சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
07 Jul 2014மீள்பதிவு

தொலையாமல் பேசுவோம்!




இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது! நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி! பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை

நாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பேசியில், எதிர்முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை! ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு!
டாக்டர்எனக்கு….  னு ஆரம்பிக்கும்போது , 
டாக்டருக்கு ஒரு போன் வந்து பேச ஆரம்பிக்கிறாரு! மொக்கச்சாமியும் காத்திருந்தாரு! டாக்டர் போனை வைக்கவும்…
      டாக்டர்எனக்கு தினமும்  கிறார்..!
மறுபடியும் டாக்டருக்குப் போன்… அவர் பேசுறாரு! முடிக்கிறாரு! இப்பவும் மொக்கச்சாமி,
      டாக்டர்எனக்கு தினமும் சாயந்திரமானா
மீண்டும் டாக்டருக்கு போன்…அவரும் மொக்கச்சாமியைப்பாத்துக்கிட்டே போன் பேசி முடிக்க… மொக்கச்சாமி எழுந்திருக்கிறாரு!
      உடனே டாக்டர்..!
      என்ன மிஸ்டர் மொக்கச்சாமிவந்தீங்க ஒண்ணுமே சொல்லாம போறீங்கன்னாரு!
      மொக்கச்சாமி சொன்னாரு!
      இல்ல டாக்டர்வெளில போய் உங்களுக்கு போன் பண்றேன்அப்பதான் நான் சொல்லவந்ததை முழுசா சொல்லமுடியும்போலன்னாரு!

நம்மிடையேயும், டாக்டர் மாதிரி ஆட்கள் நிறையபேர் இருக்கோம் ! எல்லாரும் நமக்கு முன்னால் இருக்கும் ஆட்களை விட, போனில் பேசுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.

      நாலு நண்பர்கள் ஒரு இடத்தில் சந்திச்சுக்கிட்டா, அவர்களுக்குள் பேசிக்கிறதை விட, அவர்களுக்கு வரும் செல் அழைப்புகளில் பேசுறதுதான் அதிகம்! அதுக்கு எதுக்கு சந்திக்கணும்?

      செல்போன் நாம கண்டுபிடிச்ச கருவி! அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை! அதை மனசில் வச்சுக்கிட்டு அந்தப் பொருளை நாம் பயன்படுத்தத்தொடங்கணும்!

எல்லா இடங்களிலும் அலறுகிற மாதிரி ஒரு பாட்டை அழைப்புமணியா வச்சுக்கக்கூடாது. குறிப்பா மருத்துவமனைக்குள்ள அமைதியா இருக்கும்போது திடீர்னு ‘அடிடா அவளை..ஒதைடா அவளை’  னா கடுப்பாகும். சத்தம் வராத சைலண்ட் மோடில், வைப்ரேஷன் எனப்படும் உதறும் நிலையில் வச்சிருந்தா , அழைப்பு வருவது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாரையும் தொந்தரவு பண்ணாது.

யாராவது உங்களிடம் நேராகப் பேசிக்கிட்டிருக்கும்போது, உங்கள் போனை நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது. அது அவர்களுக்கு உங்களைப்பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இவர் நம்ப பேச்சை கவனிக்கலை என்று எண்ணவைக்கும். நேராக ஒருவரிடம் பேசும்போது, போனை பையில் வைத்துக்கொள்வதுதான் நலம்.

காலர் ட்யூன் எனப்படும், உங்களை அழைத்தால் , அழைப்பவருக்குக் கேட்கும் பாடல் வைப்பது ஒரு சிறந்த பண்பாகப் பார்க்கப்படுறதில்லை! நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க!  ஆனால் கேட்பது எதிராளி! இது , தனக்குப்பிடித்த உணவை, அடுத்தவர் வாயில் திணிப்பதற்குச்சமம்தான். அப்படியே அது நல்ல பாட்டா இருந்தாலும், அதை யாராலும் முழுசா கேட்கமுடியாது! டயலர் ட்யூன்ங்கிறது செல்பேசி நிறுவனங்கள் நம்மகிட்ட  காசு பிடுங்க ஏற்படுத்திய யுக்தி!

ஒருவரை நீங்க அழைக்கிறீங்க! அவர்கள் உங்கள் அழைப்பை எடுக்காம கட் செய்யுறாங்க! அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ? வேற எதாவது பிரச்னையோ? என்று மனசைப்போட்டு உழட்டிக்கிட்டு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு போன் செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுதான் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விஷயம். ஒருவர் உங்கள் அழைப்பை நிராகரிச்சா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அவருக்கு அழைக்காமல் இருக்கலாம். அல்லது நீங்கள் ப்ரீயா இருக்கும்போது அழைக்கவும் என்று குறுஞ்செய்தி அனுப்பலாம். அதுதான் நல்ல பழக்கம்!

மிகப்பெரிய, பிரபலமான மனிதர்களின் தொடர்பு கிடைச்சா, அவர்களின் எண்களை வைத்துக்கொண்டிருக்கும்போது கவனம் அதிகம் வேணும். நாம் சும்மா இருக்கும்போது அவரை அழைச்சு எரிச்சலூட்டக்கூடாது. அப்புறம்..எப்படி இருக்கீங்க? சும்மாதான் கூப்பிட்டேன் என்று சொதப்பக்கூடாது. ஏதாவது தகவல் இருந்தால் மட்டுமே கூப்பிடணும். அவர் வேலையில் இருக்கார் என்று தெரிஞ்சால் அதற்கேற்றார்போல் பேச்சை கட் செய்யனும். அதுதான் உண்மையிலேயே அவர்களது நட்பை பலப்படுத்தும்.

