இந்த வண்ணத்தை நினைவு படுத்த இன்னொரு பெயிண்ட் டப்பா வந்து நிற்கும்.
இதில் முழுமையாக, எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.


ஒன்று மட்டும் நிச்சயம்!

நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!


அழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.




நாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்! 



எத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்!

எத்தனையோ திரைப்படங்களின் இலவசக் காட்சி வழங்கிகள் நாம்! 

பிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்!
கேட்டால் கிடைக்கும் என்று விழிப்புணர்வு கொடுப்பவர்கள் நாம்!

நமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை!

நாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது!

அழகாகச்சிந்திப்போம்..! 
அனைவரையும் அரவணைப்போம்! 
தெரியாமல் தவறுசெய்தால் 
தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
தனிமனிதத் தாக்குதல்களை
தரம்பிரித்து தள்ளி நிற்போம்!

இப்படியும் சிந்திப்போம்…

கூடிக்கரையும் காகங்களல்ல நாம்!
கூடி மழை பொழியும் மேகங்கள்!


டிஸ்கி : ஏதோ தோணுச்சு .. எழுதிட்டேன். இதுக்கும் ஏதாவது எதிர்வினை இருந்தா.. விளக்கமெல்லாம் என்கிட்டருந்து வராது. சொன்னவனே சூனியம் வச்சுக்க மாட்டேன். இந்த மேட்டர் 2010ல் நான் எழுதினது. கொஞ்சம் டிங்கரிங் பார்த்து மறுபடியும் போட்டிருக்கேன்.




தனிப் பக்கத்தில் காண →
13 Jul 2013அனுபவம்

லூசுதவி !







            அன்று இரவு, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங்கில் என் வண்டியை நிறுத்தும்போது ஒரு செல்ஃபோனின் பாட்டுச்சத்தம் மட்டும் கேட்க, அதைப் பின் தொடர்ந்து சென்றால், ஒரு ஸ்கூட்டியின் கீழே அந்த் ஃபோன் கிடந்தது. 

            கடைசியாக அழைத்த நபரிடமே கேட்டபோது, ஃபோனின் உரிமையாளர் ஒரு பெண் என்றும் அவரது வேலை பற்றியும் தெரியவந்தது. ஆனால், அழைத்தவருக்கும் அந்தப்பெண்ணின் வீடு பற்றித் தெரியவில்லை.

           எங்கள் பார்க்கிங்கில் இருந்ததால், நிச்சயம் அவர் எங்கள் குடியிருப்பில்தான் வசிக்கவேண்டும். ஆனால் 48 வீடுகளிலும் சென்று கேட்கமுடியாது. செக்யூரிட்டிக்கும் அந்த ஸ்கூட்டி யாருடையது என்று அடையாளம் சொல்ல இயலவில்லை. அவரும் செல்ஃபோனைக் கொடுக்கும் பொறுப்பை மறுத்துவிட்டார். ஆகவே, அந்த வண்டியிலேயே எனது தொலைபேசி மற்றும் வீட்டு எண்களை எழுதிவைத்துவிட்டு செல்ஃபோனை எடுத்துக்கொண்டு, படியேறினேன்.

வீட்டுக்கு வந்தபின், அந்த ஃபோனை ஆராய்ந்து ‘அம்மா’ என்ற எண்ணுக்கு அழைத்தேன்.

ஹலோ!

வணக்கம்! நீங்க... xxxxxx வோட அம்மாவா?

இல்லை.. நான் தான் xxxxxx பேசுறேன்.

ஓ.. சரிங்க! உங்க செல்ஃபோனை எங்க விட்டீங்க?

இருங்க பாத்துச் சொல்றேன். (என்று சொல்லிவிட்டு என்னை லைனில் வைத்துக்கொண்டே 10 விநாடிகள் தேடினார்) ஓ. ஹேண்ட்பேகில்தான் வச்சிருந்தேன். கீழ பார்க்கிங்கில் வண்டிக்கிட்ட எல்லாத்தியும் எடுக்கும்போது இருந்துச்சே! தேடிட்டு சொல்றேன். ஆமா.. ஏன் கேக்குறீங்க?