முக்கியமானவர்களுக்கு அழைப்பதற்குமுன்னால், அவர்களை அழைக்கலாமா னு ஒரு குறுஞ்செய்து அனுப்பிட்டு காத்திருந்தால், உங்கள் இந்த நல்ல செயலுக்காகவே அவரே உடனடியா உஙகளைக்கூப்பிட்டு பேசிடுவார்!

நாம் முக்கிய வேலையில் இருக்கும்போதும், வாகனம் ஓட்டிக்கிட்டிருக்கும்போதும் யார் அழைத்தாலும் எடுக்காதீங்க! பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க! அதேபோல், மிஸ்டு கால் விடுவது ஒரு மிகப்பெரிய தவறு!

ஒரு செல்போன் பேச்சு வாக்குவாதமா மாறும்போது, நீங்க இருக்கும் இடத்தை கவனிச்சுப்பாத்துக்குங்க! ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பேசிக்கிட்டு குடும்ப விவகாரங்களை சத்தமா பேசுறது, கேக்குறவங்களுக்கு சுவாரஸ்யமான கிசுகிசு அல்லது உங்களைப்பற்றின அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியா மாறிடும்.

அதேமாதிரி, ‘அந்த பச்சை பீரோவில் மேல்தட்டுல நகையெல்லாம் வச்சிருக்கல்ல,! அங்கதான் இந்த ப்ரீமியம் ஸ்லிப்பும் வச்சிருக்கேன்.!

நாளைக்கு மத்தியானம் குடும்பத்தோட ஊருக்குப்போறேன் மாப்ள! வரதுக்கு நாலு நாளாகும்! வந்தவுடனே பேசலாம்’னு பொது இடங்கள்ல பேசறது, திருடுறவங்களுக்கு செலவில்லாம நீங்க கொடுக்குற க்ளூ!

இத்தனைக்கும் மேல, செல்பேசியில் பதிஞ்சு வச்சிருக்கும் எல்லா எண்களையும் ஒரு நோட்டில் எழுதிவைக்கலாம். கம்ப்யூட்டரில் போனை இணைச்சு எண்களை ஏத்தி வச்சுக்கலாம். இது இரண்டில் எது செய்யாமல் விட்டாலும், செல்பேசி தொலைஞ்சு போனாலோ, பழுதா போனாலோ மொத்தமா எல்லா எண்களையும் இழந்துட்டு அம்போன்னு நிக்கவேண்டியதுதான்.

பொது இடங்களில் கேமரா செல்லில் படங்கள் எடுப்பதை தவிர்க்கணும். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. அதேபோல், நம் வீட்டுப்பெண்களின் படங்களை செல்பேசியில் வைத்திருப்பது அவ்வளவு நல்லதில்லை. நம்ம செல்தானே என்று நினைப்போம். ப்ளூடூத் மூலமாகவும், பழுது பார்க்கும் இடத்திலும் அந்தப்படங்கள் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம்.

ஒரு நாளில், அதிக நேரத்தை செல்பேசுவதில் செலவழிப்பதை தவிர்க்கணும். மாசத்துக்கு ஒருமுறை ஒருநாள் முழுக்க, செல்பேசி பயன்படுத்தாம இருக்கலாம்.

ஒருவரிடம் பேசுறதுக்கு முன்னால், என்னென்ன பேசப்ப்போறோம்னு குறிப்பெடுத்துவச்சுக்கலாம். அதுமட்டும் பேசிட்டு முடிச்சுக்கலாம். இது உங்கள் நேரத்தையும், அடுத்தவுங்க நேரத்தையும் சேமிக்கும். குறிப்பிட்ட இடங்களில் போன் வந்தாலும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது. கோவில்கள், மேடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ,கல்லூரிகள் இங்கெல்லாம் செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தவே கூடாது.
நண்பர்களிடம் வெட்டிப்பேச்சு பேச , உங்கள் இருவருக்கும் உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பேசுறதுதான் அந்த வெட்டிப்பேச்சைக்கூட சுவையா வச்சிருக்கும். 

செல்பேசிங்கிற ஒரு அற்புதமான கருவியை நல்லபடியா பயன்படுத்தினா, வாழ்நாள் முழுக்க நட்பு , உறவுகளை தொலைக்காமல் பேசலாம்! அதுக்குள்ளயே தொலையாமலும் பேசலாம்.!


தனிப் பக்கத்தில் காண →
27 Apr 2014கேட்டால் கிடைக்கும்

Veள்ளி Black Colour ஜுவல்லரி


     அன்று நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு…
     
இன்று மாலை தி.நகரில் இருக்கும் VBC ஜுவல்லரிக்கு வர முடியுமா? ஒரு பிரச்னை என்றார்.
     
விபரம் கேட்டேன்.

சொன்னார்.
     
அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. அதுசமயம், அவரது மனைவி வீட்டில் அந்த ஜுவல்லரியில் வெள்ளிச் சொம்பு, தட்டு, விளக்கு, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் வாங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வந்தபின் , வாங்கிய வெள்ளிப்பொருட்களை அட்டைப்பெட்டியிலிருந்து பிரித்துப் பார்த்தபோது, கன்னங்கரேர் என்று இருந்திருக்கிறது. உடனே பயந்துபோய், எடுத்துக்கொண்டு அந்த ஜுவல்லரிக்குச் சென்றிருக்கிறார்கள். கடையில்,  அதைப்பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், உப்புக் காற்றுப் பட்டால் வெள்ளி கறுத்துப்போவது சகஜம்தான் என்று நண்பரை பல்வேறு காரணங்கள் சொல்லி, சமாதானப்படுத்தி, மீண்டும் பாலீஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

     அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் 2 நாட்களில் மீண்டும் அனைத்து வெள்ளிப்பொருட்களும் வேகமாகக் கறுக்கத் துவங்கி, ஒரு வாரத்தில் மீண்டும் முழுக்கருமையை அடைந்திருக்கிறது. மீண்டும் கடைக்குப் படையெடுத்திருக்கிறார். மீண்டும் சமாதானம் …மீண்டும் பாலீஷ்..!! மீண்டும் நடந்தால் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். அதெல்லாம் நடக்காது நடந்தால் நாங்கள் மாற்றித் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

     அது நடந்து மூன்றாவது முறை, நான்கே நாட்களில் மீண்டும் அனைத்துப்பொருட்களும் கருப்பாகவே, அதற்குப்பிறகுதான் என்னை அழைத்திருக்கிறார். அந்த வெள்ளிப் பொருட்களைப் பார்த்து அதிர்ந்தே போனேன். கருப்பு கிரானைட்டில் செய்யப்பட்டதைப்போல் இருந்தது.



     நான் அவரிடம், உங்களுக்கு வேறு வெள்ளிப்பொருட்கள்   வேண்டுமா? அல்லது என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்…

     இல்லை. அந்த ஜுவல்லரி மேல் நம்பிக்கை போய்விட்டது. எனக்கு வெள்ளிப்பொருட்கள் வேண்டாம். அவற்றை திரும்பக்கொடுத்து, என் பணம் திரும்ப வேண்டும் என்று கேட்டார்.

     ஆகவே, அன்று மாலையே அந்த ஜுவல்லரியை அடைந்தோம்.
     நண்பர் அனைத்து வெள்ளிப்பொருட்களையும் கொண்டு வந்திருந்தார். ஏற்கனவே அவர் சந்தித்த, வெள்ளி செக்‌ஷன் பொறுப்பாளரைச் சென்று பார்த்தோம்.
     சார்! மறுபடியும் எல்லா வெள்ளிச் சாமானும் கருத்துப்போச்சு! என்று நண்பர் துவங்க..
     ஆமா சார்! நாந்தான் முன்னாடியே சொன்னேனே… வெள்ளின்னாலே கருத்துத் தானே போகும்..!! குடுங்க உடனே உங்களுக்கு பாலீஷ் போட்டுத்தரச் சொல்றேன். என்றார்.
     இல்லை.. இவ்வளவு மோசமா எந்த வெள்ளிப் பாத்திரமும் கருத்துப்போய் நான் பாத்ததில்லை. என்று நண்பர் சொல்ல,

அவரும் சளைக்காமல், அது உங்க ஏரியா காத்து, சூழ்நிலையை பொறுத்து இருக்கு.. என்று வாதாட ஆரம்பித்தார்.

அப்போது நண்பர் அவர் ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தி வரும் ஒரு வெள்ளிக் கும்பாவையும், ஒரு குத்துவிளக்கையும் எடுத்துக் காட்டினார். அது கருக்காமல் அப்படியே இருந்தது.

     அப்ப..இது மட்டும் ஏன் இப்படி இருக்கு சொல்லுங்க ! என்றதற்கு..

     அது பழைய காலத்து வெள்ளி …இப்படித்தான் இருக்கும்… இப்பல்லாம் வெள்ளி இப்படி இருக்கிறதில்ல.. என்று சமாளித்தார்.

     நான் என்னையும், “கேட்டால் கிடைக்கும்’ அமைப்பைப் பற்றியும், அறிமுகப்படுத்திக்கொண்டு , பேச்சினுள் நுழைந்தேன்.

     அப்போ… இதுல எதை நான் வெள்ளின்னு சொல்றது? அதைச் சொல்லுங்க ? என்றேன்.

     ரெண்டுமே வெள்ளிதான்..  இப்பல்லாம், மக்கள் ரொம்ப பளபளன்னு இருக்கணும்னு விரும்புறதால, கொஞ்சம் கெமிக்கல் கலந்திருப்பாங்க அவ்வளவுதான் என்றார்.

     அப்போ, இது தரமான வெள்ளி இல்லைன்னு நீங்களே சொல்றீங்களா? என்றேன்.

     அப்படியில்லை.. இதோ பாருங்களேன். எங்க கடையில் இருக்கும் அத்தனை வெள்ளிப்பொருளும் அப்படியே பளபளன்னுதானே இருக்கு ? என்று கேட்டார்.

     அப்போதுதான், அந்த டிஸ்ப்ளேயில் இருக்கும் வெள்ளிப்பொருட்களை நான் நுட்பமாக கவனித்தேன். அவை அனைத்துமே ஒரு ப்ளாஸ்டிக் கவரால் லேமினேட் செய்யப்பட்டு முழுமையாக மூடி வைக்கப்பட்டிருந்தன.