ரொம்ப நல்லது! உங்க போன் என்கிட்ட இருக்குங்க! உங்க அம்மா ஃபோனில் இந்த அழைப்பு வரும்போது callingன்னு வந்த பேரை வச்சுக்கூட கண்டுபிடிக்க முடியலையா?

ம்.. அதில் LOOSU ன்னு வந்திருக்கு! அது நீங்கதான்னு நினைச்சு பேசினேன்.

நாசமாப் போச்சு!!

(அப்புறம் நான் விபரம் சொல்ல, என் வீட்டுக்கு வந்து ஐம்பது நன்றிகள் சொல்லி வாங்கிச் சென்றார்!. அம்மாவுக்கும், மகளுக்கும் மூன்றாம் உலகப்போர் வந்திருக்கும்)




கண்டுபிடிப்பு # 1       உங்க நெருங்கின சொந்தமே இருந்தாலும், அவங்க உங்க பேரை எப்படி ஃபோனில் வச்சிருக்காங்கன்னு பாருங்க!

கண்டுபிடிப்பு # 2       அரை மணி நேரத்துக்கு மேல் தன் ஃபோனைப் பற்றிய நினைவில்லாமல் இருக்கும் இளம்பெண்களும் சென்னையில் இருக்கிறார்கள்.

கண்டுபிடிப்பு # 3       உதவி செய்யும் அனைவருக்கும் லூசு என்ற பட்டமே நிரந்தரம்




தனிப் பக்கத்தில் காண →
30 Jun 2013தத்துவம் மாதிரி

அவளின்றி அணுவும்...







மனைவி என்ற பெண்ணை நேசிக்க பல்வேறு தருணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டால்.. ஆனந்தம் நிச்சயம்!

உங்களுக்கான காஃபியை அருந்திப்பார்க்கும்போது நேசியுங்கள்...அது உங்களுக்கு பிடிக்கும்படி இருக்கிறதா என்று சுவை பார்க்கிறாள் என்று அர்த்தம்..

உங்களை சாமி கும்பிட வலியுறுத்தும்போது நேசியுங்கள். அவளுக்கு நீங்கள் கிடைத்ததுபோல், உங்களுக்கும் புண்ணியமும், சொர்க்கமும் ஒருசேரக் கிடைக்கட்டும் என்று எண்ணுகிறாள் என்று அர்த்தம்.

உங்களை, குழந்தைகளுடன் விளையாடச் சொல்லும்போது நேசியுங்கள்… பிள்ளைகள் தன்னை மட்டுமல்ல..! அப்பாவையும் அதிகம் உணரட்டும் என்று எண்ணுகிறாள் என்று அர்த்தம்..

அவள் உங்களைக் கண்டு பொறாமைப் படும்போது நேசியுங்கள். இரகசியமாக உங்களை தேர்ந்தெடுத்ததை நினைத்துப் பெருமைப்படுகிறாள் என்றுதான் அர்த்தம்…

அவளது சில சிறு செயல்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும்போதும் நேசியுங்கள். அந்தச் செயல்களை நீங்களும் சில நேரங்களில் செய்திருப்பீர்கள்.அதனை அவள் சுட்டுவதில்லை.

அவளது சமையல் ருசிக்கவில்லையென்றால் நேசியுங்கள்.. அவள் நன்கு சமைக்க முயற்சிக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் காலையில் அலங்கோலமாக இருக்கும்போது நேசியுங்கள். உங்களுக்கான வேலைகளை முடித்துவிட்டுத்தான் தன்னை அழகுபடுத்திக்கொள்ளப் போகிறாள் என்று அர்த்தம்

குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய உங்களை உதவச்சொல்லும்போது நேசியுங்கள். அவள் , உங்களையும் அந்தக் குடும்பத்தின் நெருக்கத்தில் பங்கெடுக்க வைக்கிறாள் என்று அர்த்தம்.

நான் குண்டாக இருக்கிறேனா என்று கேட்டாள் என்றால், அழகாக இருக்கிறாய் என்று சொல்லி நேசியுங்கள். உங்கள் ஆதுரமான வார்த்தைகளை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம்.

அவள் அழகுபடுத்திக்கொள்ள நேரம் எடுக்கும்போது நேசியுங்கள். உங்கள் மனைவி அழகு என்று பொதுவில் காட்டிக்கொள்ள சிரத்தை எடுக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் ஒன்றுமில்லாததற்கெல்லாம் அழும்போது நேசியுங்கள். வேறு எதுவும் கேட்காமல், ”எல்லாம் சரியாகிவிடும்” என்ற உங்கள் ஒற்றைச் சொல்லை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம்.

எப்படிக் கார் , பைக் ஓட்டவேண்டுமென்று உங்களுக்கு அவள் ஆலோசனை சொல்லும்போது நேசியுங்கள். உங்கள் பாதுகாப்பின்மீது அக்கறையாய் இருக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் உங்களிடம் வாக்குவாதம் செய்யும்போது நேசியுங்கள். இருவருக்கும் நல்லது நடக்கவேண்டுமென்று பேசுகிறாள் என்று அர்த்தம்.

இதைப் படித்துவிட்டு, உங்களைப்பார்த்து அவள் காட்டும் முகபாவத்தையும் நேசியுங்கள். உங்களை அவள் கணித்து வைத்திருக்கிறாள் என்று அர்த்தம்.

அவளை அப்படியே நேசியுங்கள். அவள் உங்களுக்கானவள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் தேவையில்லை..!!

அவள் உங்களில் ஒரு பாகம்..உங்கள் வீட்டு ராணி!


- நன்றி : விஜி ராம். - ஆங்கில மொழியில் - முகப்புத்தகத்தில்!
தனிப் பக்கத்தில் காண →
07 Jun 2013பார்வை

தங்கம் வாங்குவதை நிறுத்துங்க!


     





     மக்கள் எல்லோரும்,  குறிப்பாக இந்தியர்கள்… அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு தன்னிடம் அதிகமாகச் சேரும் தொகையை இரண்டு இடங்களில் முதலீடு செய்ய ஆசையாய் இருக்கும். ஒன்று தங்கம். இரண்டாவது வீட்டு மனை..!

     அந்த முதல் பொருள்தான் நம்மிடையே மிகவும் அதிகமாகப் புழங்கி, இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கிறது என்றால் நம்பத்தான் வேண்டும்.

இந்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி எல்லோரும் மிகவும் அதிர்ச்சியடைந்து பேசுகிறார்கள். குறிப்பாக நகைக்கடை முதலாளிகள், ‘அய்யோ! இது மக்களைத் தங்கம் வாங்க விடாமல் செய்யும் முயற்சி! நடுத்தர ஏழை மக்கள் தங்கமில்லாமல் தத்தளிப்பார்கள் என்று குலவையிடுகிறார்கள். ஏன், இறக்குமதி அதிகமாவதற்கு முன் அவர்கள் வாங்கிய நகையை பழைய விலைக்கு நமக்காகக் கொடுப்பார்களா என்று கேட்டுப்பாருங்களேன். அதேபோல், சேதாரத்தின் ஆதாரங்களை அலசினால் இன்னும் கொடுமையாகை இருக்கும்.

ஆனால், அரசோ, நாம் தங்கம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு வரி போடுகிறது. ஏனெனில் நாம் தங்கம் வாங்கிக்குவிக்கக் குவிக்க, நம் பணத்தின் மதிப்பு அதல பாதாளத்துக்குச் செல்லத் தொடங்கும். ஆனால், அதையும் மீறி, இன்னும் விலை அதிகமாகும். ஆகவே இப்போதே வாங்கி வைத்துக்கொண்டால் நல்லது என்று எல்லா முதலீட்டு ஆசைகாட்டிகளும் சொல்வதை நம்பினால் அரோகரா நிச்சயம்! நம் பணத்தின் மதிப்பு அதல பாதாளத்துக்குச் செல்லாமல் இருப்பதற்காக நமது அரசு போடும் கடிவாளம்தான் இந்த இறக்குமதி வரி.! அப்படியாவது வாங்குறதைக் குறைச்சுக்கங்களேண்டா.. என்பதுதான் அது!