     அதை அப்படியே அவரிடம் சொல்லி.. அந்த பிளாஸ்டிக் கவரெல்லாம் நீக்கிட்டு நீங்க டிஸ்ப்ளேல காமிச்சா நான் நம்புவேன். என்றேன்.

     அதற்கு..இல்லை..தூசி படிஞ்சிரும் அதான் என்று சமாளித்தார்.

சரி..உங்கள் கடையின் வெள்ளி தரமானதாகவே இருந்துட்டுப் போகட்டும். எங்களுக்கு..இப்படிக் கறுத்துப்போகும் வெள்ளிப்பொருட்கள் வேண்டாம். எங்கள் பணத்தைக் குடுத்துருங்க! என்று கேட்டேன்.

     அதுக்கு முதலாளியைத்தான் நீங்க கேட்கணும். என்றார்.

நான் வாங்கும்போது முதலாளியைக் கேட்டா என்னிடம் வித்தீங்க…? அப்படிக் கேட்கணும்னா, நீங்களே கேட்டுட்டு வாங்க என்று நான் கொஞ்சம் குரலை உயர்த்த.

     அவரே கீழிறங்கி, முதலாளியைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்துக்குப்பிறகு வந்தார்.

     உங்க பிரச்னையையும், நீங்க யாருன்னும் முதலாளிக்கிட்ட சொன்னேன். நீங்க விரும்புறதால, உங்க பணத்தைத் திரும்பக் கொடுக்கச் சொல்லிட்டாரு.. என்று சொல்லி, தொகையைக் கணக்கிட ஆரம்பித்தார்.

     நான். இதில் கணக்குப் போட என்னங்க இருக்கு? வாங்கின தொகையை அப்படியே திரும்பிக் கொடுத்திருங்க! வெள்ளியை வேணும்னா எடை போட்டுப் பாத்துக்குங்க! அதில் ஏதாவது குறைஞ்சா கழிக்கலாம் என்றேன்.

     சரி என்று சொல்லிவிட்டு, நண்பர் பெயரில் செக் போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். அதைப்பார்த்ததும் எங்களுக்கு மீண்டும் ஒரு ஷாக்! சுமார் 94703 ரூபாய்க்கான பில்லுக்கு 1 சதவீதம் வரி 947 ரூபாய் கழித்திருந்தார்கள்.

     நண்பர் சூடாகிவிட்டார்.

உங்க பொருளைப்பயன்படுத்தவே முடியலைன்னு நான் திருப்பிக் கொடுக்கிறேன். அதற்கான பில்லும் என்கிட்ட இருக்கு! அதுவும் திருப்பித்தரேன். பில்லைக் கேன்ஸல் செய்வதுதானே முறை? அப்புறம் ஏன் வரி பிடிக்கிறீங்க என்று கத்த,

     பொறுப்பாளர், எங்களை முதலாளியிடம் அழைத்துச் சென்றார்.

முதலாளி, பதட்டத்துடன் காணப்பட்டார்.

     நான் பொறுமையாக எங்கள் நியாயத்தை எடுத்துச் சொன்னேன்.

அதெல்லாம் முடியாது. உங்களுக்காகத்தான் பணமே திருப்பித்தரேன்னு ஒத்துக்கிட்டேன். கட்டின வரியை நான் திருப்பி வாங்க முடியாது. இந்த பில்லுக்கான வரியை யார் கட்டுறது? இதுல என்ன 1000 ரூபாய்க்குக் கணக்குப் பாக்குறீங்க? குடுக்குறதை வாங்கிக்கிட்டு போங்க! என்று சீறினார்.

     ஆமா..உங்க கடையை நம்பி வந்து வாங்கி, கல்யாணச்சீரா வச்சு, கருத்துப்போன வெள்ளியை வச்சுட்டீங்கன்னு சம்பந்திக்குள்ள சண்டை வந்து , குடும்பமே நாறினாலும் பரவால்ல..!! மேலும் நம்பி வந்த வாடிக்கையாளரை துச்சமா மதிச்சு மூணு வாட்டி அலைய விட்டு, வெள்ளியே இல்லாத ஒண்ணை தலையில் கட்டுவீங்க அதுவும் பரவால்ல.. ஆயிரம் ரூபாய்க்கு நாங்க கணக்குப் பாக்கக்கூடாது. ஆனால், நீங்க மட்டும் விக்காத பொருளுக்கு எங்களிடம் வாட் வசூல் பண்ணுவீங்களா? அப்படியே வாங்குற எல்லா வாட்டையும் நேர்மையா வணிகவரி அலுவலகத்தில் கட்டுறீங்களா? செக் செஞ்சுருவோமா? கேன்ஸல் பில்லைத் திருப்பிக் கொடுத்தா, அந்த வாட் கழிச்சுக்கலாம்னு சாதாரண பி.காம் பட்டதாரிக்குக் கூட தெரியும். உங்கள்ட்ட வாங்குற வரைக்கும் வாடிக்கையாளர் புத்திசாலி, உங்க தப்பை கண்டுபிடிச்சிட்டா அவன் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்படும்  பிச்சைக்காரன்..கிறுக்கனா? என்று ஒரு எகிறு எகிறினேன்.