ஆனால் நாம் மாட்டிக்கொண்டிருப்பது, ‘அட்சய திருதியை’ என்ற நாளை தன் வியாபாரத்துக்காகப் பயன்படுத்தும் நகை வியாபாரிகள் கையில்தான்.! தங்கம் என்ற வஸ்து, நம் வீட்டு வாஸ்துவை விட சிறப்பானது என்ற நம்பிக்கையில்தான் நாம் ஓட்டிக்கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு , அவ்வப்போது வைத்து எடுத்துக்கொள்ள தங்கம் ஒரு சுழல் நிதி வழங்கி ! ஆனால், நடுத்தர, மேல்தட்டு மக்களுக்கு அது ஒரு நாளும் பணமாகிவிடக்கூடாது என்று நம்பித்தான் வாங்குகிறோம். ஆனால் அதையும் நம் சொத்துக்கணக்கில் சேர்க்கிறோம். ஆக, தங்கம் நம்மிடம் முடங்குவதற்காகவே இந்தியா தேவையில்லாமல் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.



     கொஞ்சம் எளிமையாகச் சொன்னால், தங்கம் ஒரு தேசத்தின் கையிருப்பில் இருந்தால், அந்த தேசத்துக்கே மதிப்பு அதிகம். அதே தங்கம் தேச மக்களிடம் அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு மிகவும் ஆபத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் , உலகிலேயே ஒரு பொருளை உற்பத்தியே செய்யாமல், அதே பொருளை உலகிலேயே அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியாதான்.

அதாவது ஒரு கிராம் தங்கம்கூட உற்பத்தி செய்யாமல், ஏற்றுமதியும் செய்யாமல், அதே தங்கத்தை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால், நாம் செலுத்தவேண்டிய அந்நியச் செலாவணி அதிகமாகிறது. அதாவது, மென்பொருள் ஏற்றுமதி செய்து சம்பாதித்த காசை தங்கமாக இறக்குமதி செய்து வீணடிக்கிறோம். ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகும்போது அந்த நாடு ஏழை நாடுகளின் பட்டியலுக்கு விரைந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவின்….அல்ல..இந்தியர்களின் தங்க வேட்டையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. 17000 டன் தங்கம் இந்தியர்கள் கையில் இருக்கிறது என்கிறார்கள். ஆண்டுக்கு 400 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அதே சமயம், சீனா தனக்கான தங்க ஏற்றுமதியை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தியாவுக்கு தங்கத்தை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் வீழ்ச்சிக்காக சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கிறது. இப்படியே போனால், இந்திய அரசின் தங்கக் கையிருப்பு டுஸ்ஸ்ஸாகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நாம் தங்கத்துக்கு செலுத்தும் மதிப்பு அதன் உண்மையான மதிப்பு இல்லை. உண்மையில், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வேலையாள் செலவுகள் மற்றும் லாபம் சேர்த்து, ஒரு கிராம் தங்கம் இன்றைய தேதிக்கு 589 ரூபாய் வரை விற்கமுடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது அதன் பயன்பாட்டு மதிப்பு அவ்வளவுதான். அப்படியானால், நாம் கொடுக்கும் 2500 சொச்சம்...? அதற்கான பண்ட மாற்று மதிப்பு! அது என்று வேண்டுமானாலும் தொபுக்கட்டீர் என்று பள்ளத்தில் விழுந்து மொக்கையாகி கிராம் 1000 ரூபாய்க்கு வர வாய்ப்பிருக்கிறது. கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியும். இதைப் புரிந்துகொள்ள சில அடிப்படை விபரங்கள் தெரிந்தால் போதும்.

     உப்பு ஒரு காலத்தில் நாடுகளிடையே பண்ட மாற்றுப் பொருள். சம்பளமாக உப்பைத்தான் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சாலரி என்ற ஆங்கில வார்த்தைகூட உப்பு என்ற பொருள்படும் லத்தீன் வார்த்தைதான். ஆனால், மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக இருந்த உப்புதான் இன்று உள்ளதிலேயே விலை குறைவான உணவுப்பொருளாக இருக்கிறது.’உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற தமிழ்ப் பழமொழியே, உப்பு என்பதை சம்பளம் என்று உணர்த்தியிருக்கிறது

அதேபோல்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன், கருக்காத, பளபளப்பான, ஆபரணமாக்கி அழகு பார்க்கக்கூடிய ஒரு பொருள் வெறும் ஆபரணம் என்ற தகுதியை மீறி, ஒரு பண்டமாற்றுப் பொருளாக மாறத் தொடங்கியதில் இருந்துதான் சிக்கல்.! அதுவும் தன்னிடம் அதிகத் தங்கத்தை கையிருப்பாகக் கொண்ட நாடுகள்தான் இன்று வல்லரசாக மதிக்கப்படுகின்றன.  அன்று உப்பு பெற்ற இடத்தைத் தங்கம் பிடித்திருக்கிறது. திடீரென்று வெள்ளியை பண்டமாற்றாக அறிவித்தாலோ, அல்லது பண்ட மாற்றே வேண்டாம். எல்லாமே கரன்ஸியை வைத்து விளையாடிக்கொள்வோம் என்றோ உலகநாடுகள் முடிவெடுத்துவிட்டால், தங்கமும், உப்பும் ஒரே நிலைக்குத்தான் தள்ளப்படும்.

கேட்பரீஸ் ஜெம்ஸின் ஒரு விளம்பரம் உண்டு. டாக்டர் பாண்டா பொம்மை ஒரு பெரியவருக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அவரிடம் மற்ற பாண்டா பொம்மைகள் இருக்கிறது. அவரது தேவை தெரிந்த அவரது நண்பப் பெரியவர், 5 பாண்டாவுக்கு ஒரு டாக்டர் பாண்டா என்று பேரம் பேசுவார். இவரும் அநியாயம் என்று சொல்லி வாங்கிச் செல்வார். இந்த நிலைதான் இன்று இந்தியாவுக்கு உலகத்தில் தங்க உற்பத்தி செய்யும் நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது. நம்மிடம் டாக்டர் பாண்டா இல்லை.. அவர்கள் கேட்பதைக் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

     என்னமோ தன்னிடம் அதிகத் தங்கம் இருந்தால், எப்பொழுது பொருளாதாரச் சிக்கல் வந்தாலும் நகைக்கடைக்காரர்கள் உடனே வீடு தேடி வந்து வாங்கிக் கொண்டு அன்றைய விலையில் பணம் கொடுத்துவிடுவார்கள்  என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றுவரை ஒரு நகைக்கடையிலாவது அவர்களிடமே வாங்கிய நகையாய் இருந்தால் கூட, அதைக் கொடுத்துவிட்டு பணத்தைக் கொடுக்கிறார்களா பாருங்கள்!. அதற்குப் பதிலாக மீண்டும் நகை வாங்கச் சொல்லித்தான் சொல்லுவார்கள்.

நாம் நகையை விற்றே ஆகவேண்டுமென்றால், அதற்கென்றே இருக்கும் சேட்டுகள் அன்றைய விலையில் 10% கழித்துவிட்டு,  ‘இது 22 கேரட் நஹி ஹை ஸாப்!” என்று எடையிலும் கை வைத்து… கொடுக்கும் பணம்.. நாம் வாங்கிய விலையை விடக் குறைவாக இருக்கும். இதுதான் இந்த முதலீட்டின் பின்னால் உள்ள தந்திரம். பாவம் கடைக்கோடி இந்தியன் இது புரியாமல் ‘சமயத்துக்கு உதவும்’ என்று வாங்கிக் கொண்டே செல்கிறான்.

அடகு இன்னும் அநியாயம்.! ஒரு குறிப்பிட்ட விலைக்கு அடகு வைத்துவிட்டீர்கள். தங்கத்தின் விலை இறங்கும்போது, உடனடியாக உங்கள் தங்கம் முழுகிவிடும். இவ்வளவு தொகையை உடனே கட்டுங்கள் என்று நோட்டீஸ் விடுகின்றன முத்தூட் மற்றும் மணப்புரங்கள்… அதே நேரத்தில் தங்கம் விலை ஏறும்போது உங்களை அழைத்து..இந்தாங்க விலை ஏறியிருக்கு இந்தக்காசையும் கடனா வச்சுக்குங்க என்று கொடுக்கவா செய்கின்றன? ஆகவே.. கையில இருக்கே தங்கம் கவலைப்படுடா சிங்கம் என்று கொஞ்ச நாளில் ஆகிவிடும்..! 