அடுத்த நிமிடம் பழைய செக் கிழிக்கப்பட்டு, வாங்கிய அதே ரூ.94703 க்கான செக் கைக்கு வந்தது.

ஜுவல்லரி வைத்திருப்பவர்கள் எல்லாரும் பெரிய முதலாளிகள். அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று நாமாகவே நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் ஏதோ ஒரு விதத்தில் கறப்பதுதான் அவர்களது நோக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் செய்யும் அத்துனை தகிடுதத்தங்களையும் நாம் தட்டிக்கேட்காத வரைதான் அவர்களால் ஆட முடியும். கொஞ்சம் எதிர்த்துக் கேட்க ஆரம்பித்தால் போதும். எல்லாம் சரியாகி விடும்.

நம்புவோம்.


கேட்டால்… கிடைக்கும்! 
தனிப் பக்கத்தில் காண →
13 Apr 2014திறமை இடைவெளி

திறமை இடைவெளி





இந்தியாவின் அடுத்த அரசு செய்யவேண்டியது , போர்க்கால அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி ‘நீயா நானா’வில் விவாதிக்கப்பட்டது.

நான் நீண்ட நாட்களாக, பல்வேறு இடங்களில் சொல்லிவருவதை இருவேறு கோணங்களில் Badri Seshadri அவர்களும், அழகேசன் அவர்களும் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆம்..

இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய தேவை...

இந்திய இளைஞர்களின் வேலைத்திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதுதான்.

படித்தால் போதும்... எல்லா நிறுவனமும் எனக்கு வேலை தந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலிருந்து துவங்குகிறது இந்த Skill gap..

வேலை கிடைத்தால் போதும். பிறகு சிரமப்பட வேண்டியதில்லை ...எதுவும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்ற நினைப்பில் நிலை கொள்கிறது இந்த Skill gap.

இரண்டு ஆண்டு ஓட்டினால் போதும். பிறகு அடுத்துவருபவர்களை அடிமைப்படுத்தியே ஓட்டிவிடலாம். நிறுவனத்தைக் குற்றம் சொல்லி சாதித்துவிடலாம் என்ற நினைப்பில் வேர் பிடிக்கிறது இந்த Skill gap.

கிடைத்த வேலையில் , ஓட்டிக்கொண்டே ,வேறு நிறுவனத்துக்கு வலைவீசலாம். இருக்கும் நிறுவனத்தில் என்னை, யாராவது ஏதாவது சொன்னால், தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதில் துளிர்விட்டு வளர்கிறது இந்த Skill gap.

எவ்வளவுதான் சம்பளம் கிடைத்தாலும், அதற்காக நான் எவ்வளவு உழைத்தேன் என்று நினைக்காமல், CONTRIBUTION என்ற வார்த்தையை ஏதோ நன்கொடையாக, நிறுவனங்களுக்கு - அரசு நிறுவனங்களும் சேர்த்துத்தான் - செய்வதாக நினைக்கும் நினைப்பில் பிரம்மாண்டமாகிறது இந்த SKILL GAP.

உண்மையில் நியாயமாக , திறமையாக வேலை பார்க்கும் 2 பேரின் தலையில் 18 பேர் சவாரி செய்துகொண்டு, கற்றுக்கொள்ளும் கதவை மூடிவிட்டு, குறைகளும், காரணங்களும் சொல்ல வாயை மட்டும் அகலமாக திறந்துவைப்பதில் அடுத்த விதையை உற்பத்தி செய்வதில் பெருகுகிறது இந்த skill gap.

இதற்கு சமீபத்திய முன் தலைமுறைக்குக் கிடைத்த 

போய் காய்கறி வாங்கிட்டு வா, 

ரேஷன் கடையில் வரிசையில் நில்லு..
 
இ.பி பில் கட்டிட்டு வா... 

உன் துணியை நீயே துவை!

பெரியப்பா வீட்டுக்குபோய் பத்திரிகை வச்சுட்டு வா, 

எங்களால முடியாது. நீ போய் காதுகுத்து அட்டெண்ட் பண்ணிட்டு மொய் வச்சுட்டு வா! ,

பாத்த சினிமாவின் கதையைச் சொல்லு!

மொளகா மல்லி அரச்சுட்டு வா!

லைப்ரரியில் போய் புக் மாத்திட்டு வா!

பால் கறந்து வை!

இன்னிக்கு தலைப்புச்செய்தி என்ன? பேப்பரில் என்ன படிச்ச?

கோதுமையைக் காய வை!

திருவிழாவுக்கு வா! கிராமத்துக்குப் போகலாம்.

லெட்டரை ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணு!

அடி பைப்பில் தண்ணி பிடி!

விடுகதைக்கு பதில் சொல்லு!

ராத்திரி 8 மணிக்கு வந்துரு ...சேந்து சாப்பிடலாம்.

ரோட்டில் ஒழுங்கா, சிக்னலை மதிச்சு நடந்துக்க..

நீயே டிடி எடுத்து, அப்ளை பண்ணு.. அப்பா கையெழுத்து மட்டும் போடுறேன்.

போன்ற (SOCIAL EXPOSURE )சமூக வெளிப்பாடும் ....