உண்மையிலேயே தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், தங்கப் பத்திரங்கள் வாங்கலாம். அது உலகளாவிய தங்கத்தின் மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்படுவதாலும், அது ஒரு மறைநிலைப் பொருளாகவும் பார்க்கப்படுவதால், ஓரளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் இப்போது செய்தால் பிரச்னை வர வாய்ப்புள்ளது. ஏனெனில் எப்போது இந்தியாவில் தங்க இறக்குமதி மிகக்குறைந்து ஆண்டுக்கு 5 முதல் 15 டன்னுக்கு வருகிறதோ, அன்றுதான் தங்கத்தின் உண்மையான விலையும் வெளியில் வரும். அதனால்தான் இப்போது வங்கிகளில் தங்கம் விற்பதையும் அரசு தடை செய்கிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கத்தை தங்கள் ஊழியர்களுக்கு பரிசாகக் கொடுப்பதன் பின்னணியிலும் சில வரி ஏய்ப்புகள் உள்ளன. அது வேறு கதை..!

அரசு நம்மிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் செலுத்தச் சொல்லி, அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்துடன் கடன் பத்திரங்களாக மாற்றிக்கொள்ளச் சொன்னால், யோசிக்காமல் செய்யுங்கள். வளமான தேசத்தில் வாழ நாம் செய்யப்போகும் நல்ல முடிவாக இருக்கும். அமெரிக்கா இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இப்படித்தான் செய்தது. மேலும் தங்க நகைகளை வைக்க லாக்கருக்கு நாம் பணம் கட்டவேண்டியதில்லை. அரசே காசும் கொடுத்து, நகையையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும். திருட்டு பயம் இருக்காது. அது தவிர,  நம் விழாக்களுக்கு எப்படியாவது கடன் வாங்கி, நகை போடுவதை நம் கலாச்சாரத்திலிருந்து மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


இன்றைய தேதியில், இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் நமது தங்க இறக்குமதி. இந்தியர்களிடம் அதிகத் தங்கம் இருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தி இல்லை.அதனை சீர் செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தாலோ, கையிலிருக்கும் காசு , காசாகவே நிலைக்கவேண்டும் என்று நினைத்தாலோ, தயவு செய்து தங்கம் வாங்காதீர்கள். நகையைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும் பெண்களும் கொஞ்சம் அமைதி காத்தல் அவசியம்.! நம் ஆசையே நமக்கு உலை வைத்துவிடும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியர்கள் தங்க நகைகள் வாங்குவதை நிறுத்தினால், உண்மையான தங்கத்தின் மதிப்பு வெளியில் வரும் பாருங்கள்! 

அப்போது கொண்டாடுங்கள் தீபாவளியை..!!



தனிப் பக்கத்தில் காண →
24 May 2013கேட்டால் கிடைக்கும்

குமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .


     



     சூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மாலை 6:10 ஆகியிருந்தது. அருகில் என்ன தியேட்டர் இருக்கிறது என்று பார்த்தால், குமரன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. உடனே அதே சாலையில் சென்று குமரனை அடைந்தேன்.

     டிக்கெட்டில் இருக்கை எண் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். அட! என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றால், வாங்கிய 80 ரூபாய்க்கு, தியேட்டர் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. மால் அளவு எதிர்பார்க்காமல் இருந்தால், நல்ல தியேட்டர்தான். இடைவேளையில், தண்ணீர் தாகமெடுக்க, குடிநீர் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று கேண்ட்டீனை அணுகினால், 25 ரூபாய் சொன்னார்.

     நான், அதன் MRP 20 தான். நீங்கள் அந்த விலைக்குத்தான் கொடுக்கவேண்டும். என்று சொன்னவுடன்,

’MRPன்னா…என்ன?’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’ என்று அந்த ஆள் திமிராகச் சொல்ல,

’ஏன் தியேட்டர் என்ன எத்தியோப்பியாலயா இருக்கு! மொத்த இந்தியாவுக்கும் ஒரே சட்டம்தான் . நீங்க அதிகபட்ச சில்லறை விலைக்குத்தான் கொடுக்கணும்’ என்றேன்.

’இல்லை சார்! அதெல்லாம் தர முடியாது… கொஞ்சம் நகருங்க!’ என்று வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். அதுவும் பல புரட்சியாளர்கள் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

எனக்கு தண்ணீர் தாகம் வேறு.. ஆனால், அ.சி.வி (அதிகபட்ச சில்லறை விலை) விட ஒரு ரூபாய்கூட அதிகம் கொடுத்து வாங்குவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். மீண்டும் அவரை சத்தமாகக் கேட்டேன். என்னைக் கண்டுகொள்வதாகவே இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்தால், மேலாளர் அறை அருகிலேயே இருந்தது. அங்கு சென்றேன். அது கண்ணாடிக்கதவு. நான்கைந்து பேர் உள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நான் வெளியில் நிற்பதைப் பார்த்துவிட்டு, கதவைத்திறந்துகொண்டு வந்தார்.

மேனேஜரைப் பார்க்கணும் என்றேன்.

உள்ள ஓனர் உக்காந்திருக்காரு! என்ன விஷயம்?  என்றார்.

“சார்! நான் வாட்டர் பாட்டில் வாங்க வந்தேன். 20 ரூபாய் பாட்டிலை 25 ரூபாய்க்கு விக்கிறாங்க! அது சட்டப்படி குற்றம். அ.சி.வி க்கு மேல் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும் என்னால் பறிமுதல் செய்ய வைக்க முடியும். நீங்கள் சொந்தமாக பாக்கெட் போட்டு விற்கும் பொருளுக்கு என்ன விலை வைத்தாலும் அது உங்கள் பொறுப்பு. ஆனால், விலை அச்சிடப்பட்டுள்ள பொருளில் அதைவிட அதிகமாக விற்கக்கூடாது.” என்றேன்.

ஒரு நிமிஷம் இருங்க! என்றுவிட்டு உள்ளே சென்றார்.

மீண்டும் வெளியில் வந்தார். நேராகக் கேண்ட்டீன் சென்றார். விற்பனையாளரிடம் ஏதோ பேசினார். ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தார். என்னிடம் வந்தார். கொடுத்தார்.

நான்  20 ரூபாய் பணம் கொடுத்தேன். 

அதெல்லாம் வேண்டாம் சார்! என்றார்.

நான் உங்களிடம் சும்மா கேக்கலை. அதிக விலை வைத்து விக்காதீங்கன்னேன். இதுக்கான விலையை வாங்கிக்குங்க என்று பணத்தை நீட்டினேன். வாங்கி கடைக்காரரிடம் கொடுத்தார். கேட்டால் கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இதை எவ்வளவுக்கு விக்கிறீங்க என்றார்…

25 என்றான் இன்னொரு விற்பனையாள இளைஞன்.

ஏண்டா இவ்ளோ ஜாஸ்தியாக்கிட்டீங்க… என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்துவிட்டார்.


     எல்லாப் பொருட்களுமே திரையரங்க கேண்ட்டீன்களில் விலை அதிகமாகத்தான் இருக்கின்றன. இதை யாரும் கேட்பதும் இல்லை. வாடிக்கையாளர் குறைவு..! முழுநேரக் கடை இல்லை.. என்ற பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், உங்கள் திரையரங்கில் நுழைந்த ஒரு காரணத்துக்காகவே வந்தவனின் டவுசரை உருவுவது எந்தவிதமான வியாபார நோக்கம் என்று புரியவில்லை.

       ஆனால், இதில் நான் முழுமையாகக் குற்றம் சாட்ட விரும்புவது பொதுமக்களைத்தான். நான் அவ்வளவு நேரம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்.  யாரும் கண்டுகொள்ளக்கூட இல்லை. குறைந்தபட்சம்  15 பாட்டில்கள் விற்பனை ஆகியிருந்தன.  ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல், தனக்கான தீனியில் மையம் கொண்டிருந்தார்கள். இவர்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது. 

    தனக்கு முன்னால் நடக்கும் சிறு தவறைக்கூட தட்டிக்கேட்க திராணியற்ற கூட்டத்துக்கு , தன் இனத்துக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகங்களை தட்டிக்கேட்க எங்கிருந்து திராணி வரும்..?





தனிப் பக்கத்தில் காண →