சைக்கிள் பயணம்

பேருந்து கசகசப்பு

வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்

ஒரு கேசட், 16 பாட்டு

கபடி , 

பல்லாங்குழி,
 
தாயக்கட்டை, 

செஸ்,

ஐஸ் பாய்

மேலும் பலப்பல

வாழ்வியல் சாதாரணங்கள் கிடைக்காமல் பார்த்துக்கொண்டதுதான் நம்மை அறியாமல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் அடைந்த மிச்சம்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை..

இன்றைய பள்ளி இறுதி மாணவர்களிலிருந்து வேலைக்குச் சேரும் இளைஞர்கள் வரை இவற்றைச் சொல்லிக்கொடுத்தால் போதும். வேலைத்தகுதிக்குத் தேவையான,

Communication
Leadership
Team Skills
Creativity
Decision Making
Problem Solving
Time Management
Entrepreneurial Mind

ஆகியவை வந்துவிடும்..அப்புறம் கலக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஏனெனில் இந்திய மூளை என்றுமே மிகவும் ஆச்சர்யங்களும், ஆற்றலும் நிறைந்தது.

# வாங்க பாஸ் !! நம்ம சொல்லிக்குடுப்போம், நம்ம புள்ளைங்களுக்கு!

அடுத்து ஒன்று இருக்கிறது... விவசாயம்... அதை இன்னொரு நாள் பேசலாம். 
தனிப் பக்கத்தில் காண →
31 Mar 2014மீள்பதிவு

ஊடலே யுத்த காரணி




அலங்கோலமாய்க்கிடக்கும் வீட்டில்
இருவரும் வேலைசெல்லும் பரபரப்பில்!
அமீபாவாய் ஆரம்பித்த வார்த்தைகள்
அனகோண்டாவாக மாற...
ஆனந்துக்கும் , அகிலாவுக்கும்
ஆரம்பமானது சண்டை..!

அடிப்படைக்காரணம்.?
நேரமாகிவிட்டது இன்னும்
காலுறையைக்காணவில்லையாம்!
யாருக்கு பொறுப்பு என்று
பாப்பையா இல்லா பட்டிமன்றம்!

தடித்த வார்த்தைகளை
தவ்விப் பிடித்துக் கொண்டு
தகராறை முற்றவிட்டு
கணவனும் மனைவியும்
கால்சென்ட்டர் கிளம்புகிறார்கள் !

நிறுவனத்தில் நுழைந்து
தன் இருக்கைவந்து
' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு
அழைப்புக்காய் காத்திருக்கிறான்.!

'என்னமாய் பேசிவிட்டாள் !'
துடிக்கிறது உதடுகள்..
முதல் அழைப்பு வந்ததுமே
பதில்சொல்ல விழையும் முன்'
கேட்பவனின் கேள்வியில்
கடுகளவு கோபம்!
'உன் நிறுவன மடிக்கணிணியில்
இப்படி ஒரு பிரச்சனை!'
என்னவென்று விளக்கவேண்டிய
இவன் பதிலும் இனிமையில்லை.!

இவன் பொறுமையெல்லாம்
எப்போதோ போய்விட்டது!
அதை எடுத்து மடித்துக்கொண்டு
அவள் காலை சென்றுவிட்டாள்

இது தெரியா எதிராளி
எதிர்க்கேள்வி கேட்டுவைக்க
எரிந்து விழுந்து முழங்குகிறான்..
"என்னய்யா ஆட்கள் நீங்கள்?
இது கூடத்தெரியாமல்?
என் உயிரை வாங்குகிறீர்?"

பேச்சுவார்த்தை தடிக்கிறது.
அவன் பேச
இவன் பேச
ஆத்திரம் அதிகம் பேச
மொத்ததில் அவ்வழைப்பு
மூர்க்கமாய் முடிகிறது !

முடிந்த அழைப்புக்குப்பின்
முகம்தாங்கி சிந்தித்து
எவனோ ஒருவன்
இன்றுவந்து
என் வாயில் சிக்கினானே
என்னவெல்லாம் பேசிவிட்டேன்
என்று எண்ணி மாய்ந்து போனான்!

அது...
வேறொரு நாடு!
அதிபர் மாளிகையின் அவசரக்கூட்டம்!
இராணுவத்தளபதி
அவர்தன் செயலரை
அச் செய்தி தயாரா?
என்று அவசரமாய் கேட்டுவைக்க
'அய்யா ! அத்தகவலெல்லாம்
இந்த மடிக்கணிணியில் போட்டு
மறக்காமல் எடுத்து வைத்தேன்'!

அந்தக் கணிணியிலே
ஏதோ கோளாறு!
கோளாறு சரிசெய்யும்
நிறுவனத்தை தொடர்பு கொண்டால்
மரியாதை இல்லாமல்
ஒரு மனிதன் பேசுகிறான்..!"
என்று கூறி வருந்தி நிற்க,

'அதுவெல்லாம் தெரியாது.
எனக்குடனே சரியாகி
கூட்டத்தில் காட்டவேண்டும்.!
அதிபர் முன்னிலையில்
என் கவுரவம் சரிந்துவிடும்.
ஏதாவது செய்து
சரியாகக் கொணருங்கள்!
என்றந்தத் தளபதியும்
எடுத்தெரிந்து பேசிவிட..

நிறுவனத்தை தொடர்புகொள்ள
நேரமில்லை செயலருக்கு,
அலுவலகத்தில் வேலைபார்க்கும்
ஆண்டனியைக்கூப்பிட்டு
காகிதத்தின் குறிப்புகளை
அவசரப்படியெடுத்து
அனுப்பிவிட்டார்
தளபதிக்கு!

தவறான தகவலென்றே
தெரியாமல் தளபதியும்
அதிபரிடம் எடுத்துவைக்க..!
அவர் தந்த விபரப்படி
அயல்நாட்டின் மீது
அபாண்டம் ஏறிநிற்க

அதிபரும்;
"எடுக்கிறேன் பார் நடவடிக்கை !"
என்றுலகில் சீறிவைக்க

தொடங்கியது யுத்தம்!
யுத்ததில் பல நாடும்
தன்படையை அனுப்பிவைக்க,
உலகமே இருதரப்பாய்
உடைந்து நிற்கிறது.

போர்க்களம் கண்ட நாட்டில்
சீறிப்பாயும் குண்டுகளை
சி என் என் காட்டும்போது

அத்தனை செய்திகளையும்
அகிலாவின்
அரவணைப்பில்
தொலைக்காட்சியில்
இரசிப்பது....

நமது  

ஆனந்த்.!!!!      
தனிப் பக்கத்தில் காண →
26 Feb 2014அனுபவம்

ஆட்டோ மீட்டர் - கேட்டால் கிடைக்கும்






குற்றாலத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்து, சென்னை வடபழனியில் இறங்கும்போது காலை 6:20 ஆகியிருந்தது.

     கதவு திறந்தவுடன் வரவேற்கக் காத்திருந்தவர்கள்போல், ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் மொய்த்தது. இறங்கி,

விருகம்பாக்கம் போகணும். ஆனா மீட்டர் போட்டாத்தான் வருவேன்

என்று நான் சொல்லி , நாக்கை மடித்து உள்ளே வைப்பதற்குள் கூட்டம் காலி…!! என்னை விட்டுவிட்டு அடுத்த பயணியைத் தேடிச் சென்றுவிட்டார்கள்.

நான் விடவில்லை. அந்த வரிசையில் இருந்த சுமார் 15 ஆட்டோக்களிலும் வரிசையாகக் கேட்டேன். அனைவரது பதில்களும் இப்படி இருந்தன..

100 ரூபா ஆகும் சார்!

டேய்! சாருக்கு மீட்டர் போடணுமாம்.

வராது சார்!

என் மீட்டர் ரிப்பேர்.

சார் மீட்டர் போட்டாத்தான் வருவாராம்..நீ போறியா?

இப்போ இன்னாத்துக்கு சார் மீட்டரு 60 ரூவா வரும். 10 ரூபா சேத்து 75(!) ஆ குடுத்துருங்க!

மீட்டரெல்லாம் சும்மா சார்… அதெல்லாம் கட்டுப்படியாவாது.

பேப்பர்ல படிச்சுட்டு வராதீங்க சார்! சென்னைல எங்கயும் மீட்டர் போடுறதில்லை.

மீட்டர் போடுறேன். ஆனா, 80 ரூவா தரியா?

பக்கத்து ஏரியாக்கெல்லாம் மீட்டர் போடமுடியாது சார்!

கம்ப்ளெயிண்ட் செய்யலாமா என்று கேட்டதற்கும்.. பண்ணிக்க சார்! என்று அடாவடியாக ஒருவர் லந்தடித்தார்.

     வடபழனி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பி நடந்தால், அங்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும். 10 ரூபாய்க்கு சென்று சேர்ந்துவிடலாம். ஆனால், என்னால் அப்படிச் செல்ல முடியவில்லை. நேராக வடபழனி காவல் நிலையம் சென்றேன். வாசலிலேயே ஒரு பேட்ரல் வண்டியில் ஒரு போக்குவரத்துக் காவலரும், சார்ஜெண்ட்டும் இருந்தார்கள். அவர்களிடம் சென்று விபரம் சொன்னேன்.

     உடனே இறங்கினார்கள். சார்ஜெண்ட் என்னிடம் வந்தார்.

“சார்.. நீங்க மறுபடியும் போய் மீட்டர் போடச்சொல்லுங்க…மாட்டேன்னு சொன்னான்னா , சரின்னு ஒத்துக்கிட்டு ஆட்டோவில் ஏறி இந்தப்பக்கம் வாங்க பிடிச்சுக்கிறேன். என்றார்.

அந்த வரிசையில் இருக்கும் எல்லா ஆட்டோவும் இதே தப்பைத்தான் செய்யுறாங்க … கேள்வியே வேண்டாம் எல்லாரையுமே பிடிக்கலாம் என்றேன்.

இருந்தாலும், நீங்க கையும் களவுமா பிடிச்சாத்தான் சார் நாங்க கேஸ் போடமுடியும் என்றார். சரி என்று ஒத்துக்கொண்டு, நானும், மீண்டும் அந்தச் சாலையில் நடந்தேன்.

ஏற்கனவே என்னிடம் தெனாவெட்டாக பதில் சொன்ன ஒரு டிரைவரிடம் சென்று, மீட்டர் போட்டு, விருகம்பாக்கத்துக்கு வரீங்களா என்றேன்.
அதற்கு..அந்த இளைஞன்.

இன்னா சார்.. யாருமே மீட்டர் போடலையா? அதான் சொன்னேன்ல.. சரி 100ரூபா குடுங்க.. மீட்டரெல்லாம் ஓடாது . என் மீட்டர் ரிப்பேர் என்றான்.

நான் அவன் கையைப் பிடித்துக்கொண்டேன். சார்ஜெண்ட் கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டிருந்தார்.

ஸார்…………..வாங்க! என்று கத்தினேன்.

அவர் அருகில் வரவும், மீட்டர் ரிப்பேராம். ரிப்பேரான மீட்டருடன் வண்டியை ஓட்டிக்கிட்டிருக்கார் . பாருங்க ! என்றேன்.

அதை அந்த இளைஞன் எதிர்பார்க்கவில்லை.

சார்ஜெண்ட்டும் விரைந்து வந்து, கூடவே வந்த காவலரிடம்..
இவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப்போங்க என்று சொல்லி, அவனிடமிருந்து ஆட்டோ சாவியை வாங்கினார்.

அதற்குள் ஆறேழு ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிவிட்டனர்.

சார்ஜெண்ட் சொன்னார்.

என்னய்யா.. ஒருத்தனும் மீட்டர் போட்டு ஓட்டமாட்டேங்கிறீங்களாம்..!! சார் வந்து கம்ப்ளெய்ண்ட் பண்றாரு!

என்கிட்ட கேக்கலையே சார்! நான் மீட்டர் போட்டு ஓட்டுவேனே என்று கூசாமல் பொய் சொன்னார் ஒருவர்.

நான் பிடித்துக்கொண்டேன்.
அப்படியா…? உடனே வாங்க ..மீட்டர் போடுங்க..விருகம்பாக்கம் போகணும். என்று சொல்லிக்கொண்டே அவரது ஆட்டோவில் எனது லக்கேஜை வைத்தேன்.

ஆனால், ஆட்டோவில் ஏறுவதற்கு முன்.. அங்கு வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒரு தம்பதி மற்றும் சிலரிடம் சத்தமாகச் சொன்னேன்.

இங்க உள்ள ஆட்டோ எல்லாருமே நல்லவங்க…மீட்டர் போட்டுத்தான் ஓட்டுவாங்க.. எல்லாரும் ஏறிக்கிங்க…பேரமே பேசவேண்டாம்.என்று சொல்லி மூன்றுபேரை ஏற்றிவிட்டேன்.

சார்ஜெண்ட்டை நோக்கி மற்ற ஆட்டோக்காரர்கள் வந்தார்கள். அவர் அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தார். “ஏண்டா இப்படி பப்ளிக்கிட்ட அநியாயம் பண்றீங்க?”

நான், லக்கேஜை வைத்த ஆட்டோவில் ஏறி, ஆட்டோவை எடுக்கச் சொன்னேன்.

ஆட்டோ 20 அடி நகர்ந்திருக்கும். போக்குவரத்துக் காவலர்.. நான் முதலில் பிடித்துக்கொடுத்த இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“காலங்காத்தால மீட்டர் போடலைன்னு வந்து எங்க உயிரை எடுக்குறான்” என்றார்.

உடனே ஆட்டோவிலிருந்து இறங்கி.. அவரை நோக்கிச் சென்றேன்.

யாரு சார் உங்க உயிரை எடுத்தது? போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலேயே இருந்துக்கிட்டு தைரியமா மீட்டர் போடாம அடாவடி பண்றாங்கன்னா நீங்கதான் பப்ளிக் உயிரை எடுக்கிறீங்க..  இந்த அநியாயத்துக்கு நீங்கதான் காரணம்.. உங்களை வந்து பாத்த எனக்கு..உங்க உயரதிகாரியப் பாக்க எவ்வளவு நேரமாகும்? போய்ப் பாக்கவா? தட்டிக்கேக்க நேரம் ஒதுக்காத ஆள் நான் கிடையாது. இப்போ நீங்களும் சேந்து மாட்டுறீங்க! என்றேன். கடைசியாக என் ஊடக அடையாளத்தையும் சொன்னேன்.

அதிர்ந்தார்..

“சார் அதான் எங்கயோ பாத்தமாதிரி இருக்கேன்னு நினைச்சேன் என்று வழிந்துவிட்டு.....சார்! நான் உங்களைச் சொல்லலை .. டிரைவரைத்தான் சொன்னேன். பிரச்னையை பெருசு பண்ணாதீங்க சார்! என்று சொல்லி நான் ஏறிய ஆட்டோ டிரைவரிடம்..


சாரை பத்திரமா விட்டுட்டு வாய்யா ! என்று சொல்லி என்னை அனுப்ப யத்தனித்தார்.

இந்த ஸ்டாண்டில் யார் வந்து இறங்கினாலும், ஆட்டோவில் மீட்டர் போட வைங்க சார்! அப்போதான் கவர்மெண்ட்டுல வாங்குற சம்பளம் ஒட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அதுவரை இறங்கிய பயணிகளாகட்டும்.. அந்தப்பக்கம் ஆட்டோவில் பேரம்பேசி ஏறிக்கொண்டிருந்தவர்களாகட்டும்.. ஒருவராவது கவனிக்கவேண்டுமே… ம்ஹூம்..


தட்டிக் கேட்காதவரை எந்த டேஷையும் யாராலும் சரிசெய்யமுடியாது என்பதை உணர்ந்த பிறகு…இந்தியாவை புரட்டுவது பற்றிப் பேசலாம்.



தனிப் பக்கத்தில் காண →